TA/Prabhupada 0346 - பிரசாரம் இல்லாமல், தத்துவங்களை புரிந்துகொள்ளாமல், பலவீனமாகி விடுவீர்கள



Morning Walk -- December 12, 1973, Los Angeles


உமாபதி: நாம் பக்தர்களை அரசாங்க பொறுப்புகளில் பொருத்துவதற்கான அரசியல் ரீதியான வாய்ப்புகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, அதிர்ச்சியூட்டும் வகையில், நாம் கிட்டத்தட்ட எல்லா மேற்கத்திய நெறிமுறைகளுக்கு எதிரான கருத்துக்களை பிரதிநிதிக்கிறோம் என்பதை கண்டுபிடித்தோம். நாம் துறவறத்தை அல்லது எளிமையை பிரதிநிதிக்கிறோம். நாம் கடவுள் உணர்வை பிரதிநிதிக்கிறோம். நாம் உடல் உறவு சுதந்திர கட்டுப்பாடு மற்றும் போதை கட்டுப்பாடுகளை பிரதிநிதிக்கிறோம். நான்கு கட்டுப்பாட்டு கொள்கைகளும் கிட்டத்தட்ட முழுமையாக மேற்கத்திய ஆசைகளுக்கு எதிராக இருக்கின்றன.


பிரபுபாதர்: அப்படி என்றால் மேற்கத்தியர்கள்‌ அனைவரும் ராட்சசர்கள்.


உமாபதி: ஆக இந்த சூழ்நிலையில் அரசாங்கத்தில் இடம் பிடிப்பது தான் நமது சிக்கல். "இவை தான் எங்கள் கொள்கைகள்" என வெளிப்படுத்தி வாக்குகளை எதிர்பார்ப்பது சிக்கலான விஷயம்.


பிரபுபாதர்: யாரும் வாக்களிக்காமல் இருந்தாலும் நாம் தொடர்ந்து பிரசாரம் செய்யவேண்டும். அதை நான் ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். நாட்டில் எல்லோரும் படிக்காதவர்களாக இருக்கலாம். அதற்காக பல்கலைக்கழகத்தை நிறுத்தவேண்டும் என அர்த்தமாகுமா? பல்கலைக்கழகம் இருந்தாக வேண்டும். அதிருஷ்டம் உள்ளவன் வருவான், வந்து கல்வியை கற்பான். இது சரியான வாதம் அல்ல, "மக்கள் படிக்காதவர்கள். அவர்கள் கவலைப்படுவதில்லை. அதனால் பல்கலைக்கழகத்தை மூடவேண்டும்." இது ஒரு வாதமே அல்ல.


யஷோமதிநந்தன: படிப்படியாக தான் அவர்களில் ஆசை ஏற்படும்.


பிரபுபாதர்: ஆமாம். நாம் உழைத்தாகவேண்டும். அது தான் பிரசாரம். பிரசாரம் அவ்வளவு எளிதானது அல்ல. சாப்பிடுவது, உறங்குவது பிறகு எப்போதாவது "ஹரிபோல்" சொல்லுவது, அவ்வளவு தான். அது பிரசாரம் அல்ல. கிருஷ்ண உணர்வின் கருத்துகளை உலகம் முழுவதும் விதைக்க தயாராக இருக்கவேண்டும்.


உமாபதி: இருந்தாலும் அது ஒரே இரவில் நடக்கும் காரியம் அல்ல.


பிரபுபாதர்: அர்ச்சை வழிபாட்டு திட்டம் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கத் தான். விக்ரஹ வழிபாட்டை புறக்கணித்தால், நாமும் வீழ்ச்சி அடைவோம். ஆனால் அதனால் மட்டுமே எல்லா கடமையும் முடிந்ததாக எண்ணக் கூடாது.

ஆசார்யம் எவ ஹரயே பூஜ்யம் ய: ஷ்ரத்தாயதே

அர்ச என்றால் அர்ச்சை விக்ரஹம். ஒருவர் அர்ச்சை விக்ரஹத்தை சிறப்பாக சேவித்திருந்து, இருப்பினும்

ந தத் பக்தேஷு சான்யேஷு

ஆனால் அவனுக்கு அதை தவிர்த்து எதுவும் தெரியாது, யார் பக்தன், யார் அபக்தன், உலகத்திற்காக ஒருவன் கடமை என்ன, ஸ பக்த: ப்ராக்ருத ஸ்மருத:, அவன் பௌதீக பக்தன். அவன் பௌதீகத்தில் இருக்கும் பக்தன். ஆக யார் உண்மையில் தூய்மையான பக்தன் என்று புரிந்துக் கொள்வதின் பொறுப்பை நாம் ஏற்கவேண்டும். பொதுமக்களுக்காக நம் கடமை என்ன. இவையெல்லாம் புரிந்துகொண்ட பிறகு தான் முன்னேற முடியும். பிறகு தான் நீ மத்யம-அதிகாரி ஆவாய். மத்யம்-அதிகாரி, அதாவது உயர்தரமான பக்தன். இந்த மக்களை எடுத்துக் கொள்ளுங்கள், இந்தியாவிலும் சரி இங்கேயும் சரி, அவர்கள் வெறும் சர்ச் தர்மம் தான். எந்த புரிதலும் இல்லாமல் சர்ச்சுக்கு செல்லவேண்டியது. தற்போது சர்ச்சுகள் மூடப்படுகின்றன. அதுபோலவே, நீங்கள் பிரசாரம் செய்வதற்கு தன்னை தகுதியுற்றவராக வைத்திருக்க தவறினால், பிறகு உங்களது கோயில்கள் எல்லாம் நேர போக்கில் மூடப்படும். பிரசாரம் இல்லாமல், கோயில் வழிபாடுகளை தொடர்ந்து செய்வதில் உற்சாகம் இல்லாமல் போய்விடும். மேலும் கோயில் வழிபாடு இல்லாமல், உங்களால் தன்னை தூய்மையாக வைத்துக்கொள்ள முடியாது. இந்த இரண்டு விஷயங்களும் இணைந்து நடந்தாக வேண்டும். பிறகு தான் வெற்றியை காணமுடியும். நவீன காலத்தில், இந்துவோ, முஸ்லிமோ அல்லது கிறித்துவனோ அவ்விடங்களில் எந்தவிதமான தத்துவ கற்பித்தலும் இல்லாததால், மசூதியாகட்டும், கோயிலாகட்டும் அல்லது சர்சாகட்டும், அவர்கள் மூடி வருகிறார்கள். அவர்கள் மூடி விடுவார்கள். ப்ரஜாபதி: அவர்களால் தன் செயல்பாடுகளுக்கு எந்த விதமான நற்பலனையும் காண்பிக்க முடியாது.


பிரபுபாதர்: ஆம். அது தான் பிரசாரம். ஆகையால் தான் நாம் பல புத்தகங்களை எழுதி வருகிறோம். நாம் இப்புத்தகங்களை கவனித்து, நாமே இவைகளை படித்து, பிரசாரம் செய்து, தத்துவத்தை புரிந்துகொண்டால் ஒழிய, இந்த ஹரே கிருஷ்ண சில ஆண்டுகளுக்குள்ளேயே சீரழிந்து விடும். ஏனெனில் இதின் உயிர் மூச்சு இல்லாமல் போய்விடும். எவ்வளவு காலம் தான் ஒருவரால் செயற்கையாக "ஹரே கிருஷ்ண! ஹரி போல்!" என தொடர்ந்து செய்யமுடியும். அது செயற்கையானது, உயிர் இல்லாதது.


யஷோமதிநந்தன: சரியாக கூறுகிறீர்கள் பிரபுபாதரே. நாங்கள் மிகவும் முட்டாள்கள், தாங்கள் அவ்வாறு எங்களுக்கு சொன்னால் ஒழிய எங்களுக்கு ஒருபோதும் எந்த உணர்தலும் ஏற்படுவதில்லை. பிரசாரம் இல்லாமல்...


பிரபுபாதர்: பிரசாரம் இல்லாமல், தத்துவங்களை புரிந்துகொள்ளாமல், பலவீனமாகி விடுவீர்கள். ஒவ்வொருவரும் நாம் வழங்கும் தத்துவத்தை நன்கு ஆராய்ந்து அறிந்திருக்க வேண்டும். அப்படி என்றால் நீங்கள், ஒவ்வொரு நாளும் கவனமாக படிக்கவேண்டும். நம்மிடம் பல புத்தகங்கள் உள்ளன. மேலும் பாகவதம் என்பது மிகச் சிறந்தது. எந்த பதத்தை படித்தாலும் ஒரு புதிய உணர்வு கிடைக்கிறது. அது அவ்வளவு சிறப்பானது. பகவத்-கீதை ஆகட்டும் பாகவதம் ஆகட்டும். இது சாதாரண இலக்கியம் அல்ல.


உமாபதி: நான் உங்கள் பகவத்-கீதையை சில பள்ளிகளில் வைக்க முயற்சி செய்திருக்கிறேன். ஆனால், சிலர் தயங்குகிறார்கள் மற்றும் சிலரிடம் பகவத்-கீதை இருந்தால், "எங்களிடம் ஏற்கனவே பகவத்-கீதை இருக்கிறது. "இது பகவத்-கீதையின் முற்றிலும் வேறு விதமான புரிதல்," எனக் கூறுகிறார் மற்றும், "இது வெறும் வேறொருவரின் கருத்து தான். ஒரே புத்தகத்தின் மீது இருக்கும் பலரின் அபிப்பிராயங்களில் எங்களுக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை."


பிரபுபாதர்: இது ஒரு அபிப்பிராயம் அல்ல. நாம் அபிப்பிராயத்திற்கு இடமின்றி, உண்மையுருவில் வழங்குகிறோம்.


உமாபதி: அவை தான் அந்த சொற்கள். மிகவும் கடினமானது, அதை மீறி...


பிரபுபாதர்: பிரசாரம் என்பது எப்போதுமே கடினமானது தான். அதை நான் பல முறை கூறியிருக்கிறேன். பிரசாரத்தை சுலபமாக எண்ண முடியாது. பிரசாரம் என்பது ஒரு போராட்டம். போராட்டம் எளிதானது என்று கூற விரும்புகிறீர்களா? போராட்டம் என்பது சாதாரணமானதல்ல. போராட்டம் எங்கிருந்தாலும், அங்கு அபாயம் இருக்கிறது, பொறுப்பும் இருக்கிறது. ஆக பிரசாரம் என்றால்... பிரசாரம் என்றால் என்ன? பொதுமக்கள் அறியாதவர்கள். ஆக நாம் தான் அவர்களை விழிப்பூட்ட வேண்டும். அது தான் பிரசாரம்.


நர-நாராயணன்: நான் நினைக்கிறேன், தாங்கள் மேற்கத்திய உலகத்திற்கு வந்த போது, இது வெற்றிகரமாக இருக்கும் என்று ஒருவரும் நம்பவில்லை. ஆனால் பிரசாரத்தினால் இது வாஸ்தவத்தில் மிகவும் வெற்றிகரமாக இருக்கிறது.


பிரபுபாதர்: மற்றோரை விடுங்கள், நான் வெற்றியை அடைவேன் என்று நானே நம்பவில்லை. ஆனால் நான் பரம்பரையின் வழியில் செய்ததால், இது வெற்றி பெற்றிருக்கிறது.


யஷோமதிநந்தன: ஆமாம், கிருஷ்ணரின் கருணையோ கருணை. நாம் எதாவது எதிர்பார்த்திருந்தால், அவர் நூறு மடங்கு அதிகமாக அளிப்பார்.


பிரபுபாதர்: ஓ ஆமாம்.


யஷோமதிநந்தன: ஆக நாம் வெறும் தங்களது கற்பித்தலை பின்பற்றினால், இது வெற்றிகரமாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். நர-நாராயணன்: ஆக நாம் பரம்பரையின் வழியில் நடந்தால் நமது செயல்கள் அரசியலிலும் வெற்றிகரமாக இருக்குமா?


பிரபுபாதர்: நிச்சயமாக. ஏன் இருக்கக்கூடாது? கிருஷ்ணரும் அரசியலில் இருந்தார் அல்லவா. ஆக கிருஷ்ண பக்தி என்றால் அனைத்தும் உள்ளடக்கியது; சமூகம், அரசியல், தத்துவம், தர்மம், கலாச்சாரம் எல்லாம். இது வெறும் ஒரு துறையைச் சார்ந்தது அல்ல. அவர்களுக்கு தெரியாது. ஆகையால் இது ஒரு மதத்தைச் சார்ந்த இயக்கம் என்று நினைக்கிறார்கள். அப்படி கிடையாது, இது அனைத்தும் உள்ளடக்கிய ஒன்று.