TA/Prabhupada 0911 - நீங்கள் கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருந்தால், எல்லா உயிர்களிடத்திலும் சமமான கருணையுட

Revision as of 11:42, 13 August 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Tamil Pages - 207 Live Videos Category:Prabhupada 0911 - in all Languages Category:TA...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


730420 - Lecture SB 01.08.28 - Los Angeles

மொழிபெயர்ப்பு : "போற்றுதற்குரிய பகவானே, நான் தங்களை நித்திய காலமாகவும், பரம ஆளுநராகவும், தொடக்கமும் முடிவும் அற்றவராகவும், எங்கும் வியாபித்து இருப்பவர் ஆகவும் கருதுகின்றேன். உங்கள் கருணையை வழங்குவதில், நீங்கள் அனைவருக்கும் சமமானவர். உயிர்வாழிகளிடையே காணப்படும் பிணக்குகள் சமுதாய தொடர்பின் காரணமாக உண்டாகின்றன."

பிரபுபாதா : பகவத்கீதையில் கிருஷ்ணர் இதே விஷயத்தையே கூறுகிறார். இது ஒரு பக்தராகிய குந்தியால் விளக்கப்படுகிறது. இதே விஷயம் பகவானாலும் பேசப்படுகிறது. ஸமோ 'ஹம்' ஸர்வ-பூ4தேஷு ந மே த்3வேஷ்யோ 'ஸ்தி ந ப்ரிய:, யே து ப4ஜந்தி மாம்' ப4க்த்யா தேஷு தே மயி (ப.கீ 9.29). கடவுள் பாரபட்சம் காட்டுபவராக இருக்க முடியாது. அது சாத்தியமல்ல. எல்லோருமே கடவுளின் குழந்தைகள். எனவே கடவுள் எவ்வாறு ஒரு மகனை விட இன்னொரு மகனுக்கு பாரபட்சம் காட்ட முடியும்? அது சாத்தியமல்ல. அது நம்முடைய தவறு. நாம் எழுதுகிறோம் : "நாங்கள் கடவுள் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம்." ஆனால் நாம் வேறுபடுத்திப் பார்க்கிறோம். நாம் கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருந்தால், பிறகு எல்லா உயிர்களிடத்தும் சமமான கருணையையும் இரக்கத்தையும் காட்ட வேண்டும். அதுதான் கடவுள் உணர்வு. எனவே கிருஷ்ணர் கூறுகிறார், "எனக்கு எந்த எதிரிகளும் இல்லை, எனக்கு எந்த நண்பர்களும் இல்லை." ந மே த்3வேஷ்யோ 'ஸ்தி ந ப்ரிய:.

த்3வேஷ்ய என்றால் எதிரி. நாம், நம்முடைய எதிரிகளிடம் பொறாமை கொண்டுள்ளோம், மேலும் நண்பர்களிடம் நட்புறவு கொண்டுள்ளோம். கிருஷ்ணர் பூரணமானவர். அவர் ஒரு அசுரனிடம், விரோதமாக இருப்பது போல தோன்றினாலும் உண்மையில் அவர் நண்பரே. ஒரு அசுரன் கொல்லப்பட்டால், அவனுடைய அசுரத்தனமான செயல்கள் கொல்லப்பட்டதாக பொருள். அவன் உடனடியாக ஒரு சாது ஆகிவிடுகிறான். இல்லை என்றால் எப்படி அவன் உடனடியாக பிரம்ம ஜோதிக்கு ஏற்றம் பெறுவான்? கிருஷ்ணரால் கொல்லப்பட்ட இந்த எல்லா அசுரர்களும், உடனேயே பிரம்ம ஜோதி-நிர்விசேஷ -த்தில் கலந்து விட்டார்கள். ஒரே வேறுபாடு என்னவென்றால், உண்மையில் பிரம்ம ஜோதி, பரமாத்மா மற்றும் பகவான். இவையனைத்தும் ஒன்றே. வத3ந்தி தத் தத்வ-வித3ஸ் தத்வம் (ஸ்ரீமத் பா 1.2.11). அந்த ஒரே உண்மை, பூரண உண்மையின் பல்வேறு அம்சங்கள் மட்டுமே. ப்3ரஹ்மேதி பரமாத்மேதி ப4க3வான் இதி ஷ2ப்3த்3யதே (ஸ்ரீமத் பா 1.2.11). உண்மையில் பகவான், அவரது விரிவங்கத்தின் பிரதிநிதியான பரமாத்மா எல்லோருடைய இதயத்திலும் வீற்றிருக்கிறார். ஈஷ்2வர: ஸர்வ-பூ4தானாம்' ஹ்ரு'த்3-தே3ஷே2 'ர்ஜுன திஷ்ட2தி (ப.கீ 18.61) விரிவங்கம் ஆகிய க்ஷீரோத3கஷா2யீ விஷ்ணு, எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறார். அவர்தான் பரமாத்மா. மேலும் பிரம்மன் பரமாத்மா மற்றும் பகவான். இறுதி இலக்கு பகவான்தான். எனவே, யே யதா2 மாம்' ப்ரபத்3யந்தே (ப.கீ 4.11). இப்போது அவர் அனைவரிடமும் சமமாகவே இருக்கிறார். இது பக்தர்கள் அல்லது உன்னதமான பூரண உண்மையினை புரிந்துகொள்ள முயற்சிப்பவர்களை பொறுத்தது. அவர்களது புரிந்துகொள்ளும் திறனை பொறுத்ததே, பூரண உண்மை, கடவுள் அருவ பிரம்மனாகவோ அல்லது பரமாத்மாவாகவோ அல்லது பகவானாகவோ வெளிப்படுகிறார். அது என்னை பொறுத்ததே.

நான் பலமுறை இதே உதாரணத்தை விளக்கியுள்ளேன். அதாவது, சில சமயம் நம் அறைகளில் இருந்து நாம் மலைகளைப் பார்ப்போம். இங்கே, லாஸ் ஏஞ்சல்ஸில் பல மலைகள் இருக்கின்றன ஆனால் அவை தெளிவாக இல்லை. இந்த மலைகளை நாம் தூரத்திலிருந்து பார்க்கும்போது, இது தெளிவற்றதாக தெரிகிறது. ஆனால் நீங்கள் அந்த மலைகளை நெருங்கி போகும்போது நீங்கள் தெளிவாக சில மலைகள் இருப்பதைக் காணலாம். மேலும் நீங்கள் மலைக்கு நெருங்கிப் போனால், அங்கு பல மனிதர்கள் இருப்பதையும், அவர்கள் வேலை செய்வதையும் பல வீடுகள் இருப்பதையும் காணலாம். அங்கு தெருக்கள், மோட்டார் வண்டிகள், எல்லாம் இருப்பதைக் காணலாம், அதைப்போலவே ஒருவன் பூரண உண்மையை, அவனது சிறிய மூளையை வைத்துக்கொண்டு அறிந்துகொள்ள விரும்பினால், " பூரண உண்மையை அறிவதற்காக நான் ஆராய்ச்சியை மேற்கொள்வேன்," பிறகு நீங்கள் தெளிவற்றதான அருவ கருத்தையே அடைவீர்கள். மேலும் நீங்கள் ஒரு யோகியானால், கடவுள் உங்கள் இதயத்தில் வீற்றிருப்பதை காண்பீர்கள். த்4யானாவஸ்தி2த-தத்3-க3தேன மனஸா பஷ்2யந்தி யம்' யோகி3ன: (ஸ்ரீமத் பா 12.13.1). யோகிகள், உண்மையான யோகிகள், தங்களது யோகத்தால், தங்கள் இதயத்தினுள் விஷ்ணு மூர்த்தியை பார்ப்பார்கள். மேலும் பக்தரானவர்கள், பரம புருஷனை நேருக்குநேர் சந்திப்பார்கள். நாம் இப்போது நேருக்கு நேர் சந்திப்பதை போல நேருக்கு நேராக பேசி, நேரடியாக சேவை செய்வார்கள். பரமபுருஷ பகவான் ஆணையிடுவார், : "எனக்கு இதை வழங்கு," உடனே அவர் வழங்குவார். இதுதான் வித்தியாசம்.