TA/Prabhupada 0246 - ஒருவர் கிருஷ்ணரின் பக்தர் ஆகி விட்டால், அனைத்து நற்குணங்களும் அவரது உடலில் வெளிப்படு



Lecture on BG 2.9 -- London, August 15, 1973

இந்த பௌதிக உலகில், அன்பு, சமுதாயம், நட்பு, காதல் எல்லாம் பெயரளவில் தான், எல்லாவற்றிற்கும் அடிப்படை புலனுகர்ச்சி தான். மைதுனாதி, பாலின்பத்திலிருந்து தொடங்குகிறது. யன் மைதுனாதி க்ருஹமேதி-ஸுகம் ஹி துச்சம். ஆக எப்பொழுது ஒருவன் இந்த மைதுனாதி-ஸுகம், என்ற சிந்தனையிலிருந்து விடுபடுகிறானோ, அவனே முக்தி பெற்றவன் ஆகிறான், ஸ்வாமி, கோஸ்வாமி. ஆக ஒருவன் இந்த மைதுனாதி, அதாவது பாலின்ப உத்வேகத்தால் ஈர்க்கப்பட்டிருக்கும்வரை, அவன் ஸ்வாமியும் இல்லை கோஸ்வாமியும் இல்லை. ஒருவன் தன் புலன்களின் அதிபதியாக இருந்தால் தான் அவன் ஸ்வாமி ஆகிறான். புலன்களின் அதிபதி கிருஷ்ணர். ஆக ஒருவன் கிருஷ்ண உணர்வுடையவன் ஆகும்போது, அவன் தன் புலன்களின் அதிபதி ஆகிறான். புலன்களை முற்றிலும் அடக்கி கட்டிப்போட தேவை இல்லை. இல்லை, அதை ஒழுங்குபடுத்த வேண்டும். "எனக்குத் தேவைப்படும் போது, நான் அதைப் பயன்படுத்திக் கொள்வேன்; மற்ற நேரத்தில் சாந்தமாக இருக்கவேண்டும்." புலன்களின் அதிபதி என்றால் அதுதான். "நான் புலன்களால் தூண்டப்பட்டு செயல்பட மாட்டேன். புலன்கள் தான் என் ஆணைக்குப் பணிந்து நடக்க வேண்டும்." அது தான் ஸ்வாமி. எனவே அர்ஜுனருக்கு குடாகேஷன் எனப் பெயர். அவர் ஸ்வாமி... அவரும்... அவருக்கு எப்போது தேவையோ. அவர் ஒன்றும் கோழை இல்லை, ஆனால் அவர் பக்தர் என்பதால் கருணைமிகுந்தவராக இருக்கிறார். அவர் கிருஷ்ணரின் பக்தர் என்பதால்... ஒருவன் கிருஷ்ணரின் பக்தன் ஆகி விட்டால், அனைத்து நற்குணங்களும் அவனிடம் தோன்றும். யஸ்யாதி பக்திர் பகவதி அகிஞ்சன ஸர்வைர் குணைஸ் தத்ர ஸமாஸதே ஸுரஹ (ஸ்ரீமத் பாகவதம் 5.18.12). அனைத்து தெய்வீக குணங்களும் தோன்றும். எனவே அர்ஜுனர், அவரும்... அவரும் அதே உன்னதமான நிலையில் இல்லாதபட்சத்தில், கிருஷ்ணருக்கு நெருங்கிய நண்பராக எப்படி இருந்திருக்க முடியும்? இரு நண்பர்களும் சம நிலையில் இருக்கும்போது தான் அந்த நட்பு மிகவும் உறுதியானதாக இருக்கும்: அதே வயது, ஒரே கல்வி, ஒரே செல்வாக்கு, அதே அழகு, எல்லாம் ஒத்துப்போக வேண்டும். இருவர் நிலையில் எவ்வளவு அதிகம் ஒற்றுமை இருக்கிறதோ அதே அளவு வலுவானதாக அவர்கள் இடையே நட்பும் இருக்கும். ஆக அர்ஜுனரும் கிருஷ்ணருக்கு சமநிலையில் தான் இருந்தார். ஒருவன் ஜனாதிபதியின் நண்பனாகவோ, ராஜாவின் அல்லது ராணியின் நண்பனாகவோ இருப்பதைப் போல தான். ஆக அப்படிப்பட்டவன் சாதாரண மனிதனாக இருக்க முடியாது. அவன் சமமானவனாகத் தான் இருக்க வேண்டும். கோஸ்வாமிகளைப் போலவேதான். கோஸ்வாமிகள், தங்கள் குடும்ப வாழ்க்கையை விட்ட போது... ஸ்ரீனிவாச ஆச்சாரியார் வர்ணிக்கிறார், த்யக்த்வா தூர்ணம் அஷேஷ-மண்டல-பதி-ஷ்ரேணிம் ஸதா துச்சவத். மண்டல-பதி, அதாவது பெரிய, பெரிய தலைவர்கள், மண்டல-பதி. பெரிய, பெரிய தலைவர்கள், ஜமீன்தார்கள், பெரிய, பெரிய, பெரிய மனிதர்கள். அவர் அமைச்சராக இருந்தார். ஒரு பெரிய மனிதராக இல்லாவிட்டால் எப்படி அவருடைய நண்பராக இருக்க முடியும்? எனவேதான் ரூப கோஸ்வாமியும் தனது பௌதிக சகவாசத்தை கைவிட்டார். ரூப கோஸ்வாமியும் சனாதன கோஸ்வாமியும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவுடன் அறிமுகம் ஆனவுடனேயே, "நாம் இந்த மந்திரி பதவியிலிருந்து ஓய்வு பெற்று, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிடம் சரணடைந்து அவருக்கு உதவி புரிவோம்," என முடிவு செய்தார்கள். அவருக்குப் பணிவிடை செய்வோம் என்று நினைத்தார்கள், அவருக்கு உதவி செய்வோம் என்று அவர்கள் எண்ணவில்லை. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிற்கு யாருடைய உதவியும் தேவையில்லை. ஆனால் நாம் அவருடன் தொடர்பு கொண்டு, அவருக்கு சேவை செய்ய முயற்சி செய்தால், நம் வாழ்க்கை பக்குவம் அடையும். கிருஷ்ணரும் அதைத்தான் கூறுகிறார் ... கிருஷ்ணர் பகவத் கீதையை போதிக்க வந்தார். ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் (பகவத் கீதை 18.66). அதுதான் அவர் வந்த நோக்கம், அதாவது, "இந்த அயோக்கியர்கள் பல விஷயங்களுக்கு அடிமைகளாகிவிட்டனர்: சமூகம், நட்பு, காதல், மதம், நாட்டுப்பற்று, சாதி, இது, அது என பல விஷயங்கள். இந்த அயோக்கியர்கள் இந்த எல்லா முட்டாள்தனமான விஷயங்களையும் நிறுத்தி ஆகவேண்டும்." ஸர்வ தர்மான் பரித்யஜ்ய: " இந்த எல்லா முட்டாள்தனங்களையும் விட்டுவிடுங்கள். என்னிடம் வந்து சரணடைந்தால் மட்டுமே போதும்.” இது தான் தர்மம். இல்லாவிட்டால், கிருஷ்ணர் ஸர்வ தர்மான் பரித்யஜ்ய, (பகவத் கீதை 18.66) அதாவது "நீங்கள் எல்லா சமய முறைகளையும் கைவிடுங்கள்," என்று எப்படி அறிவுறுத்துகிறார்? அவர் வந்ததோ - தர்ம-ஸம்ஸ்தாபநார்த்தாய - என்ற நோக்கத்துடன் தானே. அவர் தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிலைநாட்ட வந்தார். இப்போது அவர், ஸர்வ தர்மான் பரித்யஜ்ய: “அனைத்தையும் விட்டுவிடுங்கள்,” என்று கூறுகிறார். அப்படியென்றால், கிருஷ்ண பக்தி இல்லாமல், கடவுள் பக்தி இல்லாமல், அவை அனைத்தும் ஏமாற்றும் சமய முறைகளே. அவை மதங்கள் அல்ல. மதம் என்றால், தர்மம் து சாக்ஷாத் பகவத்-ப்ரணீதம், முழுமுதற் கடவுளின் கட்டளை. அந்த முழுமுதற் கடவுள் யார் என்பதே நமக்குத் தெரியாத பட்சத்தில், அந்த முழுமுதற் கடவுளின் கட்டளை என்னவென்றே நமக்குத் தெரியாத பட்சத்தில், அது எப்படிப்பட்ட மதம்? அது மதம் அல்ல. மதம் என்கிற பெயரில் அது ஒருவேளை பிரபலமாக இருக்கலாம், ஆனால் அது வெறும் ஏமாற்று வேலை தான்.