TA/Prabhupada 0091 - நீங்கள் இங்கே நிர்வாணமாக நிற்க வேண்டும்



Morning Walk -- July 16, 1975, San Francisco

தர்மாத்யக்ஷன்: இப்போதெல்லாம், அவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து, இறப்பை பற்றி நிறைய ஆராய்ச்சி செய்கிறார்கள். மக்களை இறப்பிற்காக தயார் செய்வதற்கு மேன்மேலும் முயற்சி செய்கிறார்கள். மக்களிடம் அவர்கள் சொல்லக்கூடிய ஒரே விஷயம், " அதை ஏற்று கொள்ளுங்கள்," என்பது தான். அவர்கள் செய்ய கூடிய ஒரே விஷயம், "இறப்பை தவிர்க்க முடியாது, ஆகவே நீங்கள் அதை சுமுகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்பது தான். பிரபுபாதர்: ஆனால், எனக்கு மரணம் அடைய விருப்பம் இல்லையே. பிறகு நான் ஏன் சுமுகமாக இருக்க வேண்டும்? அடேய் அயோக்கியனே, "கவலைப்படாமல், சுமுகமாக இருக்கவேண்டும்," என நீ சொல்கிறாய். (சிரிப்பு) "சுமுகமாக நீ தூக்கில் தொங்கப்போகிறாய்." (சிரிப்பு) வக்கீல் கூறுவார், "பராவாயில்லை, நீ வழக்கில் தோல்வி அடைந்திருக்கிறாய். இப்பொழுது நீ சந்தோஷமாக தூக்கில் தொங்கு." (சிரிப்பு) தர்மாத்யக்ஷன்: உண்மையில், இதுதான் நவீன சிந்தனையின் இலக்கு, அதாவது மக்களை, அவர்கள் இந்த ஜட உலகில் தான் வாழ்ந்தாக வேண்டும் என்ற வாஸ்தவத்துடன் ஒத்துப்போவதற்கு தயார் படுத்துவது. மேலும் நீங்கள் இந்த பௌதிக உலகத்திலிருந்து விடுபட விரும்பினால், "நீ ஒரு பைத்தியக்காரன்," என்று சொல்லுவார்கள். "இல்லை, இல்லை. இப்பொழுது நீங்கள் உங்களை, பௌதிக நிலைமைக்கு ஏற்ற மாதிரி மேற்கொண்டு மாற்றிக் கொள்ளவேண்டும்." பஹூலாஷ்வன்: அவர்கள், வாழ்க்கையின் ஏமாற்றங்களை எல்லாம் ஏற்றுக்கொள்ள கற்றுத் தருகிறார்கள். பிரபுபாதர்: எதற்காக ஏமாற்றம்? நீ தான் பெரிய விஞ்ஞானி ஆச்சே. உன்னால் இதை சரி செய்ய முடியாதா என்ன? தர்மாத்யக்ஷன்: அவர்களால் அதை சரி செய்ய முடியாது. ஏனென்றால், அவர்களுக்கும் அதே பிரச்சினைகள் தான். பிரபுபாதர்: அதே தர்க்கம் தான், "சுமுகமாக தூக்கில் தொங்கு," அவ்வளவுதான். கஷ்டமான விஷயம் ஏதாவது வந்தாலே போதும், அவர்கள் அது சாத்தியம் இல்லை என்பார்கள். மேலும், தேவையில்லாத விஷயத்தை ஊகித்து ஆராய முயல்வார்கள். அவ்வளவுதான். இதுதான் அவர்கள் கற்ற கல்வி. கல்வி என்றால் அத்யந்திக-துக்க-நிவ்ருத்தி, அனைத்து துன்பங்களுக்குமான ஒரே தீர்வு. அதுதான் சிறந்த கல்வி முறை. ஓரளவுக்கு துன்பங்களை சரி கட்டிய பிறகு, " இப்போது நீங்கள் சந்தோஷமாக சாகலாம்," என கூறுவது நல்ல முறை கிடையாது. மேலும் துக்கம் என்றால் என்ன? அதை கிருஷ்ணர் அறிவித்திருக்கிறார். ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி துக்க-தோஷானு... (பகவத் கீதை 13.9). இவை தான் உன்னுடைய துன்பங்கள். இதை சரி செய்ய முயற்சி செய். அதை அவர்கள் தவிர்ப்பதில் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள். பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் எதையும் அவர்களால் தடுத்து நிறுத்த முடியாது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான இந்த குறுகிய கால கட்டத்தில், அவர்கள் பெரிய பெரிய கட்டிடங்களை கட்டுகிறார்கள், பிறகு அடுத்த ஜென்மத்தில் ஒரு எலியாக அதே கட்டிடத்திற்குள் வாழ்கிறான். ( சிரிப்பு) இயற்கை. இயற்கையின் விதியை நீங்கள் தவிர்க்க முடியாது. நீங்கள் இறப்பை தவிர்க்க முடியாது. அதுபோலவே இயற்கை உங்களுக்கு மற்றொரு உடலையும் வழங்கும். இதே பல்கலைக்கழகத்தில் ஒரு மரமாய் பிறந்து, 5000 வருடங்களுக்கு நிற்க வேண்டியது தான். நீ அம்மணமாக இருக்க விரும்பினாய். இப்பொழுது யாரும் ஏன் என்று கேட்கமாட்டார்கள். இங்கேயே அம்மணமாக நில்.