TA/Prabhupada 0182 - உங்களை அந்தத் தூய நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்



Lecture on SB 2.3.15 -- Los Angeles, June 1, 1972

கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதால் ஏற்படும் ஒரு நற்பலன் என்னவென்றால், வெறும் கேட்பதாலேயே அவன் படிப்படியாக பாவமற்றவன் ஆகிவிடுகிறான். நாம் பாவிகளாக இருந்தால் ஒழிய, இந்த ஜட உலகிற்கு வரமாட்டோம். நாம் மீண்டும் நம்முடைய நிரந்தர இருப்பிடமான கடவுளின் திருநாட்டிற்கு செல்வதற்கு பாவமற்றவராக ஆக வேண்டும். ஏனென்றால் இறைவனின் ராஜ்ஜியம் தூய்மையானது...இறைவன் தூய்மையானவர். தூய்மையற்ற எந்த ஒரு ஜீவனும் அங்கு நுழைய முடியாது. ஆக, ஒருவர் புனிதமான நிலையை அடைய வேண்டும். இது பகவத்-கீதையிலும் சொல்லப்பட்டிருக்கிறது. யேஷாம் அந்த-கதம் பாபம். “எவன் ஒருவன் தன் வாழ்வின் அனைத்து பாவ வினைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு இருக்கிறானோ”, யேஷாம் த்வ அந்த-கதம் பாபம் ஜனனம் புண்ய-கர்மணாம், “மேலும் எந்த ஒரு பாவச் செயலும் இல்லாமல், எப்பொழுதும் தர்மத்தை கடைபிடிக்கின்றானோ..." இந்தக் கிருஷ்ண பக்தி இயக்கத்தில், ஒருவருக்கு தன் அனைத்து பாவச் செயல்களையும் போக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது: மேலும் தகாத உடலுறவு கொள்வது, மயக்கப் பொருட்கள் பழக்கம், அசைவம் உண்பது, சூதாட்டம், இத்தகைய பாவச் செயல்களிலிருந்து ஒருவரை பாதுகாக்கிறது. இந்தக் கட்டுப்பாடுகளை நாம் பின்பற்றினால், தீட்சைக்குப் பிறகு எல்லா பாவங்களும் நாசம் ஆகின்றன. பிறகு நான் என்னை அந்த சுத்தகரிக்கப்பட்ட நிலையிலேயே வைத்துக் கொண்டால், மறுபடியும் நான் ஒரு பாவியாகும் பேச்சுக்கு எங்கே இடம்? ஆனால் குளித்து சுத்தமான பிறகு மீண்டும் மண்ணை எடுத்து உடம்பில் பூசிக் கொண்டால் - இந்தச் செயல்முறை உதவாது. நான் சுத்தம் செய்து கொள்வேன், பிறகு மீண்டும் மண்ணை பூசிக் கொள்வேன்,” என்றால் அந்தக் குளியலுக்கு என்ன பயன்? சுத்தம் செய்து கொள்ளுங்கள், சுத்தம் செய்த பின், அதே தூய்மையான நிலையிலேயே உங்களை வைத்துக் கொள்ளுங்கள். இது அவசியம். ஆக நீங்கள் தொடர்ந்து கிருஷ்ணரைப் பற்றி கேட்டு, அவர் தொடர்பில் இருந்து வந்தால் அது சாத்தியம் ஆகும். அவ்வளவு தான். நீங்கள் எப்போதும் களங்கம் அடையாமல் இருக்க வேண்டும். அது தான் புண்ய-ஷ்ரவண-கீர்த்தனஹ. கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பது தான் புண்ணியம், நீங்கள் என்றுமே தர்மத்தில் நிலை பெற்றிருப்பீர்கள். புண்ய-ஷ்ரவண-கீர்த்தனஹ. நீங்கள் நாம ஜபம் செய்யலாம் அல்லது... எனவே தான் எப்பொழுதும் 'ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே' என்று ஜபம் செய்வதை நாங்கள் பரிந்துரைக்கிறோம். நாம் மீண்டும் பாவச் செயல்களில் தவறி விழாமல் கவனமாக இருக்க வேண்டும். அனைவரும் கவனமாக இருந்து, தம்மை திருநாம ஜெபத்தில் ஈடுபடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒருவன் பாதுகாப்பாக இருப்பான். ஆக ஷ்ருண்வதாம் ஸ்வ-கதாஹா க்ருஷ்ணஹ புண்ய-ஷ்ரவண-கீர்த்தனஹ (ஸ்ரீமத் பாகவதம் 1.2.17). நீங்கள் கிருஷ்ணரைப் பற்றித் தொடர்ந்து கேட்டு வந்தால், படிப்படியாக, அசுத்தங்கள் அனைத்தும் நீங்கி, உள்ளம் சுத்தப்படுத்தப்படும். அசுத்தங்கள் என்பவை,“நான் என்றால் இந்த ஜட உடல்; நான் ஒரு அமெரிக்கன்; நான் இந்தியன்; நான் ஹிந்து; நான் இஸ்லாமியன்; நான் இது; நான் அது.” இது போன்ற எண்ணங்களே. இவை ஆன்மாவை உள்ளடக்கும் வெவ்வேறு மறைப்புகள் மட்டுமே. மறைக்கப்படாத ஆன்மா, “நான் என்றென்றும் இறைவனின் சேவகன்” என்ற முழு உணர்வினால் ஆனது. அவ்வளவு தான். ஒருவனுக்கு வேறு எந்த அடையாளமும் இருப்பதில்லை. இது தான் முக்தி என்று அழைக்கப்படுகிறது. ஒருவனுக்கு, “நான் இறைவனின், கிருஷ்ணரின் நித்தியமான சேவகன். அவருக்கு தொண்டு செய்வதே என் வேலை,” என்ற இந்த புரிதல் வரும்போது, அது தான் முக்தி என்றழைக்கப்படுகிறது. முக்தி என்றால் உங்களுக்குக் கூடுதலாக இன்னும் இரண்டு கைகள், இன்னும் இரண்டு கால்கள் முளைத்துவிடும் என்று அர்த்தம் இல்லை. அது இல்லை. ஏற்கனவே இருப்பதுதான் சுத்தப்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு ஒரு மனிதன் காய்ச்சலில் அவதிப் படுகிறான். பல அறிகுறிகள் இருக்கும், ஆனால் காய்ச்சல் விட்டவுடன், எல்லா அறிகுறிகளும் மறைந்துவிடும். ஆக, இந்த பௌதிக உலகில், காய்ச்சல் என்பது, புலன் இன்பம் பெறும் ஆசை தான். புலன் இன்பம். இது தான் காய்ச்சல். ஆக, நாம் கிருஷ்ண பக்தியில் ஈடுபடும் போது, இந்த புலனுகர்ச்சி என்னும் விவகாரம் நின்றுவிடுகிறது. அது தான் வித்தியாசம். நீங்கள் கிருஷ்ண பக்தியில் முன்னேறுகிறீர்களா என்பதற்கு இது தான் ஒரு சோதனை.