TA/Prabhupada 0213 - மரணத்தை நிறுத்துங்கள். பிறகு உங்கள் தாந்திரிகத்தை நான் பார்க்கிறேன்.



Morning Walk -- June 17, 1976, Toronto

பக்த ஜீன்: இது என் மனதில் ஒரு கேள்வியை எழுப்புகிறது. கி.பி.100 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை, கிறித்துவத்தில் மர்ம ஆன்மீகத்தின் வரலாறே இருக்கிறது. வரலாற்றில் பிரபலமான சில சித்தர்கள் இருந்தார்கள், மற்றும் பலர், அவ்வளவு பிரபலம் அடையாதவர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். உங்களைப் பொறுத்த வரை, பிராட்டஸ்டண்ட மற்றும் கத்தோலிக்க பிரிவினைகளைச் சேர்ந்த இந்த கிறிஸ்துவ சித்தர்கள் எந்த எண்ணிக்கையில் வருகிறார்கள்? பிரபுபாதர்: அது வெறும் ஒரு வகையான சித்தயோக முறை. அதற்கும் ஆன்மீக வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சாதாரண மக்கள் பொதுவாக இதுபோன்ற அற்புத சித்தச் செயல்களை பார்க்க விரும்புவார்கள். ஆக இப்படி சித்த வித்தைகளை காண்பித்து அவர்களை பிரமிக்க வைப்பது தான் அவர்கள் வேலை. அவ்வளவு தான். அதற்கு ஆன்மீகத்துடன் எந்த சம்பந்தமும் கிடையாது. பக்த ஜீன்: ஒருவேளை நீங்கள் என்னை தவறாக புரிந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். நான் பக்திமார்க்கத்தை கடைப்பிடிக்கும் உண்மையான சித்தர்களை பற்றி பேசிக்கொண்டிருந்தேன். சிலுவையின் புனித ஜான், அசிசியின் புனித பிரான்சிஸ் போன்றவர்கள். பிரபுபாதர்: பக்தித்தொண்டு இருந்தால், அங்கு மர்மம் இருக்க வேண்டிய அவசியம் என்ன? அதற்கு அவசியமே இல்லை. இறைவன் தான் என் எஜமான், நான் அவருக்கு அடியான். இதில் அர்த்தமற்ற மர்மத்திற்கு என்ன அவசியம்? பக்த ஜீன்: ஆன்மீகம் என்ற வார்த்தையை பலர் பலவிதமாக பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன், குறிப்பாக இங்கு இந்த அமெரிக்காவில். பிரபுபாதர்: நமக்கு அந்தப் பலரோடு எந்த சம்பந்தமும் கிடையாது. உண்மையிலேயே நீங்கள் இறைவனின் அடியார் என்றால், கடவுள் இருக்கிறார், மற்றும் நீங்கள் அவருக்கு பணியாளர், இவ்வளவு தான் நம் சிந்தனை. ஆக இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவது தான் உங்கள் வேலை. பிறகு உங்களுக்கு எதற்காக இந்த மர்மம், சித்தி எல்லாம் தேவை? மக்களுக்கு வெறும் மாய வித்தை காட்டவா? நீங்கள் இறைவனுக்கு பணி புரியுங்கள். அவ்வளவுதான். அது மிகவும் சுலபமான விஷயம், கடவுள் இட்ட ஆணை. மன்-மனா பவ மத்-பக்தோ மத்-யாஜீ மாம் நமஸ்குரு (பகவத் கீதை 18.65) இதில் எந்த விதமான மர்மத்திற்கும் இடமே இல்லை. கடவுள், "எப்பொழுதும் என்னையே சிந்தனை செய். என்னை வணங்கி என்னையே வழிபடுவாயாக." என்கிறார். அவ்வளவுதான். இங்கு மர்மத்திற்கு அவசியம் என்ன? இதுவெல்லாம் தேவையில்லாத குழப்பம் உண்டாக்குவதற்குத் தான். இந்தியன்: நான் நினைக்கிறேன், அதில் ஒரு கருத்து... பிரபுபாதர்: நீங்களே ஒரு கருத்தை உருவாக்குகிறீர்கள். இந்தியன்: இல்லை ஐயா. மக்கள் மனதில் ஒரு தவறான கருத்து இருக்கிறது. பிரபுபாதர்: நீங்கள் பரம்பரையின் வழிக்கு வராத வரை உங்கள் கருத்துக்கு எந்த அர்த்தமும் கிடையாது. இந்தியன்: இல்லை, ஐயா. மர்ம ஆன்மீகத்தைப் பற்றிய ஒரு தவறான கருத்து உள்ளது. அதாவது ஆன்மீக முன்னேற்றத்துடன் நமக்குள் வளரும் ஒரு விஷயம் தான் அந்த மர்மம், சித்திகள் எல்லாம் என்று சொல்கிறார்கள். அதைத் தான் அவர் சொல்ல வருகிறார் என்று நினைக்கிறேன். பிரபுபாதர்: நாம் இந்த பௌதிக உலகில் ஜென்மம் ஜென்மங்களாக தொடர்ந்து துன்பப்படுகிறோம். அதுதான் நம் பிரச்சினை. மற்றும் கடவுளிடம், அவர் திருநாட்டிற்கு எப்படி திரும்பிச் செல்வது என்பது தான் நம் வாழ்க்கையின் இலக்கு. அது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் ஏதோ மர்மமாக நடக்கிறார்கள் அவ்வளவு தான். அவர்கள் மரணத்தை நிறுத்தட்டும். அப்பொழுது உங்கள் மர்ம சித்திகளை நான் பார்க்கிறேன். என்ன இது அபத்தமான மர்மம், சித்தயோகம் எல்லாம்? உங்களால் மரணத்தை நிறுத்த முடியுமா? அது சாத்தியமா? பிறகு இந்த மர்மம், தந்திரம் எல்லாம் எதற்காக? எல்லாம் போலி. என் பிரச்சனை என்னவென்றால் நான் ஒரு உடலை ஏற்று துன்பத்தை அனுபவிக்கிறேன், ஏனென்றால் இந்த ஜட உடலை பெற்றவுடனேயே துன்பங்களும் பின்தொடருகின்றன. பிறகு நான் இன்னொரு உடலை உருவாக்குகிறேன். மரணம் அடைகிறேன். ததா தேஹாந்தர-ப்ராப்திஹி (பகவத் கீதை 2.13). மீண்டும் வாழ்க்கையின் ஒரு அத்தியாயம் தொடங்குகிறது. இப்படி, ஒரு புல் ஜென்மத்திலிருந்து தேவர்கள் வரை, நான் வெறும் வெவ்வேறு உடல்களை மாறி மாறி பெற்று, அடுத்தடுத்து பிறந்து மீண்டும் மீண்டும் மரணம் அடைகிறேன். இது தான் என் பிரச்சனை. ஆக இந்த மர்மத்தனத்தால் என்ன செய்ய முடியும்? ஆனால் அவர்களுக்கு பிரச்சினை என்னவென்பதே தெரியாது. இது பகவத் கீதையில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி-துக்க-தோஷானுதர்ஷனம் (பகவத் கீதை 13.9) பிறப்பு இறப்பு என்னும் சுழற்சி தான் உங்கள் பிரச்சினை. மேலும் நீங்கள் உயிரோடு இருக்கும் வரை இப்படி பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஜரா-வ்யாதி. குறிப்பாக முதுமை மற்றும் நோய். ஆக இது தான் பிரச்சனை. இந்த மர்ம சித்திகளால் எப்படி உதவ முடியும்? மர்ம சித்திகள் உங்கள் பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோயைத் தடுத்து நிறுத்திவிடுமா? அவ்வாறு நிறுத்த முடிந்தால் தான் அது உண்மையான யோக சித்தி. இல்லையெனில், அப்படிப்பட்ட முட்டாள்தனத்தினால் என்ன பயன். (இடைவெளி) அவர்கள் உண்மையான பாதையிலிருந்து வழிதவற வைக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கையின் இலக்கு என்ன, வாழ்க்கையின் பிரச்சனை என்னவென்பதே தெரியாது. அவர்கள் ஏதோ மர்ம வித்தைகளை செய்து காட்டுகிறார்கள். சில அயோக்கியர்களும் அவர்களை பின்பற்றுகிறார்கள். அவ்வளவுதான். "இவர் தான் சித்தர்" என கோஷம் எழுப்புகிறார்கள். இந்தியன்: பக்தர்களின் சகவாசம் எவ்வளவு முக்கியமானது? பிரபுபாதர்: ஆம். ஸதாம் ப்ரஸங்கான் மம வீர்ய-ஸம்விதோ பவந்தி ஹ்ருத்-கர்ண-ரஸாயனாஹா கதாஹா (ஸ்ரீமத் பாகவதம் 3.25.25). எனவே சாது-சங்கம் தேவை. பக்தர்களின் சகவாசம் நமக்கு தேவை. அது கிடைத்தால் வாழ்க்கையின் இலக்கை நம்மால் அடைய முடியும். மர்ம யோக சித்திகளால் அல்ல.