TA/Prabhupada 0249 - ஏன் யுத்தம் ஏற்படுகிறது? என்று கேள்வி எழுப்பப்பட்டது
Lecture on BG 2.6 -- London, August 6, 1973
எனவே அர்ஜூனர், தான் போராடலாமா வேண்டாமா என்று யோசித்துப் பார்ப்பதற்கு இடமே இல்லை. கிருஷ்ணர் அங்கீகரித்துவிட்டார். எனவே போராட்டம் நடந்தே ஆகவேண்டும். நாங்கள் நடந்து கொண்டிருந்த போது, "யுத்தம் எதற்காக ஏற்படுகிறது?" என ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அது புரிந்து கொள்வதற்கு அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. ஏனென்றால் நாம் அனைவரிடமும் சண்டையிடும் உணர்வு இருக்கிறது. குழந்தைகள் கூடச் சண்டையிடுவார்கள், பூனைகளும் நாய்களும் சண்டையிடுவது உண்டு. பறவைகள் சண்டையிடும், எறும்புகள் சண்டையிடும். நாம் பார்த்திருக்கிறோம். ஆக ஏன் மனிதர்கள் மட்டும் கூடாது? போராடும் உணர்வு இருக்கத்தான் செய்யும். நம் உயிருள்ள நிலைக்கான அறிகுறிகளில் அதுவும் ஒன்று. சண்டையிடுவது. ஆக எப்போது அப்படி ஒரு சண்டை நடக்க வேண்டும்? இந்த காலத்தில், அளவுக்கு மீறிய இலட்சியங்கள் கொண்ட அரசியல்வாதிகள் சண்டை போட்டுகிறார்கள் என்பது வாஸ்தவம். ஆனால் வேத கலாச்சாரத்தின்படி, போர் என்றால் தர்ம-யுத்தம். சமய கோட்பாடுகளின் அடிப்படையில் செய்த யுத்தம். இந்த வாதம் அந்த வாதம் என்று, மனம்போன போக்கில் உருவாக்கப்பட்ட பல்வேறு அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் அல்ல. இதோ, இப்போது இரு அரசியல் பிரிவினர்கள், அதாவது பொதுவுடைமைவாதிகள் மற்றும் முதலாளித்துவவாதிகளுக்கு இடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் போரை தவிர்க்க முயல்கிறார்கள், ஆனால் சண்டை என்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்கா ஒரு துறைக்கு வந்த உடனேயே ரஷ்யாவும் தன் பலத்தை வெளிப்படுத்த அங்கே நுழையும். இந்தியா பாக்கிஸ்தானிற்கு இடையே நடந்த கடந்த போரில், ஜனாதிபதி நிக்சன், இந்தியப் பெருங்கடலில், வங்காள விரிகுடாவில், கிட்டத்தட்ட இந்திய கடற்கரைக்கே, ஏழாவது கடற்படையை அனுப்பியவுடனேயே... அது சட்டவிரோதமான செயல். ஆனால் அமெரிக்காவுக்கு அகம்பாவம் அதிகம். ஆக பாக்கிஸ்தானுக்கு தன் அனுதாபத்தைக் காட்டவோ என்னவோ, ஏழாவது கடற்படையை அனுப்பியது. ஆனால் உடனே நமக்கு ஆதரவாக ரஷ்யாவும் அங்கு தன் படையை அனுப்பியது. எனவே, அமெரிக்கா பின் வாங்க வேண்டி வந்தது. இல்லையெனில், அமெரிக்கா பாக்கிஸ்தானின் சார்பாக தாக்குதல் நடத்தியிருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆக இது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. போரை உங்களால் நிறுத்த முடியாது. போரைத் நிறுத்துவது எப்படி என்று பலர் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது சாத்தியமே இல்லை. அது அறிவில்லாத சிந்தனை. அது முடியவே முடியாது. ஏனென்றால் போராட்ட உணர்வு அனைவரிடமும் இருக்கிறது. அது உயிருடன் இருக்கும் ஜீவனின் அறிகுறி. அரசியல், பகை உணர்வு எல்லாம் இல்லாத குழந்தைகள் கூட, ஒரு ஐந்து நிமிடங்களுக்குச் சண்டை போடுவார்கள்; பின்பு மீண்டும் நண்பர்கள் ஆகிவிடுவார்கள். ஆக போராட்ட உணர்வு இருக்கிறது. இப்போது, அதை எப்படி சரியாக பயன்படுத்திக்கொள்வது? நம் கிருஷ்ண பக்தி இயக்கம் இருக்கிறது. நாம் உணர்வைப் பற்றி பேசுகிறோம். நாங்கள், "சண்டையை நிறுத்துங்கள்" என்றோ, "அதற்காக இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள்" என்றோ சொல்வதில்லை. இல்லவே இல்லை. எல்லாம் கிருஷ்ண பக்தி உணர்வில் செய்யப்பட வேண்டும். அது தான் எங்கள் பிரச்சாரம். நிர்பந்த-கிருஷ்ண-சம்பந்தே. நீங்கள் என்ன செய்தாலும், கிருஷ்ணரை திருப்தி படுத்தும் நோக்கத்துடன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். கிருஷ்ணருக்கு திருப்தி ஏற்படும் என்றால், நீங்கள் ஒரு விஷயத்தை செய்யலாம். அது தான் கிருஷ்ண பக்தி உணர்வு. கிருஷ்ணேந்திரிய த்ருப்தி வாஞ்சா தார நாம ப்ரேம (சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை 4.165). இது தான் அன்பு. நாம் ஒருவரை நேசித்தால், அந்த நபருக்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்போம். சிலசமயம் அப்படி நாம் உண்மையிலேயே செய்வதும் உண்டு. அப்படித்தான். அதுபோலவே தான். அதே உணர்வை கிருஷ்ணரிடம் திருப்ப வேண்டும். அவ்வளவுதான். கிருஷ்ணரை எப்படி நேசிப்பது மற்றும் கிருஷ்ணருக்காக மட்டுமே எப்படி செயல்படுவது என்ற கல்வியை கற்க முயலுங்கள். இது தான் வாழ்க்கையின் பூர்ணத்துவம். ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே (ஸ்ரீமத் பாகவதம் 1.2.6). பக்தி என்றால் தொண்டு, பஜ-செவாயாம். இந்த பஜ என்ற சொல், அது திருத்தொண்டை குறிக்கிறது, பஜ. மேலும் இதில் சமஸ்கிருத இலக்கணம் இருக்கிறது. பஜ என்ற சொல்லை பெயர்ச்சொல் ஆக்குவதற்கு, 'க்தி' என்ற ப்ரத்யயம் சேர்க்கப்படுகிறது. இது வினைச்சொல். ஆக 'க்தி' ப்ரத்யயம், 'தி' ப்ரத்யயம் என பல ப்ரத்யயங்கள் உள்ளன. ஆக பஜ என்ற மூலச்சொலுடன், 'க்தி' என்ற சொல்லை சேர்த்தால், பக்தி என்ற வார்த்தை உருவாகிறது. ஆக பக்தி என்றால் கிருஷ்ணரைத் திருப்திப் படுத்துவதாகும். பக்தி என்ற வார்த்தை வேறு யாருக்கும் பொருந்தாது. யாராவது, "நான் காளி அம்மனின் பரம பக்தன்," என்று சொன்னால், அது பக்தி அல்ல, வியாபாரம். ஏனென்றால் நீங்கள் வேறு எந்த தேவியையும், தேவனையும் வணங்கினாலும், அதில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கும். பொதுவாக, மக்கள் அசைவம் உண்பதற்காக காளியின் பக்தர் ஆகி விடுவர். அது தான் அவர்களின் நோக்கம். வேத கலாச்சாரத்தில், இறைச்சி உண்பவர்களுக்கு, "கசாப்புக் கடையிலிருந்தோ சந்தையிலிருந்தோ வாங்கிய இறைச்சியை உண்ணக்கூடாது," என்று அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. உண்மையில், இந்த கசாப்புக் கடை என்ற விவகாரம், உலகம் முழுவதும் ஒருபோதும் இருந்ததில்லை. இது சமீபத்திய கண்டுபிடிப்பு தான். நாங்கள் கிறித்துவர்களோடு சில சமயம் பேசும்போது, "கர்த்தர், 'கொலை செய்யாதிருப்பாயாக' என்கிறார்; பின்னர் ஏன் நீங்கள் கொலை செய்கிறீர்கள்?" என்று நாங்கள் கேட்டால், "ஏசு நாதரே சில நேரங்களில் இறைச்சி சாப்பிட்டாரே," என்று ஆதாரங்களைக் காட்டுவார்கள். சில நேரங்களில் ஏசுநாதார் இறைச்சி சாப்பிட்டார், சரி, ஆனால் "பெரிய, பெரிய கசாப்புக் கடைகளை அமைத்து இறைச்சி சாப்பிட்டுக் கொண்டே இருங்கள்?" என்றா கர்த்தர் கூறினார்?" இது சிந்தனையே இல்லாத வாதம். ஏசுநாதர் சாப்பிட்டிருக்கலாம். சில நேரங்களில் அவர்... எந்த உணவும் கிடைக்காத பட்சத்தில், உங்களால் என்ன செய்ய முடியும்? அது வேறு விஷயம். பஞ்சம் என்று ஏற்பட்டால், இறைச்சியைத் தவிர வேறு எந்த உணவும் இல்லாத நிலை ஏற்பட்டால்... அந்த காலமும் வரப்போகிறது. இந்த காலத்தில், கலியுகத்தில், படிப்படியாக உணவு தானியங்கள் குறைந்துவிடும். அது ஸ்ரீமத் பாகவதத்தில், பன்னிரண்டாவது காண்டத்தில் கூறப்பட்டுள்ளது. அரிசி இருக்காது, கோதுமை, பால், சர்க்கரை எதுவும் கிடைக்காது. இறைச்சியை தான் சாப்பிட நேரும். இது தான் நிலைமையாக இருக்கும். ஒருவேளை மனித மாமிசத்தைக் கூட உண்ண வேண்டி வரலாம். இந்தப் பாவம் நிறைந்த வாழ்க்கை மென்மேலும் தாழ்வடைந்து வருகிறது. மக்கள் மென்மேலும் பாவிகள் ஆகிவிடுவார்கள். தான் அஹம் த்விஷதஹ க்ரூரான் க்ஷீபாமி அஜஸ்ரம் அந்தே-யோனிஷு (பகவத் கீதை 16.19). அரக்கர்கள், பாவிகள், இயற்கையின் நியதிப்படி, எப்படிப்பட்ட சூழ்நிலையில் வைக்கப்படுவார் என்றால், இறைவனை புரிந்து கொள்ள இயலவே இயலாத வகையில் அவன் மேன்மேலும் தனது அரக்ககுணத்தை அதிகரித்துக்கொள்வான். இது தான் இயற்கையின் நியதி. நீங்கள் இறைவனை மறக்க விரும்பினால், நீங்கள் இறைவனை ஒருபோதும் புரிந்து கொள்ளவே முடியாத நிலையில் அவர் உங்களை வைப்பார். அதுதான் அரக்க வாழ்க்கை. அந்த நேரமும் வந்து கொண்டிருக்கிறது. தற்போது, இறைவனை அறிந்துகொள்ள இன்னும் ஒரு சிலருக்கு ஆர்வம் இருக்கிறது. அர்தோ அர்த்தார்த்தி ஜிக்ஞாசு ஞானி (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 24.95). ஆனால் இறைவனை புரிந்து கொள்ளும் அறிவாற்றலே இல்லாத அந்த நேரம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அது தான் கலியுகத்தின் கடைசி நிலை, அந்த நேரத்தில் கல்கி அவதாரம் நடக்கும். அந்த நேரத்தில் இறையுணர்வைப் பற்றி எந்தப் பிரச்சாரமும் இருக்காது, நேராக கொலை தான், வெறும் கொலை தான். கல்கி அவதாரத்தில் தன் வாளைக் கொண்டு நேராக படுகொலை செய்வார். அதன்பின் மீண்டும் சத்திய-யுகம் வரும். மீண்டும் பொற்காலம் வரும்.