TA/Prabhupada 0114 - ஒரு பண்புள்ள மனிதர் அவர் பெயர் கிருஷ்ணர்



Lecture -- Laguna Beach, September 30, 1972

பகவத்-கீதையில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், தேஹினோ (அ)ஸ்மின் யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா ததா தேஹாந்தர-ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி (பகவத் கீதை 2.13). நீங்கள், நான் - நாம் ஒவ்வொருவரும் - இந்த உடம்பின்னுள் அடைக்கப்பட்டுள்ளோம். நான் ஆன்மீக ஆத்மா; நீங்களும் ஆன்மீக ஆத்மா. அதுதான் வேத விதி, அஹம் ப்ரம்மாஸ்மி: "நான் ப்ரம்மன்." அப்படியென்றால் ஆன்மா, பரப்ரம்மன் அல்ல, தவறு செய்யாதீர்கள். பரப்ரம்மன் என்றால் கடவுள். நாம் ப்ரம்மன், பகவானின் அம்சங்கள், சிறு ததுகள்கள். ஆனால் உன்னதமானவர் அல்ல, அந்த பரமபுருஷர் வேறு. எடுத்துக்காட்டாக, நீங்கள் அமெரிக்கர், ஆனால் மிகவுயர்ந்த அமெரிக்கர், திரு நிக்ஸன் ஆவார். ஆனால், "நான் அமெரிக்கர், ஆகையினால் நான்தான் திரு நிக்ஸன்," அப்படி நீங்கள் சொல்ல முடியாது. அதுபோலவே, நீங்கள், நான், நாம் ஒவ்வொருவரும், ப்ரம்மன், ஆனால் அதற்காக நாம் அனைவரும் பரப்ரம்மன் என சொல்வது தவறு. பரப்ரம்மன் என்பவர் கிருஷ்ணர். ஈஷ்வர: பரமஹ கிருஷ்ணஹ (பிரம்ம சம்ஹிதா 5.1). ஈஷ்வர: பரமஹ. ஈஷ்வர: என்றால் ஆள்பவர். ஆகையால் நாம் ஒவ்வொருவரும் ஓரளவுக்கு ஆள்பவர்கள் தான். ஒருவன் தன் குடும்பத்தை, தன் அலுவலகத்தை, செய்யும் தொழிலை, சீடர்கள், இவைகளை எல்லாம் கட்டுப்படுத்துகிறான். கடைசியாக அவன் ஒரு நாயையாவது கட்டுப்படுத்துகிறான். அவனுக்கு கட்டுப்படுத்த வேறு ஒன்றும் கிடைக்காதபோது, ஒரு நாயையோ பூனையோ வளர்த்து அதை கட்டுப்படுத்துகிறான். ஆகையால் அனைவரும் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். அதுதான் உண்மை. ஆனால் அனைத்தையும் கட்டுப்படுத்துபவர் கிருஷ்ணரே. இங்கு கட்டுப்படுத்துபவன் என்றழைக்கப்படுபவன், மற்றொருவரால் கட்டுப்படுத்தப்படுகிறான். நான் என் சீடர்களை கட்டுப்படுத்தலாம், ஆனால் நான் மற்றொருவரால் கட்டுப்படுத்தப்படுகிறேன், என்னுடைய ஆன்மீக குருவால். ஆக ஒருவரும், "நான் தான் அனைத்தையும் கட்டுப்படுத்துப்பவன்," என கூறமுடியாது. இல்லை. இங்கு கட்டுப்படுத்துபவன் என்று அழைக்கப்படுபவன், ஓரளவுக்கு கட்டுப்படுத்தினாலும், அவனும் கட்டுப்படுத்தப்படுகிறான். ஆனால் ஒருவர் கட்டுப்படுத்துபவராக மட்டும் இருந்து, வேறு யாருக்கும் கட்டுப்படாமல் இருந்தால், அவர்தான் கிருஷ்ணர். கிருஷ்ணரை புரிந்துகொள்வது அவ்வளவு கடினமல்ல. இதை புரிந்துக் கொள்ள முயலுங்கள், அதாவது, அனைவரும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறோம், நாம் ஒவ்வொருவரும், ஆனால் அதே நேரத்தில் யாரோ ஒருவரால் கட்டுப்படுத்தப்படுகிறோம். ஆனால் நாம் ஒரு நல்ல மனிதரை பார்க்கிறோம், அவர் பெயர் கிருஷ்ணர். அவர் எல்லோரையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார், ஆனால் அவர் யாருக்கும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. அவர்தான் கடவுள். ஈஷ்வர: பரம: க்ருஷ்ண: ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹ: அனாதிர் ஆதிர் கோவிந்த: ஸர்வ–காரண-காரணம் (பிரம்ம சம்ஹிதா 5.1). ஆக இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது மிக விஞ்ஞானபூர்வமானது , அதிகாரப்பூர்வமானது மற்றும் ஒரு புத்தியுள்ள மனிதரால் புரிந்துகொள்ளக் கூடியது. ஆக நீங்கள், தயவுசெய்து, இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் ஆர்வம் காட்டினால், பிறகு பயனடைவீர்கள். உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையின் இலக்கை அடைவீர்கள். அதுதான் உண்மை. ஆக நீங்கள் எங்கள் இலக்கியத்தை படிக்க முயற்சி செய்யலாம். எங்களிடம் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. நடைமுறையில் எங்கள் மாணவர்கள் எவ்வாறு பயிற்சி செய்கிறார்கள், கிருஷ்ண உணர்வில் முன்னேறுகிறார்கள் என்பதை நீங்கள் வந்து பார்க்கலாம் அவர்களுடன் தொடர்பு கொண்டு நீங்களும் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள முயலலாம். எப்படி என்றால், ஒருவன் மெக்கானிக் ஆக விரும்பினால், அவன் ஒரு தொழிற்சாலைக்கு செல்ல வேண்டும். மேலும் பணியாட்களுடன், மற்ற மெக்கானிக்களுடன் சேர்ந்து, படிப்படியாக அவனும் மெக்கானிக்கோ, தொழில்நுட்பாளரோ ஆகலாம். அதுபோலவே, நாங்கள் இந்த மையங்களை திறந்துக் கொண்டிருப்பது ஏனென்றால், அனைவருக்கும் இறைவனின் திருநாட்டிற்கு திரும்பிச் செல்ல ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்காகத்தான். அதுதான் எங்கள் குறிக்கொள். மேலும் மிகவும் விஞ்ஞானபூர்வமானது, வேதங்களின் அதிகாரம் வாய்ந்தது. நாம் இந்த அறிவை கிருஷ்ணரிடமிருந்து நேரடியாக பெற்றுக் கொண்டிருக்கிறோம், அவர்தான் முழுமுதற் கடவுள். அதுதான் பகவத்-கீதை. நாம் பகவத்-கீதையை உண்மையுருவில், முட்டாள்தனமான கருத்துக்கள் ஏதும் இல்லாமல் வழங்குகிறோம். பகவத்-கீதையில், கிருஷ்ணர், அவர்தான் முழுமுதற் கடவுள் என்று கூறுகிறார். நாங்களும் அதே கருத்தை தான் முன்வைக்கிறோம், அதாவது முழுமுதற் கடவுள் கிருஷ்ணரே. நாங்கள் அதை மாற்றவில்லை. கிருஷ்ணர் பகவத்-கீதையில் கூறுகிறார், "என்னுடைய பக்தராகுங்கள். எப்பொழுதும் என்னையே நினையுங்கள். என்னை வணங்குங்கள். உங்கள் மரியாதையை என்னிடம் செலுத்துங்கள்." நாங்கள் மக்கள் அனைவருக்கும் இதை கற்பிக்கிறோம், அதாவது "நீங்கள் எப்பொழுதும் கிருஷ்ணரை நினையுங்கள்- ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே / ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே." இந்த ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபிப்பதினால், நீங்கள் எப்பொழுதும் கிருஷ்ணரை நினைப்பீர்கள்.