TA/Prabhupada 0349 - நான் என் குரு மகாராஜரின் சொற்களை அப்படியே நம்பியதால் தான
Arrival Address -- New York, July 9, 1976
புத்தியுள்ள ஒரு மனிதனுக்கு வெவ்வேறு பிறவிகளில் வித்தியாசமான சூழ்நிலைகள் இருப்பதாக தெரிந்திருக்க வேண்டும். அது அவர்களுக்கு தெரியாது. மற்றொரு தினத்தில் நம் டாக்டர் ஸத்ஸ்வரூப தாமோதரன் கூறியிருந்தான், அவர்கள் அடைந்த அறிவியல் மற்றும் கல்வித்துறை முன்னேற்றங்களில், இரண்டு குறைபாடுகள் இருக்கின்றன. ஆகாயத்தில் இருக்கும் பல்வேறு கிரகங்களின் விவரங்கள் அவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு தெரியாது. அவர்கள் வெறும் ஊகிக்கிறார்கள். அவர்கள் சந்திர கிரகத்திற்கு, செவ்வாய் கிரகத்திற்கு செல்ல முயல்கிறார்கள். அதுவும் சாத்தியம் அல்ல. அப்படி ஒன்றோ, இரண்டோ கிரகங்களுக்கு சென்றாலும், பல இலட்சக்கணக்கான கிரகங்கள் உள்ளன; அவைகளை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? எதுவும் தெரியாது. அடுத்த விஷயம்: வாழ்வின் பிரச்சினைகள் எவை என்பதும் அவர்களுக்கு தெரியாது. இந்த இரண்டு விஷயங்களில் அவர்கள் அறிவு குறைபாடு உடையவர்கள். மேலும் இந்த இரண்டு விஷயங்களை பற்றி நாங்கள் போதிக்கிறோம். பிரச்சினை என்னவென்றால் நம் வாழ்வில் ஒரு குறைவு இருக்கிறது. நாம் கிருஷ்ண உணர்விலிருந்து விலகி இருக்கிறோம்; அதனால் துன்பப்படுகிறோம். கிருஷ்ண பக்தியை ஏற்றால் பிரச்சினையெல்லாம் தீர்ந்து விடும். மேலும் பிரம்மாண்டதில் இருக்கும் கிரகங்களை பொறுத்தவரை, கிருஷ்ணர் நமக்கு அந்த வாய்ப்பை அளிக்கிறார், நீ எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் புத்தியுள்ளவன் எங்கே செல்லுவான் என்றால்,
மத்-யாஜீனோ அபி யாந்தி மாம் (பகவத்-கீதை 9.25)
"கிருஷ்ண உணர்வுடையவர்கள், என்னிடம் வருவார்கள்." இந்த இரண்டு விஷயங்களில் வித்தியாசம் என்ன? சந்திரனோ சுக்கிரனோ பிரம்ம லோகமோ, நான் எங்கே சென்றாலும் சரி, கிருஷ்ணர் கூறுகிறார்,
ஆ-ப்ரஹ்ம-புவனால் லோகா: புனர் ஆவர்தினோ (அ)ர்ஜுன (பகவத்-கீதை 8.16)
நீ பிரம்ம லோகத்திற்கு சென்றிருக்கலாம், ஆனால் க்ஷீணே புண்யே மர்த்ய-லோகம் விஷந்தி: "நீ திரும்பி இங்கே வரவேண்டியிருக்கும்." கிருஷ்ணரும் கூறுகிறார்,
யத் கத்வா ந நிவர்தந்தே தத் தாம பரமம் மம (பகவத்-கீதை 15.6)
மத்-யாஜீனோ அபி யாந்தி மாம். உங்களுக்கு கிருஷ்ண பக்தி எனும் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அனைத்தும் பகவத்-கீதையில் விளக்கப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பை இழந்து விடாதீர்கள். விஞ்ஞானிகள், தத்துவவாதிகள், அரசியல்வாதிகள் என்றழைக்கப்படும் நபர்களினால் வழிதவறி போகாதீர்கள். முட்டாளைப்போல் இருக்காதீர்கள். கிருஷ்ண பக்தியை ஏற்றுக் கொள்ளுங்கள். மேலும்
குரு-க்ருஷ்ண-க்ருபயா (சைதன்ய சரிதாம்ருதம் 19.151)
இவ்வாறு மட்டுமே அது சாத்தியம் ஆகும். குருவின் கருணையால் மற்றும் கிருஷ்ணரின் கருணையால், எல்லா வெற்றியையும் அடையலாம். அது தான் இரகசியம்.
யஸ்ய தேவே பரா பக்திர் யதா தேவே ததா கு ரௌ தஸ்யைதே கதிதா ஹ்யர்தா: ப்ரகாஷந்தே மஹாத்மன (ஷ்வேதாஷ்வதர உபநிஷத் 6.23)
ஆக நாம் செய்யும் இந்த குரு-பூஜை என்பது, இது தன்னை பெருமையாக பேசும் வகையில் கிடையாது; இது உண்மையான கற்பித்தல். நீங்கள் தினமும் பாடுகிறீர்கள், என்ன அது? குரு-முக-பத்ம-வாக்ய... ஆர நா கரிஹ மனே ஆஷா. அவ்வளவு தான், இது தான் மொழிபெயர்ப்பு. நான் வெளிப்படையாக தெரிவிக்கின்றன. இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கு சிறிதளவில் என்ன வெற்றி கிடைத்திருக்கிறதோ, நான் என் குரு மகாராஜரின் சொற்களை அப்படியே நம்பியதால் தான். நீங்களும் அப்படியே தொடர்ந்து செய்யுங்கள். பிறகு எல்லா வெற்றியும் தானாகவே கிடைக்கும். மிக நன்றி.