TA/Prabhupada 0283 - எங்கள் செயல் திட்டம் அன்பு செலுத்துவது



Lecture -- Seattle, September 30, 1968

பிரபுபாதர்: கோவிந்தம் ஆதி-புருஷ்ம் தமஹம் பஜாமி. பக்தர்கள்: கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி. பிரபுபாதர்: ஆக அந்த கோவிந்தரை, முழுமுதற் புருஷரை அன்புடனும் பக்தியுடனும் வழிபடுவது தான் நமது திட்டப்பணி . கோவிந்தம் ஆதி-புருஷம். இதுதான் கிருஷ்ண உணர்வு. நாங்கள் மக்களுக்கு கிருஷ்ணரை நேசிக்க கற்றுக் கொடுக்கிறோம், அவ்வளவு தான். நமது திட்டப்பணியே அன்பு செலுத்துவது, நம் அன்பை சரியான இடத்தில் காட்டுவது. அதுதான் நமது திட்டப்பணி. எல்லோரும் நேசிக்க விரும்புகிறார்கள், ஆனால் தவறான இடத்தில் அன்பை வைத்திருப்பதால் அவர்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். மக்கள் இதைப் புரிந்துகொள்வதில்லை. "முதலில், நீங்கள் உங்கள் உடலை நேசியுங்கள்," என்று அவர்களுக்கு பாடம் புகுத்தப்படுகிறது. பிறகு அதை ஒரு படி விரிவுபடுத்தி, "நீங்கள் உங்கள் தாய் தந்தையை நேசியுங்கள்." பிறகு "உங்கள் சகோதரர் சகோதரிகளை நேசியுங்கள்." பிறகு "உங்கள் சமூகத்தை நேசியுங்கள், உங்கள் நாட்டை நேசியுங்கள், அனைத்து மனித சமூகத்தை, மனித இனத்தை நேசியுங்கள்," இப்படி கற்றுத்தருகிறார்கள். ஆனால் இப்படி விரிவுபடுத்தப்பட்ட அன்பு, பெயரளவிலான அன்பு, நீங்கள் கிருஷ்ணரை நேசிக்கும் அந்த கருத்துக்கு வந்தால் ஒழிய, உங்களுக்கு திருப்தியை அளிக்காது. இதை உணர்ந்து செயல்பட்டால் தான் நீங்கள் திருப்தி அடைவீர்கள். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு ஏரியில், ஒரு கல்லை விட்டு எறிந்தால், அங்கு உடனேயே ஒரு வட்டமான சிற்றலை தோன்றும். அந்த வட்டம் விரிவடைந்து, பெரிதாகி பெரிதாகி, கரையை தொட்டதும், நின்றுவிடும். அந்த வட்டம் கரையை தொடும்வரை, அது அதிகரித்துக் கொண்டே போகும். ஆக நாமும் நம் அன்பிற்குரியதை அதிகரித்து வருகிறோம். இந்த அதிகரித்தலை சாத்தியம் ஆக்குவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, நீங்கள் இப்படி செய்யலாம், "நான் என் சமூகத்தை நேசிக்கிறேன், என் நாட்டை நேசிக்கிறேன், என் மனித இனத்தை நேசிக்கிறேன்," பிறகு "உயிர்வாழிகள் அனைத்தையும் நேசிக்கிறேன்," இப்படி போய்க்கொண்டே இருக்கலாம்... ஆனால் நீங்கள் நேரடியாக கிருஷ்ணரை அணுகினால், பிறகு அதில் எல்லாமே அடங்கியிருக்கிறது. அது அவ்வளவு இன்பகரமானது. ஏனென்றால் கிருஷ்ணர் என்றால் எல்லா வகையிலும் கவரக் கூடியவர், அதில் அனைத்துமே இருக்கிறது. ஏன் அனைத்தும்? ஏனென்றால் கிருஷ்ணர் தான் மைய்யப்பொருள். உதாரணத்திற்கு, ஒரு குடும்பத்தில், நீங்கள் உங்கள் தந்தையை நேசித்தால், பிறகு நீங்கள் உங்கள் சகோதரர்கள், சகோதரிகள், உங்கள் தந்தையின் பணியாளன், உங்கள் தந்தையின் இல்லம், உங்கள் தந்தையின் மனைவி, அதாவது உங்கள் தாய், இப்படி அனைவரையும் நேசித்ததற்கு சமமாகும். இதில் மையமானவர் தந்தை. இது வெறும் ஒரு உதாரணம் தான். அதுபோலவே, நீங்கள் கிருஷ்ணரை நேசித்தால், பிறகு உங்கள் அன்பு அனைத்தையும் உள்ளடக்கும் வகையில் உலகெங்கும் விரிவடையும். மற்றொரு உதாரணம், நீங்கள் ஒரு மரத்தை, அதன் இலைகள், பூக்கள், கிளைகள், அடிமரம், சிறுகிளைகள் , அனைத்தையும் நேசிக்கலாம். ஆனால் நீங்கள் வெறும் வேரில் நீரை பாய்ச்சால், பிறகு மரத்தின் மீதுள்ள உங்கள் அன்பு தானே நிறைவடையும். நீங்கள் உங்கள் நாட்டு மக்களை நேசித்தால், அவர்கள் கல்வியை பெறவேண்டும், பொருளாதார ரீதியாகவும், மனதளவிலும், உடல் ரீதியாகவும் முன்னேற வேண்டும் என்று விரும்பினால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் அரசாங்கத்திற்கு வரி செலுத்துவீர்கள். உங்கள் வருமான வரியை மறைக்கமாட்டீர்கள். நீங்கள் வெறும் மத்திய அரசுக்கு வருமான வரியை செலுத்துவீர்கள். பிறகு அது கல்வி துறை, தற்காப்பு துறை, சுகாதார துறை, என எல்லா துறைகளுக்கும் வினியோகிக்கப்படும். ஆகையினால்... இவை வெறும் உதாரணங்கள் தான், ஆனால் உண்மையிலேயே, நீங்கள் அனைத்தையும் நேசிக்க விரும்பினால், அப்போது நீங்கள் கிருஷ்ணரை நேசிக்க முயலவேண்டும். நீங்கள் ஏமாற்றம் அடையமாட்டீர்கள் , ஏனென்றால் அது பரிபூரணமானது. உங்கள் அன்பு பரிபூரணமாக இருந்தால், பிறகு நீங்கள் வெறுத்துப் போகமாட்டீர்கள். நீங்கள் நிறைவாக உணவு உண்டால் எப்படி இருக்குமோ, அப்படி தான். நீங்கள் நிறைவாக உண்டு திருப்தி அடைந்தால், பிறகு "நான் திருப்தி அடைந்தேன். எனக்கு போதும்," என்பீர்கள்.