TA/Prabhupada 0300 - மூலமானவர் இறக்கவில்லை



Lecture -- Seattle, October 2, 1968

பிரபுபாதர்: கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி. பக்தர்கள்: கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி. பிரபுபாதர்: ஆக பரமபுருஷரான முழுமுதற் கடவுள், அந்த கோவிந்தரை வழிபடுவது தான் நம் திட்டப்பணி. அந்த முழுமுதற் நபர் யார் என்பதை கண்டுபிடிக்க உதவுவதற்குத் தான் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம். ஒரு குடும்பத்தின் மூல நபர் யார், ஒரு சமூகத்தின் மூல நபர் யார், ஒரு நாட்டின் மூலவர் யார், மனித இனத்தின் மூலவர் யார், என்பதை தெரிந்து கொள்ள இயற்கையாகவே எல்லோரும் ஆர்வமாக இருப்பார்கள்... இப்படி நீங்கள் மேன்மேலும் ஆராயுங்கள். ஆனால், யாரிடமிருந்து அனைத்தும் தோன்றியதோ, அப்பேர்ப்பட்ட ஒரு மூல நபரை உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால், அவர் தான் ப்ரஹ்மன். ஜன்மாதி அஸ்ய யத: (ஸ்ரீமத் பாகவதம் 1.1.1). வேதாந்த-சூத்ரம் கூறுகிறது, யாரிடமிருந்து அனைத்தும் தோன்றியதோ, அவர் தான் ப்ரஹ்மன், அதாவது பூரண உண்மை. மிகவும் எளிதான விளக்கம். கடவுள் யார், பூரண உண்மை என்பது என்னவென்றால், அதற்கு மிகவும் எளிமையான வரைவிளக்கம் - முழுமுதற் நபர். ஆக அந்த முழுமுதற் நபரை அணுகுவது எப்படி, என்பது தான் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம். அந்த முழுமுதற் நபர் இறந்தபோகவில்லை, ஏனென்றால் அனைத்தும் அந்த மூலமானவரிடமிருந்து தான் தோன்றியது, மேலும் அனைத்தும் மிகவும் அழகாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சூரியன் உதிக்கிறது, சந்திரன் உதிக்கிறது, பருவங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன, ஆகையால்... இரவும் பகலும் சீராக வருகின்றன. ஆக அந்த முழுமுதற் நபரின் உடலின் செயல்பாடுகள் அழகாக இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. பிறகு கடவுள் இறந்துவிட்டார் என்று நீங்கள் எப்படி கூறலாம்? உங்கள் உடலையே எடுத்துக் கொள்ளுங்கள், வைத்தியர் உங்கள் நாடியை தொட்டு பார்த்து, இதயம் சரியாக துடிக்கிறதா என்பதை தெரிந்து கொண்டவுடன், "இவர் இறந்துவிட்டார்," என்று சொல்லமாட்டார். "ஆம், இவர் உயிருடன் இருக்கிறார்," என்று தான் சொல்லுவார். அதுபோலவே, நீங்கள் ஓரளவுக்கு புத்திசாலியாக இருந்தால், இந்த பிரபஞ்சம் எனும் உடலின் நாடித்துடிப்பை உணர்வீர்கள் - மேலும் அது நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பிறகு எப்படி நீங்கள் கடவுள் இறந்துவிட்டார் என்று கூறலாம்? கடவுள் ஒருபோதும் இறந்து போவதில்லை. இறந்துவிட்டார் என்று சொல்வது அயோக்கியர்கள் பேசும் பேச்சு - அறிவற்றவர்கள், உயிருள்ளது எது, உயிரில்லாதது எது என்ற உணர்வே இல்லாதவர்கள். ஒரு விஷயம் உயிருள்ளதா இல்லையா என்பதை உணர தெரிந்தவன், புரிந்துகொள்ளக் கூடியவன், கடவுள் இறந்துவிட்டார் என்று ஒருபோதும் சொல்லமாட்டான். எனவே பகவத்-கீதையில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், ஜன்ம கர்ம மே திவ்யம் யோ ஜானாதி தத்வத: (பகவத் கீதை 4.9) "எந்த ஒரு அறிவுள்ளவன், நான் எவ்வாறு ஜனனம் எடுக்கிறேன் மற்றும் நான் எவ்வாறு செயல்புரிகின்றேன் என்பதை வெறும் புரிந்து கொள்கிறானோ," ஜன்ம கர்ம இப்போது, ஜன்ம அதாவது பிறப்பு, மற்றும் கர்ம, அதாவது செயல்கள்; இந்த சொற்களை குறித்துக் கொள்ளுங்கள். அவர் ஜன்ம, ம்ருதியு என்று ஒருபோதும் கூறவில்லை. ம்ருதியு என்றால் இறப்பு. பிறவி எடுத்த எதுக்கும், இறப்பும் இருக்கத் தான் செய்யும். எதுவாக இருந்தாலும் சரி. பிறந்த பிறகு இறந்து போகாத ஒன்றின் எந்த அனுபவமும் நம்க்கு கிடையாது. இந்த உடல் பிறந்திருக்கிறது; ஆகவே இது நிச்சயமாக மரணமும் அடையும். இந்த இறப்பு என்பது என் உடலின் பிறப்புடன் தானாகவே வருகிற விஷயம். என் வயது ஏறிக்கொண்டே போகிறது, அப்படி என்றால் நான் மரணத்தை நோக்கிச் செல்கிறேன். ஆனால் பகவத்-கீதையின் இந்த பதத்தில், கிருஷ்ணர், ஜன்ம கர்ம என்று கூறுகிறார். "என் இறப்பு" என்று ஒருபோதும் கூறவில்லை. அவர் வாழ்க்கையில் இறப்பு இடம் பெறவே முடியாது. கடவுள் நித்தியமானவர் நாமும் அப்படித்தான், வாஸ்தவத்தில் நாமும் மரணம் அடைவதில்லை. அது நமக்கு தெரியாது. நாம் வெறும் நம் உடலை மட்டும் தான் மாற்றுகிறோம். ஆக இதைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். கிருஷ்ண உணர்வு என்பது ஒரு அபாரமான விஞ்ஞானம். அது ஏற்கனவே கூறப்பட்டிருக்கிறது... அது ஒன்றும் புதிய விஷயமல்ல, அது பகவத்-கீதையில் கூறப்பட்டிருக்கிறது... உங்களில் பலருக்கு பகவத்-கீதையுடன் நல்ல பரிச்சயம் இருக்கும். பகவத்-கீதையில், அப்படி ஒரு கருத்து அங்கீகரிக்கப்படவில்லை, அதாவது இந்த உடல் மரணம் அடைந்த பிறகு... மரணம் என்று சொல்ல முடியாது - இந்த உடல் அழிந்த பிறகு, தோற்றம் மற்றும் மறைவு, உடல் மறைந்த பிறகு நீங்களோ நானோ மரணம் அடைவதில்லை. ந ஹன்யதே. ந ஹந்யதே என்றால் "மரணமே அடைவதில்லை" அதாவது இந்த உடல் அழிந்த பிறகும் வாஸ்தவத்தில் "நாம் அழிவதே இல்லை". இது தான் நம் நிலைமை.