TA/Prabhupada 0005 - பிரபுபாதரின் வாழ்க்கை வரலாறு 3 நிமிடத்தில்



Interview -- September 24, 1968, Seattle

பேட்டியாளர்: தங்களுடைய கடந்தகால வாழ்க்கையைப் பற்றி ஏதாவது சொல்லமுடியுமா? அதாவது தாங்கள் எங்கு கல்வி கற்றீர்கள், எப்படி கிருஷ்ணரின் சீடனானீர்கள்.

பிரபுபாதர்: நான் பிறந்தது, படித்தது எல்லாம் கல்கத்தாவில் தான். கல்கத்தா தான் என் சொந்த ஊர். நான் 1896 ஆண்டில் பிறந்தேன். என் தந்தைக்கு நான் செல்லப் பிள்ளை, அதனால் என் படிப்பு சற்று தாமதமாக தான் தொடங்கியது, இருந்த போதிலும், எட்டு வருடங்கள் வரை உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். தொடக்கநிலைப் பள்ளியில் நான்கு வருடங்கள், உயர்நிலைப் பள்ளியில் எட்டு வருடங்கள், மற்றும் கல்லூரியில் நான்கு வருடங்கள். அதன்பிறகு நான் காந்தியின் இயக்கத்தில், தேசிய இயக்கத்தில் சேர்ந்தேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் என் குரு மஹாராஜரை, என் ஆன்மீக குருவை 1922-இல் சந்தித்தேன். அன்றுமுதல் இந்த இயக்கத்திற்காக எனக்குள் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது, பிறகு காலப்போக்கில் என் இல்லற வாழ்க்கையைத் துறந்தேன். எனக்கு 1918-இல் திருமணம் நடந்த பொழுது நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவனாக இருந்தேன். பிறகு எனக்கு குழந்தைகள் பிறந்தன. நான் வியாபாரம் செய்துக் கொண்டிருந்தேன். அதன்பின்பு என் குடும்பவாழ்விலிருந்து 1954-இல் ஒய்வு பெற்றேன். நான்கு வருடங்களுக்கு குடும்பத்தினர் யாரும் இல்லாமல் நான் தனியாக இருந்தேன். அதன்பின் நான் முறையான துறவர வாழ்க்கையை 1959-இல் ஏற்றுக் கொண்டேன். பின்பு நான் புத்தகங்கள் எழுதுவதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன். என்னுடைய முதல் புத்தக வெளியீடு 1962-இல் இடம்பெற்றது, மூன்று புத்தகங்களை எழுதி வெளியிட்டேன். பிறகு, 1965-இல் உங்கள் நாட்டிற்க்கு நான் புறப்பட்டு, செப்டெம்பர் 1965-இல் நான் இங்கு முதன்முதலாக வந்தேன். அன்றுமுதல் நான் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் கிருஷ்ண பக்தியை பிரசாரம் செய்ய முயன்று வருகிறேன். படிப்படியாக மையங்கள் வளர்ந்து விரிவடைகின்றன. சீடர்களும் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கட்டும்.

பேட்டியாளர்: தாங்கள் எவ்வாறு சீடரானீர்கள்? தாங்கள் சீடர் ஆவதற்குமுன் என்னவாக இருந்தீர்கள், அதாவது எதைப் பின்பற்றினீர்கள்?

பிரபுபாதர்: நான் முன்பே கூறியது போல், அதே விஷயம் தான், திட நம்பிக்கை. என்னுடைய நண்பர் ஒருவர் என்னை வலுக்கட்டாயமாக என் ஆன்மீக குருவிடம் இழுத்துச் சென்றார். என் ஆன்மீக குருவிடம் பேசியபொழுது, நான் தூண்டிச் செயல்படுத்தப்பட்டேன். அன்றுமுதல், அந்த விதை வளர ஆரம்பித்தது.