TA/Prabhupada 0298 - நீங்கள் கிருஷ்ணருக்கு சேவை அளிக்க ஆர்வமுடன் இருந்தால், அதுவே உண்மையான சொத்து



Lecture -- Seattle, October 4, 1968

பிரபுபாதர்: ஏதெனும் கேள்வி இருக்கிறதா? விஷ்ணுஜன: கிருஷ்ணருக்கு நாம் முழு நிறைவான சேவையை அளிப்பது எப்படி? பிரபுபாதர்: அதற்காக கவலைப்பட்டு. (சிரிப்பு, "ஹரிபோல்!") நீங்கள் கிருஷ்ணருக்கு சேவை அளிக்க மிகவும் ஆவலாக இருந்தால், அதுதான் உங்கள் உண்மையான சொத்து. கிருஷ்ணர் எல்லையற்றவர். அவருக்கு நாம் என்ன சேவையை வழங்க முடியும்? மேலும் அவருக்கு கணக்கற்ற சேவகர்கள் இருக்கிறார்கள். உங்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் அவருக்கு என்ன சேவை தேவைப்படும்? அவர் தன்னிலேயே முழு நிறைவும் கொண்டவர். அவருக்கு எந்த சேவையும் தேவையும் இல்லை. ஆனால் அவருக்கு சேவை செய்ய நீங்கள் ஆவலாக இருந்தால், அப்போது அவர் மறுக்கமாட்டார். அதுதான் அவருடைய கருணை; அதுதான் அவருடைய பெருந்தன்மை. ஆக கிருஷ்ணருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உங்கள் ஏக்கத்தை நீங்கள் எந்த அளவுக்கு அதிகரிக்கிரீர்களோ, அந்த அளவுக்கு அது பக்குவம் அடையும். அவர் எல்லையற்றவர். உங்களுடைய ஏக்கம், எல்லைகளை கடந்தால், அப்போது அங்கு போட்டி இருக்கும். நீங்கள் கிருஷ்ணருக்கு அதிகமாக சேவை செய்ய செய்ய, அவரும் உங்களை அந்தளவுக்கு அதிகமாக ஏற்றுக் கொள்வார் மற்றும் தகுந்த புத்தியையும் வழங்குவார். புரிகிறதா? ஆக ஆன்மீக உலகம் என்பது எல்லையற்றது. சேவைக்கு முடிவேயில்லை, மேலும் சேவையை ஏற்றுக் கொள்வதிலும் முடிவேயில்லை. ஆக ஏக்கம் இருக்கவேண்டும். தத்ர லெளல்யம் ஏக மூல்யம். அதாவது... நான் கருத்தை கற்பனை செய்து உருவாக்கவில்லை, ஆனால் உங்களுக்கு ரூப கோஸ்வாமீ, நம் ஆச்சாரியர் கூறியதை வைத்து ஆதாரம் கொடுக்கிறேன். அவர் கூறினார், க்ருஷ்ண-பக்தி-ரச-பாவிதா மதி: க்ரியதாம் யதி குதொபி லப்யதெ: "என் அன்பு கனவான்களே, சிறுவர்களே தாய்மார்களே, உங்களால்... கிருஷ்ணரை நேசிக்கும் புத்தியை விலைக்கு வாங்க முடிந்தால் - 'கிருஷ்ணரை மேன்மேலும் அதிகமாக எவ்வாறு நேசிப்பது' - அந்த அளவுக்கு இந்த ஏக்கத்தை வாங்க முடிந்தால், உங்களால் இந்த 'மதி:' - மதி என்றால் புத்தி, உணர்வு - இதை புத்தியை விலைக்கு வாங்க முடிந்தால்; இது சிறந்த புத்திசாலித்தனம், அதாவது " 'நான் எவ்வாறு கிருஷ்ணருக்கு சேவை செய்வது...' " க்ருஷ்ண-பக்தி-ரச-பாவிதா மதி:. மதி என்றால் அறிவாற்றல், அதாவது "நான் கிருஷ்ணருக்கு சேவை செய்வேன்," என்ற எண்ணம். "இந்த எண்ணத்தை உங்களால் எங்கேயாவது வாங்க முடிந்தால், தயவு செய்து உடனடியாக வாங்குங்கள்." பிறகு அடுத்த கேள்வி என்னவென்றால், "சரி, நான் வாங்குகிறேன். ஆனால் அதன் விலை என்ன, உங்களுக்கு தெரியுமா?" "ஆம், என்ன விலை என்று எனக்கு தெரியும்." "அந்த விலை என்ன?" "'லெளல்யம்', உங்கள் ஆர்வம், ஏக்கம், அவ்வளவு தான்." லெளல்யம் ஏக மூல்யம். "ஓ, அதை என்னால் சுலபமாக பெற முடியும்." இல்லை. ந ஜென்ம கோடிபிஸ் ஸுக்ருதிபிர் லப்யதெ. கிருஷ்ணரை எவ்வாறு நேசிப்பது என்ற அந்த ஆர்வம், பற்பல ஜென்மங்கள் எடுத்த பிறகும் சுலபமாக கிடைக்க கூடிய விஷயம் அல்ல. ஆக, "நான் எப்படி கிருஷ்ணருக்கு சேவை செய்வது?" என்ற ஏக்கம் உங்களிடம் ஒரு துளி இருந்தாலும், நீங்கள் சிறந்த அதிருஷ்டசாலி என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு துளி மட்டும், 'லெளல்ய', இந்த ஏக்கம், "நான் எப்படி கிருஷ்ணருக்கு சேவை செய்வது?" இருந்தால், அது மிகவும் அருமையான விஷயம். பிறகு கிருஷ்ணர் உங்களுக்கு தகுந்த அறிவை அளிப்பார். தேஷாம் ஸதத-யுக்தானாம் பஜதாம் ப்ரீதி-பூர்வகம் புத்தி-யோகம் ததாமி தம்... (பகவத் கீதை 10.10) "என்னுடைய சேவையில் அன்புடனும் பாசத்துடனும், போலித்தனம் இல்லாமல் ஈடுபடும் எவரும்." மேலும் கிருஷ்ணரால் அனைத்தையும் புரிந்துகொள்ள முடியும். அவர் என்னுள்ளும் இருக்கிறார், உங்களுக்குள்ளும் இருக்கிறார். பிறகு அவர் உங்களுக்கு அறிவைக் கொடுப்பார்: "என் அன்பு மகனே, நீ இவ்வாறு செய்." மேலும் அவ்வாறு செய்வதனால், அவன் எதை அடைவான்? ஏன மாம் உபயாந்தி தே: "அவன் மறுபடியும் என்னிடம் வந்து சேருவான்." மேலும் அங்கு சென்றடைவதால் அவனுக்கு என்ன இலாபம்? யத் கத்வா ந நிவர்தந்தே தத் தாம பரமம் மம (பகவத் கீதை 15.6). மாம் ஹி பார்த வ்யபாஷ்ரித்ய யே 'பி ஸ்யு: பாப-யோனய: (பகவத் கீதை 9.32). து:காலயம்-அஷாஷ்வதம் (பகவத் கீதை 8.15). இப்படி பல பலன்கள் இருக்கின்றன. தயவுசெய்து பகவத்-கீதை உண்மையுருவில் புத்தகத்தை படியுங்கள். உங்களுக்கு பூரணமான அறிவு, கடவுளைப் பற்றிய விஞ்ஞானம் கிடைக்கும். மனித இனத்திற்கு உரிய கல்வி அது மட்டும் தான். ஆக உங்கள் ஆர்வமும் ஏக்கமும் தான் கிருஷ்ணருக்கு தொண்டாற்றுவதற்கு தேவையான பக்குவத்துவம். அந்த ஆர்வத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் ஆர்வம் என்றால், நீங்கள் கிருஷ்ணரை நேசித்தால், உங்களுடைய அன்புடன் அந்த ஆர்வமும் அதிகரிக்கும் : அதாவது "நான் எவ்வாறு கிருஷ்ணருக்கு சேவை செய்வது?" என்ற எண்ணம் அதிகரிக்கும், ஏனென்றால் நீங்கள் தன்னிச்சையான சேவகன், யாரும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படி என்றால் நீங்கள் கிருஷ்ணரை நேசித்தால் ஒழிய அந்த ஆர்வம் எப்படி அதிகரிக்கும்? ஆக கிருஷ்ணரை நேசிக்க உதவும் பல விஷயங்கள் உள்ளன. ஆரம்பத்தில் இந்த 'ஷ்ரவணம் கீர்த்தனம்'. இந்த ஷ்ரவணம், கீர்த்தனம், மற்றும் திருநாம ஜெபம். செவிகளால் கேட்டல், நீங்கள் ஹரே கிருஷ்ண நாமத்தை கேட்கிறிர்கள், நீங்கள் பகவத்-கீதையை கேட்கிறிர்கள், நீங்கள் கிருஷ்ணரைப் பற்றிய ஸ்ரீமத் பாகவதத்தை கேட்கிறிர்கள், மற்றும் திருநாமத்தை ஜெபிக்கிரீர்கள். இதுதான் ஆரம்பம். பிறகு, இயற்கையாகவே, ஷ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத - ஸேவனம் அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸாக்யம் ஆத்ம - நிவேதனம் (ஸ்ரீமத் பாகவதம் 7.5.23) இந்த ஒன்பது வெவ்வேறு வகையான சேவைகளை கிருஷ்ணருக்கு செய்வதால் நீங்கள் தெளிவை அடைவீர்கள், கிருஷ்ண உணர்வில் முன்னேறுவீர்கள், மேலும் உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். வேறு ஏதாவது கேள்வி? புரிந்துகொள்ள முயலுங்கள். இது ஒன்றும் கட்டாயப்படுத்தி நாங்கள் செய்ய வைக்கும் விஷயம் அல்ல. உங்களுக்கு புத்தி இருக்கிறது. கிருஷ்ணர் உங்களுக்கு புத்தியை கொடுத்திருக்கிறார். உங்கள் புத்தியை வைத்து புரிந்துகொள்ள முயலுங்கள், ஆனால் இதைத் தவிர்க்க முயற்சி செய்யாதீர்கள். கருத்துகளை புரிந்துகொள்ள உதவும் வகையில் கேள்விகளை கேளுங்கள், அதை தவிர்க்கவல்ல. இரண்டு வகையான் கேள்விகள் உள்ளன. அப்படிப்பட்ட கேள்வி உங்களுக்கு உதவாது. நீங்கள் தவிர்க்க முயன்றால், பிறகு கிருஷ்ணர் அதை தவிரக்க உதவி புரிவார், மற்றும் நீங்கள் கிருஷ்ணரை ஈர்க்க விரும்பினால், பிறகு கிருஷ்ணரே அவரை கவர உங்களுக்கு உதவுவார். ஆக இந்த இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. எந்த பாதையில் செல்ல உங்களுக்கு விருப்பமோ, நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளலாம். யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ் ததைவ பஜாம்யஹம் (பகவத் கீதை 4.11). ஒருவருடைய எண்ணத்தை பொறுத்து தான் கிருஷ்ணரும் உதவி புரிவார். எப்படி என்றால், பல தத்துவ ஞானிகள் இருக்கிறார்கள், மற்றும் அவர்கள் கிருஷ்ணரை மறக்க விரும்புகிறார்கள். உதாரணத்திற்கு, டாக்டர் ராதாகிருஷ்ணரின் புத்தகத்தில் நீங்கள் காண்பீர்கள், ஒன்பதாம் அத்தியாயத்தில் கிருஷ்ணர் கூறுகிறார், மன்-மனா பவ மத்-பக்தோ மத்-யாஜி மாம் நமஸ்குரு (பகவத் கீதை 18.65). மொழிபெயர்ப்பு சரியாக இருக்கிறது, ஆனால் அவர் விளக்கம் கூறுகிறார், "நீங்கள் சரணடைய வேண்டியது கிருஷ்ணரிடமல்ல." பாருங்கள். அப்படியென்றால் அவர் புத்தகம் எழுதிய நோக்கமே மக்களை தவறாக வழிநடத்திச் செல்லத் தான், கிருஷ்ணரை மறக்கடிக்கத் தான். அதனால் யாராவது கிருஷ்ணரை மறக்க விரும்பினால், கிருஷ்ணர் அவருக்கு அத்தகைய அறிவை கொடுப்பார், அதாவது அவனால் கிருஷ்ணரை புரிந்துகொள்ளவே முடியாது. ஆனால் ஒருவர் கிருஷ்ணரை நேசிக்க விரும்பினால், கிருஷ்ணரை புரிந்துகொள்ள விரும்பினால், அவர் பரிபூரண அறிவை கொடுப்பார். அப்போது உங்களால் புரிந்துகொள்ள முடியும். அதுதான் கிருஷ்ணர். உங்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. ஆனால் நீங்கள் கிருஷ்ணரை மறந்தால், பிறகு நீங்கள் மாயைக்கு சேவை செய்ய நேரும், மற்றும் நீங்கள் கிருஷ்ணரை நேசித்தால், பிறகு மாயை உங்களை விட்டு விடுவாள்.