TA/Prabhupada 0288 - பகவானைப் பற்றி பேசும் போது, பகவானுக்கு என்ன வரைவிளக்கம் என்று உங்களுக்குத் தெரியுமா



Lecture -- Seattle, September 30, 1968

விருந்தினர்: ஒருவேளை இதற்கு நீங்கள் பதில் அளித்திருப்பிர்கள். எனக்கு நிச்சயமாக தெரியாது. நான் கேட்கவில்லை. ஆனால் நான் குழந்தையாக இருந்ததிலிருந்தே, எப்போதும் இறைவனை நேசிக்க வேண்டும், அப்போது என்னால் அனைத்தையும் நேசிக்க முடியும், என்று எனக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. அந்த கடவுள் கிருஷ்ணர் தானா? பிரபுபாதர்: ஆம். உங்களுக்கு வேறு கடவுள் யாரையாவது தெரியுமா? கிருஷ்ணரை தவிர வேறு யாராவது கடவுள் இருக்கிறாரா? விருந்தினர்: என்ன கேட்டீர்கள்? ஓ இல்லை, இல்லை... பிரபுபாதர்: கடவுள் என்றால் என்னவென்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். விருந்தினர்: கிருஷ்ணர் தான் கடவுள் என்பது எனக்கு தெரிந்திருக்கவில்லை. பிரபுபாதர்: இல்லை, அனைத்திற்கும் வரைவிளக்கம் உள்ளது. உதாரணத்திற்கு, "இது ஒரு கடிகாரம்." என்று நான் கூறினால் அதற்கு ஒரு வரைவிளக்கம் இருக்கிறது. கடிகாரம் என்றால் அது வட்டமானது, மேலும் ஒரு வெள்ளை வட்ட முகப்பும், இரண்டு முள்களும் உள்ளன. நேரத்தை காட்ட பல எண்களும் இருக்கின்றன. அவ்வாறாக, என்னால் அதை உங்களுக்கு வர்ணிக்க முடியும். ஆக ஏதுவாக இருந்தாலும் சரி, நீங்கள் பார்ப்பது, உணர்வது, அல்லது புரிந்துகொள்ள முயல்வது எதுவாக இருந்தாலும், நிச்சயமாக அதற்கு ஒரு பொருள் விளக்கம் இருக்கும். ஆக கடவுளைப் பற்றி பேசும் போது, கடவுள் என்ற வார்த்தைக்கு என்ன சொற்பொருள் விளக்கம் என்று உங்களுக்குத் தெரியுமா? விருந்தினர்: ஆம். அவர் அன்பின் வடிவம் என்று நான் நினைத்தேன். பிரபுபாதர்: அன்பு என்றால் அது விளக்கம் அல்ல, அன்பு என்பது செயல். ஆம், நேசம். நான் இறைவனை நேசிக்கிறேன். நேசம் என்பது என் செயல். ஆனால் கடவுள் என்ற சொல்லுக்கு ஒரு சொற்பொருள் விளக்கம் இருந்தாக வேண்டும். அதுவும் உங்களுக்குத் தெரியும். இப்போது மறந்துவிட்டீர்கள். இப்போ, ஒரே வார்த்தையில், "கடவுள் சிறந்தவர்," என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆக, ஒருவர் சிறந்தவரா என்பதை எப்படி சோதித்துப் பார்ப்பீர்கள்? அடுத்த கருத்து. "இவர் சிறந்தவர்," என்று நீங்கள் கூறினால், அந்த புரிதலுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கவேண்டும், அதாவது எந்த அடிப்படையில் நீங்கள் அவரை சிறந்தவர் என்கிறீர்கள். புரிதலின் பல நிலைகள் உள்ளன. ஆக கடவுள் என்பவர் சிறந்தவர் என்பதை நீங்கள் எப்படி புரிந்து கொண்டீர்கள்? உங்களுடைய கணிப்பு என்ன, அதாவது "எந்த காரணத்தால் கடவுள் சிறந்தவர்?" என்ற கேள்விக்கு பதில் என்ன? அதாவது, உங்கள் பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது, " 'படைப்பு நிகழட்டும்' என்று கடவுள் சொன்னவுடன், படைப்பு அனைத்தும் தோன்றியது." அப்படித்தானே? அப்படி ஒரு வரி இருக்கிறது அல்லவா? ஆக சிறந்தவர் என்றால் இதுதான் அர்த்தம். அவர் வெறும், " படைப்பு நடக்கட்டும்," என்றார், உடனேயே படைப்பு நடந்தது. உங்களால் அதை செய்ய முடியுமா? நீங்கள் ஒரு நல்ல ஆசாரி என்று வைத்துக்கொள்வோம். "ஒரு நாற்காலி தோன்றட்டும்," என்று நீங்கள் சொன்னவுடன் அங்கு ஒரு நாற்காலி தோன்ற வேண்டும். அப்படி உங்களால் செய்ய முடியுமா ? அது சாத்தியமா? நீங்கள் ஒரு கடிகாரம் உற்பத்தி செய்பவர் என்று வைத்துக்கொள்வோம். "கடிகாரம் உண்டாகட்டும்" என்று சொன்னவுடன் ஒரு கடிகாரம் தோன்றவேண்டும். அப்படி உங்களால் செய்ய முடியுமா? அது சாத்தியமில்லை. எனவேதான் கடவுளுக்கு 'சத்ய-சங்கல்ப' எனப் பெயர். சத்ய-சங்கல்ப. சத்ய-சங்கல்ப என்றால் அவர் எதை நினைத்தாலும், அது உடனடியே நிஜமாகிவிடும். கடவுள் மட்டுமல்ல, பக்குவமான யோக நிலையை அடைந்தவர்களும் அப்படித் தான். கடவுளைப் போல் இல்லாட்டியும் கிட்டத்தட்ட, அவர்கள் நினைத்தது எல்லாம் நடக்கும். அற்புதச் செயல்கள்... ஒரு யோகி, பக்குவ நிலையை அடைந்திருந்தால், "எனக்கு இது வேண்டும்," என்று ஒன்றை விரும்பினால், உடனேயே அது நடக்கும். அதைத்தான் சத்ய-சங்கல்ப என்றழைக்கிறோம். இப்படி பல உதாரணங்கள் உள்ளன. இதுதான் உண்மையில் ஒருவரின் பெருமை. உதாரணத்திற்கு, இந்த நவீன விஞ்ஞானிகள், விண்கலத்தை வெகுவேகமாக ஒட்டி சந்திர கிரகத்திற்குச் செல்ல முயல்கிறார்கள். அமெரிக்கா, ரஷ்யா , மற்றும் சில நாடுகளின் விஞ்ஞானிகள் முயன்று வருகிறார்கள், ஆனால் அவர்களால் முடியவில்லை. அவர்களுடைய 'ஸ்புட்னிக்' என்கிற விண்கலம் திரும்பி வந்துவிட்டது. ஆனால் கடவுளின் சக்தியைப் பாருங்கள். கோடிக்கணக்கான கிரகங்கள் பஞ்சு போல் மிதந்துக் கொண்டிருக்கின்றன. இதுதான் பெருமை. ஆக எந்த முட்டாளாவது, "நான் தான் கடவுள்," என்று கூறினால், அவன் ஒரு அயோக்கியன். கடவுள் சிறந்தவர். கடவுளுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. ஒப்பீடே கிடையாது. ஆனால் இந்த அயோக்கியத்தனம் நடந்து கொண்டிருக்கிறது. "எல்லோரும் கடவுள். நானும் கடவுள், நீயும் கடவுள்" - அப்படி என்றால் அவன் ஒரு நாய். நீ கடவுளின் சக்தியை காட்டு பார்க்கலாம், அப்புறம் பேசு. தகுதியை பெற்றவுடன் தான் ஆசைப் படவேண்டும். நமக்கு என்ன தகுதி இருக்கிறது? நாம் எப்போதும் மற்றவர்களை சார்ந்தவர்கள் தான். ஆக கடவுள் சிறந்தவர் மற்றும் நாம் கடவுளைச் சார்ந்தவர்கள். ஆக இயற்கையாகவே, முடிவு என்னவென்றால் நாம் கடவுளுக்கு சேவகம் செய்ய வேண்டியவர்கள். இதுதான் முழு (மங்கிய ஒலி). சேவகம் என்றால் அன்புடன் செய்த தொண்டு. இந்த சிறுவர்களைப் போல் தான், என்னுடைய சீடர்கள், அவர்கள் எனக்கு சேவகம் செய்கிறார்கள். நான் எதைச் சொன்னாலும், அவர்கள் உடனேயே நிறைவேற்றுகிறார்கள். ஏன்? நானோ ஒரு இந்தியன், நான் வேளிநாட்டவன். இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன் அவர்களுக்கு என்னைத் தெரியாது, எனக்கும் அவர்களைத் தெரியாது. பிறகு அவர்கள் ஏன் அதைச் செய்கிறார்கள்? அன்பு தான் காரணம். சேவகம் என்றால் அன்பை வளர்ப்பது. ஆக, கடவுளின்மீதுள்ள உங்கள் அன்பை நீங்கள் வளர்த்துக்கொண்டால் ஒழிய உங்களால் அவருக்கு சேவை செய்ய முடியாது. எங்கும் அப்படித்தான். யாருக்கு நீங்கள் பணிபுரிந்தாலும் சரி, அதன் அடிப்படை அன்பு தான். உதாரணத்திற்கு, ஒரு தாய் தன் கையாலாகாத குழந்தைக்கு பணிபுரிகிறாள். ஏன்? அன்பு தான் காரணம். ஆக அதுபோலவே, பரமபுருஷரான அந்த முழுமுதற் கடவுளின்மீதுள்ள நம் அன்பு, பக்குவ நிலையை அடைந்தால், நம் வாழ்க்கை பூரணத்துவம் அடையும். அப்போ அது சரி. நீங்கள் இதை கற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் கிருஷ்ண உணர்வு - கிருஷ்ணருடன் இருக்கும் உறவில் உணரப்படுவது. எப்படி என்றால், நான் என் சீடர்களை நேசிக்கிறேன், என் சீடர்கள் என்னை நேசிக்கிறார்கள். ஏன்? சம்பந்தம் என்ன? கிருஷ்ணர்.