TA/Prabhupada 0181 - நான் இறைவனோடு நெருங்கிய உறவு கொள்வேன்



Evening Darsana -- August 9, 1976, Tehran

பிரபுபாதா: ஆன்மீக பயிற்சி என்றால், முதலில் உங்களுக்கு சற்று நம்பிக்கை இருக்க வேண்டும் “நான் இறைவனோடு நெருங்கிய உறவு கொள்வேன்” என்று, இந்த நம்பிக்கை வராத வரை, ஆன்மீக பயிற்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. நீங்கள் வெறுமனே “இறைவன் மிகச் சிறந்தவர், அவர் தன் இருப்பிடத்தில் இருக்கட்டும். நான் என் இருப்பிடத்தில் இருந்து விடுகிறேன்” என்ற திருப்தியோடு இருந்தால், அது அன்பில்லை. நீங்கள் இறைவனை மேலும் மேலும் நெருக்கமாக அறிந்து கொள்ளும் ஆர்வத்தோடு இருக்க வேண்டும். பின்னர் அடுத்த கட்டம், நீங்கள் கடவுளின் பணியில் மட்டுமே தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்களோடு சகவாசம் ஏற்படுத்திக் கொண்டாலன்றி இறைவனைப் பற்றி எப்படி அறிய முடியும். அவர்களுக்கு வேறு பணியே கிடையாது. நாம் மக்களுக்குப் பயிற்சி அளிப்பது போல, அவர்கள் இறைவனின் பணிக்கென்றே இருப்பவர்கள். அவர்களுக்கு வேறு வேலை எதுவும் கிடையாது. மக்கள் எப்படி இறைவனைப் புரிந்து கொள்ள முடியும், எப்படி பயனடைய முடியும், என்று அவர்கள் பல்வேறு வழியிலும் திட்டமிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆகையால், இறைவன் மீது நம்பிக்கையுடைய, அவரின் ஞானத்தை உலகெங்கும் பரப்ப முயலும் அத்தகைய நபர்களைச் சென்று அடைய வேண்டும். அவர்களோடு கலந்து இணைய வேண்டும். எல்லாவற்றிற்கும் முன், உங்களுக்கு, “இவ்வாழ்வில் நான் இறைவனைப் பற்றி முற்றிலும் அறிந்து கொண்டுவிடுவேன்” என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். பின்னர் இறைவனின் பணியிலேயே முனைந்திருப்பவர்களைச் சென்றடைய வேண்டும். பின்னர், அவர்கள் நடந்து கொள்வதைப் போலவே நீங்களும் நடந்து கொள்ளுங்கள். பிறகு இந்தப் பௌதிக வாழ்வின் மேல் உங்களுக்கு இருக்கும் தவறான கருத்துக்கள் நீங்கிவிடும். அதன் பின் உங்களுக்கு ஆன்மீகத்தில் ஒரு பிடிப்பு ஏற்படும். பிறகு உங்களுக்கு அதன் ருசி கிடைக்கும். இவ்விதம் நீங்கள் இறைவன் மீதான அன்பை வளர்த்துக்கொள்வீர்கள்,

அலி: எனக்கு ஏற்கனவே நம்பிக்கை இருக்கிறது.

பிரபுபாதா: அதை நீ வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு தொடக்க நிலை நம்பிக்கை மட்டும் இருப்பது, அது நல்லது தான், ஆனால் அந்த நம்பிக்கையை மேன்மேலும் வளர்த்துக் கொள்ளவில்லையென்றால், முன்னேற்றம் இருக்காது.

பரிவ்ராஜகாசார்யா: அந்த நம்பிக்கையை இழந்துவிடும் அபாயம் இருக்கிறது.

பிரபுபாதா: ஆம், நீ முன்னேறுவதற்கு முயற்சி செய்து, படிப்படியாக முன்னோக்கிச் செல்லவில்லை என்றால், உன்னிடம் இருக்கும் அந்தச் சிறிய நம்பிக்கையும் மறைந்துவிடும் அபாயம் இருக்கிறது.