TA/Prabhupada 0264 - மாயாவும் கிருஷ்ணருக்கு சேவை செய்கிறாள்.. அந்த சேவைக்கு நன்றி எதிர்பார்பதில்லை



Lecture -- Seattle, September 27, 1968

தமால கிருஷ்ணன் : மாயா ஒரு தூய பக்தையா? மாயா. பிரபுபாதர்: தூய பக்தர்கள், இல்லை, அவர்கள் மாயையில் இருப்பதில்லை. தமால கிருஷ்ணன் : இல்லை, இல்லை. மாயா தேவி ஒரு தூய பக்தையா ? பிரபுபாதர் : ஆம் . நிச்சயமாக. காவலர்கள், அரசாங்கத்தின் விசுவாசமுள்ள பணியாளர்கள் இல்லையா என்ன ? காவலர்கள் உங்களை துன்புறுத்துவதால் அவர்கள் அரசாங்க பணியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமாகுமா ? அவர்களின் பணி, நன்றியை எதிர்பார்க்க முடியாத ஒரு பணி, அவ்வளவு தான். அதுபோலவே, மாயாவும் கிருஷ்ணருக்கு சேவை செய்கிறாள், அந்த சேவைக்கு யாரும் நன்றி தெரிவிப்பதில்லை. அதுதான் வித்தியாசம். கடவுளை நம்பாதவர்களை தண்டிக்கும் பொறுப்பை, நன்றியை எதிர்பார்க்க முடியாத பணியின் பொறுப்பை அவள் ஏற்றிருக்கிறாள், அவ்வளவு தான். ஆக வாஸ்தவத்தில், மாயா கிருஷ்ணரிடமிருந்து விலகி இல்லை. வைஷ்ணவி. சண்டி, அதாவது மாயாவை வர்ணிக்கும் நூல் ஒன்றில், "வைஷ்ணவி" என்று அழைக்கப்பட்டிருக்கிறாள். மாயா , வைஷ்ணவி என்று அழைக்கப்படுகிறாள். தூய பக்தன் வைஷ்ணவன் என்று அழைக்கப்படுவதை போல், அவள் வைஷ்ணவி என்று அழைக்கப்படுகிறாள். விஷ்ணுஜன : எப்படி நீங்கள் அனைத்தையும் இவ்வளவு சுலபமாக புரிய வைக்கிறீர்கள் ? பிரபுபாதர் : ஏனென்றால் தத்துவம் முழுவதுமே மிகவும் சுலபமானது தான். கடவுள் மிகச்சிறந்தவர்; ஆனால் நாம் அப்படி கிடையாது. நான் தான் கடவுள் என்ற முடிவுக்கு வராதே. கடவுள் இல்லை என்ற முடிவு செய்யாதே. கடவுள் இருக்கிறார், மற்றும் அவர் மிகச்சிறந்தவர். நீ மிகவும் சிறியவன். அப்பொழுது உன்னுடைய நிலை என்ன ? நீ கிருஷ்ணருக்கு சேவை செய்யவேண்டும். இது மிகவும் எளிய உண்மை. ஆக அந்த கீழ்ப்படியாத மனப்பான்மை தான் மாயா. "கடவுள் இல்லை. கடவுள் இறந்துவிட்டார். நான் தான் கடவுள். நீ தான் கடவுள்," என்று யார் கூறுகிறார்களோ, அவர்கள் மாயாவின் வசியத்தால் கட்டுப்பட்டு இருக்கிறார்கள். பிஷாசி பாயிலே ஏன மதி-சன்ன ஹய. ஒருவனுக்கு பேய் பிடித்திருக்கும் பொழுது அவன் எப்படி கண்டபடி எல்லாம் உளறுவானோ அப்படித்தான். அதுபோலவே இப்படிப்பட்டவர்கள் எல்லாம் மாயைக்கு வசப்பட்டு இருக்கிறார்கள். அதனால்தான் "கடவுள் இறந்துவிட்டார். நான் தான் கடவுள். நீ ஏன் கடவுளை எல்லாவற்றிலும் தேடுகிறாய்? தெருவில் பல கடவுள்கள் சுற்றித்திரிவதை பார்," என்றெல்லாம் பிதற்றுகிறார்கள். அவர்கள் அனைவருமே பேய் பிடித்தவர்கள், புத்தி சீர்கெட்டுப் போனவர்கள். ஆக, இவர்களை நாம், திவ்யமான ஹரே கிருஷ்ண உச்சாடனத்தால் குணப்படுத்த வேண்டும். இதுதான் குணப்படுத்தும் முறை. அவர்கள் இதை கேட்டாலே போதும், படிப்படியாக குணமடைவார்கள். நன்றாக தூங்கிக்கொண்டிருப்பவன் பக்கத்தில் சென்று கத்தினால் அவன் எப்படி விழிப்படைகிறானோ அப்படித்தான். தூங்கிக்கொண்டிருக்கும் மனித சமுதாயத்தை விழிப்பூட்டச் செய்யும் மந்திரம் இது தான். உத்திஷ்ட உத்திஷ்ட ஜாக்ரத ப்ராப்ய வரான் நிபோதத. வேதங்கள் கூறுகின்றன, " மனித இனமே, எழுந்திரு." இதற்கு மேலும் தூங்காதே. மனித உடல் எனும் வாய்ப்பை நீ பெற்றிருக்கிராய். அதை சரியாக பயன்படுத்திக்கொள். மாயையின் பிடியிலிருந்து உன்னை விடுவித்துக்கொள்." இது தான் வேதங்களின் அறிவிப்பு. ஆக, நீங்கள் அந்த வேலையைத் தான் செய்கிறீர்கள். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண ஜெபித்தால் அவர்கள்... பக்தர்கள்: ஹரே கிருஷ்ண! பிரபுபாதர் : ஆம் ? ஜெய-கோபாலன் : இறந்தகாலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் என்பது, பௌதிக ரீதியாக, ஒரு பிரதிபலிப்பா... பிரபுபாதர் : இறந்த காலம், வருங்காலம், நிகழ்காலம் அனைத்துமே வெவ்வேறு சூழ்நிலைகளை சார்ந்த விஷயங்கள். இதற்கு விஞ்ஞான ரீதியான ஆதாரமும் உள்ளது. பேராசிரியர் ஐன்ஸ்டீன் அதை நிரூபித்துள்ளார். உன்னுடைய கடந்த காலம், பிரம்ம தேவருக்கு கடந்த காலம் அல்ல. உன்னுடைய நிகழ்காலம், ஒரு எறும்புக்கு நிகழ்காலம் அல்ல. ஆக கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் - காலம் நிரந்தரமானது. இது வெவ்வேறு உடல்களைச் சார்ந்த உணர்வு. காலம் நிரந்தரமானது. ஒரு சிறு எறும்பைப் போல் தான். இருபத்தி நான்கு மணி நேரத்தில், அந்த எறும்புக்கு நம்மைவிட இருபத்தி நான்கு முறை அதிகமாக கடந்த காலம், ந்கழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் உணர்வு இருக்கும். ரஷ்யாவின் ஸ்புட்னிக் எனும் விண்கலம், பூமியை ஒரு மணி நேரம் இருபத்தி ஐந்து நிமிடங்களில் என்னவோ வலம் வந்தது. நான் சொல்ல நினைத்தது என்னவென்றால், அவர்கள் அந்த நேரத்தில் பூமியை இருபத்தி ஐந்து முறை வலம் வந்தார்கள். அப்படி என்றால், அந்த ஸ்புட்னிக்கில் இருந்தவர், ஒரு மணி நேரம் இருபத்தி ஐந்து நிமிடங்களில், இருபத்தி ஐந்து முறை இரவையும், பகலையும் பார்த்திருக்கிறார். ஆக விண்வெளியில் கடந்த காலம், நிகழ் காலம், இவையின் தோற்றம் எல்லாம் இங்கு நாம் அனுபவிப்பதைவிட வேறுபட்டது. ஆக இந்த கடந்த காலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்பது உன்னுடைய உடலையும் சூழ்நிலையையும் பொறுத்தது. வாஸ்தவத்தில் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று எதுவும் கிடையாது. அனைத்துமே நிரந்தரமானது. நாம் நித்தியமானவனர்கள். நித்யோ ஷாஷ்வதோ (அ)யம் ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே (பகவத் கீதை 2.20). நாம் வாஸ்தவத்தில் இறந்துபோவதில்லை. ஆகவே... மக்களுக்கு தாம் நித்தியமானவர்கள் என்பதே தெரியாது. நிரந்தரமான வாழ்க்கையில் என் கடமை என்ன ? நிரந்தரமான வாழ்க்கை என்றால் என்ன? அவர்கள் வெறும் தற்போது நிகழும் வாழ்க்கையால் முற்றிலும் கவரப்பட்டிருக்கிரார்கள்: "நான் அமெரிக்கன்," "நான் இந்தியன்," "நான் இன்னார்," அவ்வளவு தான். இது அறியாமை. ஆக ஒருவன், கிருஷ்ணருடனான நிரந்தரமான தனது ஈடுபாட்டை தேடி அறிய வேண்டும். பிறகு அவன் சந்தோஷமாக இருப்பான். நன்றி.