TA/Prabhupada 0406 - கிருஷ்ணரைப் பற்றிய விஞ்ஞானம் தெரிந்த யாரும் ஆன்மீக குரு ஆகலாம்.



Discourse on Lord Caitanya Play Between Srila Prabhupada and Hayagriva -- April 5-6, 1967, San Francisco


பிரபுபாதர்: முதல் காட்சியில், விஜய நரஸிம்ஹ கட் கோவில் தரிசனம்.

ஹயக்ரீவன்: விஜய...

பிரபுபாதர்: விஜய நரஸிம்ஹ கட்.

ஹயக்ரீவன்: அதன் எழுத்துக் கோர்வையை நான் உங்களிடமிருந்து பின்பு வாங்கிக் கொள்கிறேன்.

பிரபுபாதர்: இதோ எழுத்துக் கோர்வையை வழங்குகிறேன். வி-ஜ-ய ந்-ரி-ஸி-ங்-க க-ட். விஜய ந்ருஸிம்ஹ கட் கோவில். இது விசாகபட்ணத்தின் நவீன கப்பல் கட்டுந்துறையின் அருகே உள்ளது. இது ஒரு மிகப்பெரிய இந்திய கப்பல் கட்டுந்துறை, விசாகபட்ணம். முன்னாளில் இதற்கு பெயர் விசாகபட்ணம் கிடையாது. அதற்கு அருகே, அந்த ரயில் நிலையத்திலிருந்து ஐந்து மைல் தூரத்தில் ஒரு மலையின் மேல் அழகிய கோயில் ஒன்று உள்ளது. மேடையில் அந்த கோவில் காட்சியை அமைக்கவேண்டும் மற்றும் சைதன்ய மஹாபிரபு கோவிலுக்கு வருவதை போல் காட்சி இருக்கவேண்டும். கோவிலுக்கு பிறகு, அவர் கோதாவரி நதிக்கரைக்கு வந்தார். எப்படி கங்கை நதி மிகவும் புனிதமான நதியோ, அதுபோலவே மற்ற சில நதிகள் உள்ளன, குறிப்பாக நான்கு நதிகள். யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, நர்மதா. கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதா மற்றும் கிருஷ்ணா. இந்த ஐந்து நதிகள் மிகவும் புனிதமானதாக கருதப்படுகின்றன. ஆக அவர் கோதாவரி நதிக்கரைக்கு வந்து ஸ்நானம் செய்து, ஒரு அழகான மரத்தடியில் அமர்ந்து ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண என ஜெபித்தார். அப்பொழுது ஒரு பெரும் ஊர்வலம் வருவதை அவர் கண்டார். அதுதான் இந்த காட்சியின் அமைப்பாக... அந்த ஊர்வலத்தில்... முற்காலத்தில் ராஜாக்களும், ஆளுநர்களும், கங்கையில் தனது உபகரணங்களுடன், வாத்தியங்களை வாசிப்பவர்கள், பல பிராம்மணர்கள் மற்றும் பல விதமான தான பொருட்களுடன் வந்து குளிப்பார்கள். அவர்கள் குளிக்க வரும் முறை இப்படி இருந்தது. அந்த பெரும் ஊர்வலத்தில் யாரோ வருவதை பகவான் சைதன்யர் கண்டார். பிறகு மெட்ராஸ் மாநிலத்தின் ஆளுனரான ராமாநந்த ராயரைப் பற்றி அவர் தெரிந்து கொண்டார். ஸர்வபௌம பட்டாச்சாரியார் அவரிடம் கேட்டுக்கொண்டிருந்தார், "தாங்கள் தென் இந்தியாவுக்கு செல்கிறீர்கள். அங்கே ராமாநந்த ராயரை நீங்கள் சந்திக்கவேண்டும். அவர் ஒரு சிறந்த பக்தர்." ஆக அவர் காவேரி நதிக்கரையில் அமர்ந்திருக்கயில் ராமாநந்த ராயர் அந்த ஊர்வலத்தில் வந்தார். அந்த நபர் ராமாநந்த ராயர் என அவர் புரிந்துகொண்டார். ஆனால் சன்னியாசியாக இருந்ததால் அவர் அவருடன் பேசவில்லை. ஆனால் ராமாநந்த ராயரோ ஒரு சிறந்த பக்தர். ஒரு நல்ல சன்னியாசியை, இளம் சன்னியாசியை உட்கார்ந்து ஹரே கிருஷ்ண ஜெபிப்பதை அவர் பார்த்தார். பொதுவாக சன்னியாசிகள் ஹரே கிருஷ்ண ஜெபிக்க மாட்டார்கள். அவர்கள் வெறும்"ஓம், ஓம்..." என தான் உச்சரிப்பார்கள். ஹரே கிருஷ்ண கிடையாது.

ஹயக்ரீவன்: சன்னியாசியாக இருந்ததால் அவருடன் பேசவில்லையா, எதற்காக?

பிரபுபாதர்: பணக்காரனிடம் தட்சணை கேட்கவோ, அவர்களை பார்க்கவோ, ஒரு சன்னியாசிக்கு தடை விதிக்கப் பட்டிருக்கிறது. அது ஒரு கட்டுப்பாட்டு. செல்வத்தின் மீது பற்று இருக்கும் நபர்கள்.

ஹயக்ரீவன்: ஆனால் ராமாநந்த ராயர் ஒரு பக்தர் என்று நான் நினைத்தேன்.

பிரபுபாதர்: சந்தேகத்திற்கு இடமின்றி அவர் ஒரு பக்தர் தான், ஆனால் வெளித்தோற்றத்தில் அவர் ஒரு ஆளுனராக இருந்தார். வெளித்தோற்றத்தில். ஆக சைதன்ய மஹாபிரபு அவரிடம் செல்லாவிட்டாலும், அவர் புரிந்துகொண்டார், "இவர் ஒரு சிறந்த சன்னியாசி." அவர் அருகே வந்து மரியாதையுடன் வணங்கி அவர் (மஹாபிரபு) முன்னால் உட்கார்ந்தார். முன்னாலேயே அறிமுகம் ஆனதால் பகவான் சைதன்யர் கூறினார், "பட்டாச்சாரியார் உங்களைப் பற்றி ஏற்கனவே அறிவித்திருக்கிறார். தாங்கள் ஒரு பெரிய பக்தர். ஆகையால் தான் நான் உங்களைக் காண வந்திருக்கிறேன்." அதற்கு அவர் பதிலளித்தார், "எப்படிப்பட்ட பக்தன்? நானோ செல்வத்தை மேலாளும் மனிதன், அரசியல்வாதி. ஆனால் பட்டாச்சாரியார் என்மீது உள்ள கருணையால் மரியாதைக்குரிய தங்களை என்னை பார்க்க கேட்டுக்கொண்டுள்ளார். தாங்கள் வந்துள்ளீர்கள் என்றால், தயவுசெய்து என்னை இந்த பௌதிக மாயையிலிருந்து மீட்டெடுங்கள்." ஆகவே ராமாநந்த ராயருடன் சந்திக்க ஒரு நேரம் நியமனம் செய்யப்பட்டது, பிறகு இருவரும் மறுபடியும் மாலையில் சந்தித்தார்கள். வாழ்க்கையில் ஆன்மீக முன்னேற்றத்தைப் பற்றி அவர்கள் பேசினார்கள். பகவான் சைதன்யர் அவரிடம் விவரங்கள் கேட்க, ராமாநந்த ராயர் அதற்கு பதில்களை அளித்தார். அவர் எப்படி கேள்வி கேட்டார், எப்படி அவர் (ராமாநந்தர்) பதில் அளித்தார் என்பது ஒரு பெரிய கதை தான்.

ஹயக்ரீவன்: ராமாநந்த ராயர்.

பிரபுபாதர்: ஆமாம்.

ஹயக்ரீவன்: அது முக்கியமானதா? இது அந்த சந்திப்பினுடைய காட்சி அல்லவா.

பிரபுபாதர்: அந்த சந்திப்பின் விவரங்களை நீ வழங்க விரும்புகிறாயா?

ஹயக்ரீவன்: அந்த காட்சியை வழங்கவேண்டும் என்றால் அது முக்கியமானது தான். அந்த பேச்சுவார்த்தையை நடித்து காண்பிக்க தாங்கள் விரும்புகிறீர்களா?

பிரபுபாதர்: ராமாநந்த ராயர் ஊர்வலம் வந்து அவரை சந்தித்த காட்சி அருமையான காட்சி, அது முக்கியமானது. அதுவெல்லாம் ஏற்கனவே ஆனது. பேச்சுவார்த்தையை பொருத்தவரை, அதன் சாரம் என்னவென்றால்...

ஹயக்ரீவன்: சுருக்கமாக தாங்கள் எனக்கு விளக்கினால் போதும்.

பிரபுபாதர்: சுருக்கமாக சொன்னால், இந்த காட்சியில் சைதன்ய மஹாபிரபு ஒரு மாணவனின் இடத்தை ஏற்றார். சரியாக மாணவன் என்று சொல்லமுடியாது. அவர் கேள்விகளை கேட்டார், அதற்கு ராமாநந்த ராயர் பதிலளித்தார். ஆக இந்த காட்சியின் சிறப்பு என்னவென்றால், சைதன்ய மஹாபிரபு நடை முறைப்பண்பை எல்லாம் பின்பற்றுவதில்லை, அதாவது சன்னியாசி மட்டுமே ஆன்மீக குருவாக இருக்கலாம் என்றெல்லாம். கிருஷ்ணரைப் பற்றிய விஞ்ஞானம் தெரிந்த யாரும் ஆன்மீக குரு ஆகலாம். இந்த தத்துவத்தை நடைமுறையில் எடுத்துக்காட்டுவதற்காக, ஒரு சன்னியாசி மற்றும் பிராம்மணனாக இருந்தபோதிலும் கூட, அதே சமயம் ராமாநந்த ராயர் ஒரு சூத்திரர் மற்றும் கிரஹஸ்தனாக, குடும்பஸ்தராக இருந்தபோதிலும், அவர் ஒரு மாணவனைப் போல் ராமாநந்த ராயரிடம் விசாரித்தார். ராமாநந்த ராயர் சற்று தயங்கினார், அதாவது "ஒரு சன்னியாசிக்கு எப்படி என்னால் ஒரு ஆசிரியர் நிலையிலிருந்து பதில் அளிக்க முடியும்?" அதற்கு சைதன்ய மஹாபிரபு கூறினார், "இல்லை, இல்லை. தயக்கம் வேண்டாம்." ஒருவன் சன்னியாசியாக இருந்தாலும் சரி குடும்பஸ்தனாக இருந்தாலும் சரி பிராம்மணனாக இருந்தாலும் சரி, சூத்திரனாக இருந்தாலும் சரி, அது முக்கியம் அல்ல, என்று அவர் கூறினார். கிருஷ்ணரைப் பற்றிய விஞ்ஞானத்தை அறிந்தவன் யாரும் ஒரு குருவாக இருக்கலாம். ஆக அது தான் அவர் அளித்த, அதாவது ஒரு அன்பளிப்பு என்று சொல்லலாம். ஏனென்றால் இந்திய சமுதாயத்தில், வெறும் பிராம்மணர்களும் சன்னியாசிகளும் மட்டுமே ஆன்மீக குரு ஆகமுடியும் என கருதப்படுகிறது. ஆனால் சைதன்ய மஹாபிரபு கூறினார், "அப்படி கிடையாது, யார் வேண்டுமானாலும் ஆன்மீக குரு ஆகலாம், ஆனால் அந்த விஞ்ஞானத்தை நன்கு அறிந்திருக்கவேண்டும்." மேலும் அந்த பேச்சுவார்த்தையின் சுருக்கம் என்னவென்றால் எப்படி தம்மை இறைவனின்மீதான அன்பின் உச்சக்கட்ட பக்குவ நிலைக்கு உயர்த்துவது என்பது தான். மேலும் கடவுள் மீதான அன்பு ராதாராணியில் மிகச்சிறப்பான வடிவத்தில் இருந்தது. ஆக (மஹாபிரபு) இந்த மனோபாவத்தில், ராதாராணியின் நிலையில். மற்றும் ராமாநந்த ராயர், ராதாராணியின் தோழியான லலிதா-சகியின் நிலையில், இருவரும் ஒருவரையொருவர் அணைத்து ஆனந்தத்தில் ஆட ஆரம்பித்தார்கள். அது தான் இந்த காட்சியின் முடிவாக இருக்கும். இருவரும் ஆனந்த்தில் ஆட ஆரம்பிக்கிறார்கள்.

ஹயக்ரீவன்: ராமாநந்த ராயர்.

பிரபுபாதர்: மற்றும் சைதன்ய மஹாபிரபு.

ஹயக்ரீவன்: சரி.