TA/Prabhupada 0020 - கிருஷ்ணரை புரிந்துக் கொள்வது அவ்வளவு எளிதான காரியமல்ல

From Vanipedia


கிருஷ்ணரை புரிந்துக் கொள்வது அவ்வளவு எளிதான காரியமல்ல
- Prabhupāda 0020


Arrival Lecture -- Miami, February 25, 1975

கிருஷ்ணரைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஷ்சித் யததி ஸித்தயே யததாம் அபி ஸித்தானாம் கஷ்சின் மாம் வேத்தி தத்த்வத: (பகவத்-கீதை 7.3) ஆயிரமாயிரம் மனிதர்களில் யாரேனும் ஒருவன் தன் வாழ்க்கையை வெற்றிகரமாக அமைக்க ஆவலாக இருப்பான். மற்றப்படி யாருக்கும் நாட்டம் இருப்பதில்லை. வாஸ்தவத்தில் வாழ்க்கையின் உண்மையான வெற்றி என்னவென்றே அவர்களுக்கு தெரியாது. நவீன நாகரீகத்தில், எல்லோரும் நினைக்கிறார்கள், "எனக்கு நல்ல மனைவி, அருமையான வாகனம் மற்றும் ஓர் அருமையான இல்லமும் கிடைத்தால், அதுதான் வெற்றி." அது வெற்றியல்ல. அது தற்காலிகமானது. மாயையின் பிடியிலிருந்து விடுதலைப் பெறுவது தான் உண்மையான வெற்றி. அதாவது பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய், இவைகளை உட்கொண்ட கட்டுண்ட பௌதிக வாழ்க்கையிலிருந்து விடுபடுவது. நாம் வாழ்க்கையில் பலவகையான பிறவிகளை ஏற்கின்றோம், மற்றும் இந்த மனிதப் பிறவி என்பது, மீண்டும் மீண்டும் ஓர் உடலிலிருந்து மற்றொரு உடலுக்கு மாறும் இந்த தொடரிலிருந்து வெளியேருவதற்கான சிறந்த வாய்ப்பு. ஆத்மா என்றது கிருஷ்ணரின், இறைவனின் அம்சம் என்றதால், அது நித்தியமானது, நிரம்பிய ஆனந்த நிலையைச் சேர்ந்தது. சச்-சித்-ஆனந்த, நித்தியமானது, ஆனந்தம் நிரம்பியது, ஞானம் நிரம்பியது. துரதிஷ்டவசமாக, இந்த பௌதிக, கட்டுண்ட வாழ்க்கையில் நாம் பல உடல்களை மாற்றிக் கொண்டிருக்கின்றோம், ஆனால் நாம் பிறப்பும், இறப்பும் இல்லாத ஆன்மீக நிலையை மறுபடியும் அடைவதில்லை. அத்தகைய விஞ்ஞானமே இல்லை. அன்றொரு நாள் ஒரு மன நோய் மருத்துவர் என்னைக் காண வந்திருந்தார். ஆத்மாவின் மெய்நிலையை புரிந்துகொள்ளும் உங்கள் கல்வியறிவு எங்கே? ஆக வாஸ்தவத்தில் இந்த உலகம் முழுவதும் அறியாமை எனும் இருளில் இருக்கிறது. அவர்கள் கவலைப் படுவது வெறும், ஐம்பது, அறுவது அல்லது நூறு வருடங்கள் கொண்ட இந்த வாழ்க்கை காலகட்டத்தை பற்றி தான். ஆனால் அவர்களுக்கு, நாம் நித்தியமானவர்கள், நிரம்பிய ஆனந்தமும் ஞானமும் கொண்டவர்கள், மேலும் இந்த ஜட உடலின் காரணமாக, பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய்களால் பாதிக்கப்படுகின்றோம் என்பதே தெரியாது. மேலும் இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. எனவே ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, தாழ்வடைந்த ஆத்மாக்களின்மீது உள்ள அளவுக்கடந்த கருணையால், தோன்றினார். கிருஷ்ணரும் வருவது உண்டு. ஆனால் கிருஷ்ணர் இவ்வளவு தாராளகுணத்தை வெளிப்படுத்துவதில்லை. கிருஷ்ணர் நிபந்தனை விதிக்கிறார், அதாவது "முதலில் நீ சரணடையவேண்டும். அதன்பின் நான் உன் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்." கிருஷ்ணரும் சைதன்ய மஹாபிரபுவும் ஒருவரே என்றாலும், சைதன்ய மஹாபிரபு, கிருஷ்ணரைவிட கருணையுள்ளவர். ஆக சைதன்ய மஹாபிரபுவின் கருணையால் நாம் கிருஷ்ணரை மிக சுலபமாக புரிந்து கொள்கிறோம். அந்த சைதன்ய மஹாபிரபு இங்கு நம் முன்னிலையில் இருக்கிறார். நீங்கள் அவரை வழிபடுங்கள். அது அவ்வளவு கடினமல்ல. யக்ஞை: ஸங்கீர்த்தன-ப்ராயைர் யஜந்தி ஹி ஸு-மேதஸ: க்ருஷ்ண-வர்ணம் த்விஷாக்ருஷ்ணம் ஸாங்கோபாங்காஸ்த்ர-பார்ஷதம் யக்ஞை ஸங்கீர்த்தனம் (ஸ்ரீமத் பாகவதம் 11.5.32). நீங்கள் வெறும் ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபியுங்கள், மற்றும் உங்களால் முடிந்ததை சைதன்ய மஹாபிரபுவிற்கு அர்ப்பணியுங்கள். அவர் கருணை மிக்கவர். அவர் தவறுகளை பொருட் படுத்துவதில்லை. ராதா-கிருஷ்ண வழிபாடு சற்று கடினமானது. அவரை மிகுந்த பயபக்தியுடனும் வழிபட வேண்டும். ஆனால் சைதன்ய மஹாபிரபு தாமே விரும்பி, தாழ்வடைந்த ஆத்மாக்களை மீட்க வந்திருக்கிறார். சிறிய சேவையே போதும், அவர் திருப்தி அடைந்துவிடுவார். அவர் திருப்தி அடைந்துவிடுவார். ஆனால் அலட்சியப் படுத்தாதீர்கள். அவர் மிகவும் கருணையுள்ளவர் என்பதால் நாம் அவர் யார் என்பதை மறந்துவிடக் கூடாது. அவர் பரமபுருஷரான முழுமுதற் கடவுள். எனவே, கூடியவரை நாம் அவருக்கு சிறந்த மரியாதையை செலுத்த வேண்டும்... ஆனால் நமக்கு சாதகமானது என்னவென்றால் சைதன்ய மஹாபிரபு குற்றங்களைப் பொருட்படுத்தமாட்டார். மேலும் அவரை வழிபடுவதும், அவரைத் திருப்தி படுத்துவதும் மிக சுலபமான காரியம். யக்ஞை: ஸங்கீர்த்தன-ப்ராயைர் யஜந்தி ஹி ஸு-மேதஸ:. வெறும் ஹரே கிருஷ்ண மஹா- மந்திரத்தை ஜெபித்து, பாடி ஆடுங்கள். சைதன்ய மஹாபிரபு மிகவும் திருப்தி அடைவார். அவர் அறிமுகப்படுத்திய இந்த ஆடலும் ஜெபமும் இறைவனை உணருவதற்கான மிகச் சுலபமான செயல்முறையாகும். ஆக இயன்றவரை... முடிந்தால் இருபத்தி-நான்கு மணி நேரமும். அது முடியாத பட்சத்தில், குறைந்தது நான்கு முறை அல்லது ஆறு முறையாவது, சைதன்ய மஹாபிரபு முன் ஹரே கிருஷ்ண மந்திரத்தைப் பாடி உச்சாடனம் செய்யுங்கள், உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். இது மெய்யானது.