TA/Prabhupada 0238 - பகவான் நல்லவர், கடவுள் எல்லா வகையிலும் நல்லவர்

The printable version is no longer supported and may have rendering errors. Please update your browser bookmarks and please use the default browser print function instead.


Lecture on BG 2.3 -- London, August 4, 1973

ஆக அதஹ ஸ்ரீ-க்ருஷ்ண-நாமாதி ந பவேத் க்ராஹ்யம் இந்திரியைஹி (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 17.136). ஆக கிருஷ்ணரின் இந்த நடத்தையை சராசரி மனிதர்களால் எப்படி புரிந்து கொள்ள முடியும் ? சாதாரண உணர்வுகளை கொண்டதால் அவர்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள். கிருஷ்ணர் ஏன்? கிருஷ்ணரின் பக்தர்களையும் கூட, வைணவர்களையும் தவறாக புரிந்து கொள்கிறார்கள். அதுவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வைஷ்ணவேர க்ரியா முத்ரா விஞேஹ ந புஜய (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 17.136). ஒரு வைணவ ஆச்சாரியார் கூட, அவர் ஏன் ஒரு விஷயத்தை செய்கிறார் என்பதை, மிகப்பெரிய அறிவாளியாலும் புரிந்துகொள்ள முடியாது. ஆகவே பக்குவ நிலையில் உள்ள உயர்ந்த பக்தர்களை, அதிகாரிகளை குருட்டாம்போக்கில் நகல் செய்ய முயலக்கூடாது. ஆனால் அவர்கள் இட்ட கட்டளைகளை, நமக்கு வழங்கிய கற்பித்தலை பின்பற்ற வேண்டும். மற்றபடி அது சாத்தியமில்லை. கிருஷ்ணர் அர்ஜுனரை சண்டையிடுமாறு உற்சாகப்படுத்துகிறார். அதற்காக நாமும் அப்படி உற்சாகப்படுத்த வேண்டும் என்று அர்த்தம் அல்ல. அது தீய செயல். கிருஷ்ணருக்கு அது தீய செயல் அல்ல. அவர் எது செய்தாலும் சரி... கடவுள் என்பவர் நல்லவர் தான். கடவுள் எல்லா வகையிலும் நல்லவர் தான். நாம் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர் எது செய்தாலும் அது நன்மைக்கே. இது ஒரு பக்கம். உயர்நிலையில் உள்ள அதிகாரிகளின் உத்தரவு இல்லாமல் நான் எதை செய்தாலும் அது தவறு தான். அவருக்கு யாருடைய ஆணையும் தேவையில்லை. ஈஷ்வரஹ பரமஹ் க்ருஷ்ணஹ (ப்ரஹ்ம ஸம்ஹிதா 5.1). அவரே அனைத்தையும் ஆள்பவர். யாருடைய அறிவுறுத்தலும் அவருக்கு தேவையில்லை. அவர் எதை செய்தாலும் அது மங்களகரமாக தான் இருக்கும் . இப்படித்தான் கிருஷ்ணரை புரிந்துகொள்ள வேண்டும். தனக்கு தோன்றியது போல் கிருஷ்ணரை புரிந்துகொள்ள முயலக்கூடாது. கிருஷ்ணர் உங்களுடைய கணிப்புக்கோ, தேர்வுக்கோ உட்பட்டவர் அல்ல. அவர் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர். அவர் எல்லாம் கடந்தவர். எனவே எல்லாம் கடந்த அந்த தெய்வீகமான சிந்தனை இல்லாதவர்கள் கிருஷ்ணரை தவறாக புரிந்துகொள்கிறார்கள். இங்கே அவர் நேரடியாகவே தூண்டுகிறார், க்லைப்யம் மா ஸ்ம கமஹ பார்த நைதத் த்வயி உபபத்யதே க்ஷூத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப (பகவத் கீதை 2.3). பரந்தப. இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது, அதாவது " நீ ஒரு க்ஷத்ரியன். நீ ஒரு அரசன். தீமைக்கு ஊக்கம் ஊட்டுபவர்களை தண்டிப்பதே உன் கடமை. அது தான் உன் கடமை. தீயவர்களை நீ மன்னிக்கக்கூடாது." அந்த காலத்தில் அரசர்கள் அவ்வளவு... அரசரே தீர விசாரித்து நீதி வழங்குவார். குற்றவாளி மன்னர் முன்பு நிறுத்தப்படுவான், மன்னர் சரியென்று நினைத்தால், வாளை எடுத்து அவன் தலையை வெட்டிவிடுவார். அது மன்னரின் கடமையாக இருந்தது. நூறு வருடங்களுக்கு முன்பு கூட, காஷ்மீரில் ஒரு திருடன் பிடிபட்டவுடன், மன்னரிடம் அழைத்துச் செல்லப்படுவான். அவன் தான் திருடன் என்று நிரூபிக்கப்பட்டால், அவன் கையை மன்னரே வெட்டி விடுவார். நூறு வருடங்களுக்கு முன்பு கூட இதுதான் முறையாக இருந்தது. ஆக மற்ற திருடர்களுக்கு அது ஒரு எச்சரிக்கையாக இருந்தது, "இது தான் உன் தண்டனை." ஆக அப்போது காஷ்மீரில் , திருட்டு இல்லை, திருடர்கள் இல்லை. தெருவில் யாராவது தனக்குச் சொந்தமானதை எதையாவது தவறவிட்டிருந்தால், அது அப்படியே கிடக்கும். ஒருவரும் அதை தொடமாட்டார்கள். அரசரின் உத்தரவு என்னவென்றால், "தெருவில் யாரும் கவனிக்காத பொருள் ஏதாவது கிடந்தால், அதை உங்களால் தொட முடியாது." யார் அதை தவறவிட்டாரோ, அவரே பின்பு வந்து அதை எடுத்துக்கொள்வார். நீங்கள் அதை எடுக்க கூடாது." நூறு வருடங்களுக்கு முன்பு கூட இப்படி இருந்தது. ஆக இப்படிப்பட்ட கடுமையான தண்டனை தேவை. இப்போதெல்லாம், மரண தண்டனை எல்லாம் விதிக்கப்படுவதில்லை. கொலைகாரர்களை தூக்கில் இடுவதில்லை. இது தவறு, எல்லாம் அயோக்கியத்தனம். கொலைகாரன் கொல்லப்படவேண்டும். எந்த தயவும் காட்டக்கூடாது. மனிதனை கொன்றவன் மட்டும் அல்ல, விலங்குகளை கொல்பவனுக்கும் உடனடியாக தூக்கு தண்டனை வழங்கப்படவேண்டும். அது தான் அரசாட்சி. அரசர் மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.