TA/Prabhupada 0012 - அறிவுப்பேற்றின் தோற்றுவாய் செவிவழி கேட்டலே



Lecture on BG 16.7 -- Hawaii, February 3, 1975

நாம் ஒவ்வொருவரும் குறைப்பாடுகளுடையவர்கள். நம் கண்களின்மீது நமக்கு கர்வம் உள்ளது: "உங்களால் எனக்கு காட்ட முடியுமா?" நீங்கள் பார்க்க கூடிய அளவிற்கு உங்கள் கண்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? "எனக்கு எந்த தகுதியும் இல்லாத பட்சத்திலும் நான் பார்க்க ஆசைப்படுகிறேனே." அப்படி அவன் யோசிப்பதில்லை. இந்த கண்கள், இவை பல நிபந்தனைகளைச் சார்ந்திருக்கின்றன. இப்பொழுது மின்சாரம் இருக்கிறது, உங்களால் பார்க்க முடிகிறது. மின்சாரம் போனதும், உங்களால் பார்க்க முடியாது. அப்போது உங்கள் கண்களின் மதிப்பு என்ன? இந்த சுவற்றை தாண்டி என்ன நடக்கிறது என்பதை உங்களால் பார்க்க முடியாது. ஆக உங்களுடைய புலன்களை அறிவின் ஆதாரமாக நம்பாதீர்கள். அப்படி கிடையாது. அறிவின் மூலம் செவிவழி கேட்டலாக இருக்கவேண்டும். அதைத்தான் ஸ்ருதி என்கிறோம். ஆகையால் வேதத்தின் பெயர் ஸ்ருதி-ப்ரமானம். ஒரு சிறுவன் தன் தந்தை யார் என்பதை அறிய விரும்புவது போல் தான். அதாவது இதற்கு ஆதாரம் என்ன? அந்த ஆதாரம் ஸ்ருதி, தாயிடமிருந்து கேட்டறிதல். தாய் கூறுவாள், "இவர்தான் உன் தந்தை." ஆக அவன்கேட்டுஅறிகிறான்; அவர் எவ்வாறு தந்தையானார் என்பதை அவன் பார்ப்பதில்லை. ஏனென்றால் அவனுடைய உடல் உருவாகும் முன்பே தந்தை அங்கு இருந்தார். அவனால் எப்படி பார்த்திருக்க முடியும்? ஆக பார்வையால் உன் தந்தை யார் என்பதை உன்னால் தீர்மானிக்க முடியாது. தகுதியுள்ள அதிகாரியிடமிருந்து கேட்டு அறிந்தாகவேண்டும். தாய் தான் அந்த அதிகாரி. அதனால் ஸ்ருதி-ப்ரமாணம்: ஆதாரம் என்பது கேட்டு அறிவதாகும், பார்ப்பது அல்ல. பார்வை... நம்முடைய குறைப்பாடுகள் உள்ள கண்களால்... அதில் பல தடைகள் உள்ளன. அதுபோலவே, புலக்காட்சியால் சத்தியத்தை உணர முடியாது. நேரடி புலன் அனுபவம் என்பது (பக்குவமற்ற) யூகமே. டாக்டர் தவளை. டாக்டர் தவளை என்பவர் அட்லாண்டிக் மாகடல் என்ன, என்பதை ஊகிக்கிறார். அவர் கிணற்றுக்குள் இருக்கிறார், மூன்று அடி கிணறு, மற்றும் சில நண்பர்கள் அவரிடம் தெரிவிக்கின்றனர், "ஓ, நான் மிகப்பெரிய நீர்பரப்பைப் பார்த்திருக்கிறேன்." "என்ன அந்த மிகப்பெரிய நீர்பரப்பு?" "அட்லாண்டிக் மாகடல்." "அது எவ்வளவு பெரிதானது?" "மிக, மிக பெரியது." அப்படியானால் டாக்டர் தவளை சிந்திக்கிறார், "ஒரு வேளை நான்கு அடி இருக்குமோ. இந்த கிணறு மூன்று அடி உயரம். ஒரு வேளை நான்கு அடி இருக்குமோ. சரி ஐந்து அடி இருக்கும். சரி போ, பத்து அடி என்றே வைத்துக் கொள்வோம்." இப்படியாக ஊகத்தினால், அட்லாண்டிக், பசிபிக் மகா சமுத்திரங்களைப் பற்றி எப்படி தவளைக்கு, டாக்டர் தவளைக்கு புரிந்துக்கொள்ள முடியும்? உங்களால் அட்லாண்டிக், பசிபிக் மகா சமுத்திரங்களின், நீளம், அகலம் இவைகளை ஊகத்தினால் கணக்கிட முடியுமா? ஆகையால் ஊகத்தினால், உங்களுக்குக் கிடைக்காது. அவர்கள் நீண்ட காலமாக பிரபஞ்சத்தைப் பற்றி ஊகித்துக் கொண்டிருக்கிறார்கள், அங்கே எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன, அதன் நீளமும் அகலமும் என்ன, எங்கே அந்த... பெளதிக உலகத்தைப் பற்றி கூட ஒருவருக்கும் எதுவும் தெரியாது, பிறகு ஆன்மீக உலகத்தைப் பற்றி என்ன சொல்வது? அது அப்பாற்பட்டது, வெகு தூரத்திற்கும் அப்பாற்பட்டது. பரஸ் தஸ்மாத் து பாவோ (அ)ன்யோ (அ)வ்யக்தோ (அ)வ்யக்தாத் ஸநாதன(பகவத் கீதை 8.20). நீங்கள் பகவத் கீதையில் காணலாம். அங்கே வேறொரு இயற்கை நிலை உள்ளது. இந்த இயற்கை நிலை, நீங்கள் பார்க்கும் வானம், ஒரு உருண்டை கோபுரம், அதற்கும் மேல், ஒன்றின் மேல் ஒன்றாக பஞ்ச மகாபூதங்களின் (மூலகங்கள்) அடுக்குகள் இருக்கின்றன. இதுதான் அதன் மேலுறை. அதாவது நீங்கள் தேங்காயை பார்த்திருப்பீர்கள். அதில் திடமான மேலுறையும், அதன் உட்புறம் நீரும் இருக்கும். அதுபோலவே, இந்த மேலுறையின் உட்புறமும்... மேலும் அந்த மேலுறையின் வெளிபுறத்தில் ஐந்து அடுக்குகள் உள்ளன, ஒன்றொன்றும் இன்னொன்றைவிட ஆயிரம் மடங்கு பெரியது: தண்ணீர் அடுக்கு, காற்று அடுக்கு, நெருப்பு அடுக்கு. ஆக இந்த அடுக்குகள் அனைத்தையும் கடந்துச் செல்ல வேண்டியிருக்கும். அதன்பிறகு தான் ஆன்மீக உலகை காணமுடியும். எண்ணிக்கை இல்லாத பிரம்மாண்டங்கள், கோடி. யஸ்ய ப்ரபா ப்ரபவதொ ஜகத்-அண்ட-கோடி (ப்ரம்ம ஸம்ஹிதா 5.40) ஜகத்-அண்ட என்றால் பிரம்மாண்டம். கோடி, பல கோடிகள் கொத்தாக கூடி இருப்பதுதான் இந்த பெளதிக உலகம். இந்த பெளதிக உலகத்தை தாண்டி இருக்கிறது ஆன்மீக உலகம், மற்றொரு வானம். அதுவும் ஒரு வானம். அதற்கு ப்ரவ்யோமா எனப் பெயர். ஆக உங்கள் புலன் உணர்வுத்திறனால் நிலா கோள் அல்லது சூரியன் கோள் இவற்றில் என்ன இருக்கிறது என்பதைகூட உங்களால் மதிப்பிட முடியாது. இதே பிரம்மாண்டத்தில் இருக்கும் இந்த கிரகத்தை கூட கணிக்க முடியாது. பிறகு எப்படி ஆன்மீக உலகை உங்களால் ஊகித்தறிய முடியும்? இது முட்டாள்தனம். ஆகையால் சாஸ்திரம் சொல்கிறது, அசிந்த்யா: கலு யே பாவா ந தாம்ஸ் தர்கென யோஜயேத். அசிந்த்ய, உங்களுடைய சொற்பொருள் அறிவுதிறனுக்கு அப்பாற்பட்டது, வாக்குவாதம் செய்து புரிந்துகொள்ளவோ, ஊகித்தறியவோ முயற்சி செய்யாதீர்கள். இது முட்டாள்தனம். இது சாத்தியமல்ல. ஆகையால் நாம் குருவிடம் செல்லவேண்டும். தத்-விஞ்ஞாநார்தம் ஸ குரம் ஏவாபிகச்சேத், ஸமித்-பாணி: ஷ்ரோத்ரியம் பிரஹ்ம்-நிஷ்டம் [மண்டூக்ய உபநிஷத் 1.2.12]. இதுதான் வழிமுறை.