TA/Prabhupada 0849 - நாம் கடவுளை காண விழைகிறோம் - ஆனால் அதற்கான தகுதி நமக்கில்லை என்பதை ஒப்புவதில்லை
731231 - Lecture SB 01.16.03 - Los Angeles
பிரதியும்ன: மொழிபெயர்ப்பு: "மஹாராஜா பரீக்ஷித்,கிருபாச்சாரியரை வழிகாட்டுதலுக்காக தனது ஆன்மீக குருவாகத் தேர்ந்தெடுத்த பிறகு, கங்கைக் கரையில் மூன்று அஸ்வமேத யாகங்களைச் செய்தார். பங்கேற்பவர்களுக்கு போதுமான வெகுமதிகளுடன் இவை செயல்படுத்தப்பட்டன. இந்த யாகங்களில், சாதாரண மனிதர்களால் கூட தேவர்களைக் காண முடிந்தது. "(SB 1.16.3)
பிரபுபாதர்: இப்போது, மக்கள் "நம்மால் ஏன் தேவர்களைக் காணமுடியவில்லை?" என்று கேட்கிறார்கள். இதற்கு பதில், "உங்கள் யாகம், அஸ்வமேத யாகம் எங்கே?" என்பது தான். தேவர்கள், அவர்கள் அவ்வளவு மலிவானவர்கள் அல்ல. ராஜா அல்லது ஜனாதிபதியைப் போல எங்கு வேண்டுமானாலும் வரும், மலிவான சாதாரண மனிதரா? இல்லை. ராஜாக்கள் அல்லது தேவர்கள் அல்லது நாரத முனிவர் போன்ற ஒரு பெரிய முனிவர் வருகை தருவதற்கு, ஒரு இடம் மதிப்புக்குரியதாக இருக்க வேண்டும். கிரக மண்டலம் இருந்தது. அர்ஜுனன் சுவர்க லோகத்திற்கு சென்றது போல, இவ்வாறான யாகங்கள், மஹாராஜா பரீக்ஷித், மஹாராஜா யுதிஷ்டிரர் போன்ற பெரிய மன்னர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால், அப்போது அழைக்கப்பட்டால் தேவர்கள் வருவார்கள். அவர்கள் வருவது மட்டுமல்லாமல், எல்லா சாதாரண மனிதர்களும் பார்க்கவும் முடியும். எனவே இங்கே தேவா யத்ராக்ஷி-கோசரா: என்று கூறப்படுகிறது. எல்லாவற்றையும் பார்ப்பதில் நாம் மிகவும் பெருமைப்படுகிறோம், ஆனால் பார்க்க தகுதியுடையவர்களாக காத்திருக்க வேண்டும். "கடவுளே, தயவுசெய்து எனக்கு முன் வாருங்கள், நான் பார்க்க விரும்புகிறேன்" என்று விசித்திரமாக அல்ல. உங்கள் பார்க்கும் சக்திக்கு ஏற்றவாறு கடவுள் இருக்கிறார். கடவுள் மிகவும் கருணைமிக்கவர். இங்கே அவர் கோவிலில் இருக்கிறார். தரிசிப்பதைத் தொடருங்கள். அவர் கடவுள் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். எனவே கடவுளோ தேவரோ, எல்லோரும் அக்ஷி-கோசரா: ஆக இருக்க முடியும், நீங்கள் தகுதி பெற்றிருந்தால், உங்கள் பார்வையின் சக்திக்கேற்ப தெரிவர். இதுவே செயல்முறை. இந்த பாதகர்கள், "நீங்கள் எனக்கு கடவுளைக் காட்ட முடியுமா?" என்கிறார்கள். ஆனால் பார்க்க என்ன சக்தி உள்ளது? முதலில் அந்த தகுதியைப் பெறுங்கள். பின்னர் நீங்கள் பார்ப்பீர்கள். கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். அண்டாந்தர-ஸ்த-பரமாணு-சயான் (Bs 5.35)... அவர் அணுவுக்குள்ளும் இருக்கிறார். ஆகவே கடவுளைப் பார்க்கத் தகுதியற்றவர், கடவுளை வெவ்வேறு வழிகளில் பார்க்க பகவத்-கீதையில் அறிவுறுத்தப்படுகிறார். கிருஷ்ணர் சொல்வது போல, ரஸோ 'ஹம் அப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ஷஷி-ஸூர்யயோ: (BG 7.8): "என் அன்பான கௌந்தேயா, அர்ஜுனா, நானே நீரின் சுவை." எனவே நீரின் சுவையில் கடவுளைப் பார்க்க முயலுங்கள். தற்போதைய தருணத்தில், நமக்கு பல புலன்கள் கிடைத்துள்ளன. கடவுளை கண்களால் பார்க்க விரும்புகிறீர்கள். எனவே உங்கள் நாக்கிலிருந்து தொடங்குங்கள். இதுவும் மற்றொரு உணர்வு. எப்படியெனில், நல்ல உணவுப் பொருட்கள் இருந்தால், "அது எப்படி இருக்கிறது என்று பார்க்கிறேன்" என்றால், "நான் பார்க்கிறேன்" என்றால்... நீங்கள் ஏற்கனவே பார்க்கிறீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும்? "இல்லை, நான் நாக்கினால் தொட விரும்புகிறேன்." அதுவே "நான் பார்க்கிறேன்." கண்களால் அல்ல. நல்ல இனிப்பு - ஹல்வா இருந்தால், "நான் பார்க்கிறேன்" என்பது "ருசித்து பார்க்கிறேன்" என்று பொருள். எனவே முதலில் கடவுளை ருசிக்கவும். இது புலன் உணர்விற்கு உட்பட்டது, ஆனால் பயிற்சி செய்ய முயலவும். அப்போது, ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ ஸ்வயம் ஏவ ஸ்புரத்யத: (Bhakti-rasāmṛta-sindhu 1.2.234). நீங்கள் உணர்வீர்கள். கடவுள் உங்களுக்கு தன்னை வெளிப்படுத்துவார். பணிவுடன், கடவுளுக்கு அர்ப்பணிப்புடன், பிரசாதத்தை ருசிப்பதன் மூலம், நீங்கள் கடவுளை நேருக்கு நேர் பார்ப்பீர்கள். அவர் உங்களுடன் பேசுவார். அது சாத்தியம்
எனவே தற்போதைய தருணத்தில், நாம் கடவுளைப் பார்க்க விரும்புகிறோம், ஆனால் நமக்கு தகுதி இல்லை என்பதை நாம் ஒப்புக் கொள்வதில்லை. நாம் எப்படி பார்க்க முடியும்? ஒரு சாதாரண ஜனாதிபதியைக் கூட பார்க்க முடியவில்லை என்றால்... எனது விருப்பப்படி நான் ஜனாதிபதியையோ, அத்தகைய பெரிய அதிகாரியையோ பார்க்க விரும்புகிறேன் என்றால். தகுதி பெறாவிட்டால் பார்க்க முடியாது. எனவே கடவுளை எவ்வாறு பார்க்க முடியும்? அது சாத்தியமில்லை. நீங்களே தகுதி பெற வேண்டும். அப்போது நீங்கள் கடவுளைக் காண்பீர்கள். அக்ஷி-கோசர:. அக்ஷி-கோசர: என்றால், நாம் பார்க்கிறோம்-நீங்கள் என்னைப் பார்க்கிறீர்கள், நான் உங்களைப் பார்க்கிறேன்- இதேபோல், நீங்கள் தகுதி பெற்றிருந்தால், நீங்கள் தேவர்களையோ கடவுளையோ காண்பீர்கள்.