TA/Prabhupada 0383 - கௌர பஹூ பாடலின் பொருள்



Purport to Gaura Pahu -- Los Angeles, January 10, 1969

கௌர பஹூ நா பஜியா கொய்னு, ப்ரேம-ரதன-தன ஹெலாய ஹாராய்னு. இது நரோத்தம தாச தாக்குரால் பாடப்பட்ட இன்னொரு பாடல். அவர் கூறுகிறார், "பகவான் சைதன்யரை வழிபடாமல் இருந்ததால், நானே என் ஆன்மீக மரணத்திற்கு வழி வகுத்து விட்டேன்." கௌர பஹூ நா பஜியா கொய்னு. கௌர பஹூ என்றால் "பகவான் சைதன்யர்." நா பஜியா, "வழிபடாமல்." கொய்னு, "நான் என் ஆன்மீக மரணத்திற்கு வழி வகுத்துள்ளேன்." மற்றும் அதனே யதனே கரி தனு தய்னு. "எப்படி என் ஆன்மீக மரணத்திற்கு வழி வகுத்துள்ளேன்? ஏனென்றால் நான் பயனற்ற ஏதோ செயலில் ஈடுபட்டிருக்கின்றேன் மேலும் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை நிராகரித்துவிட்டேன்." அதன என்றால் பயனற்ற விஷயங்கள். மற்றும் தன என்றால் மதிப்புமிக்க விஷயங்கள். வாஸ்தவத்தில், நம்மில் ஒவ்வொருவரும் நமது ஆன்மீக விமோசனத்தை புறக்கணித்து, பௌதீக புலனுகர்ச்சியில் ஈடுபடுகிறோம். இவ்வாறு உடலின் மனித உருவத்தில், ஆன்மீக தளத்திற்கு தம்மை உயர்த்துவதற்கான இந்த வாய்ப்பை நாம் இழக்கிறோம். கட்டுண்ட


ஆத்மாவிற்கு, இந்த மனித உடல், குறிப்பாக ஆன்மீக விமோசனத்தை அடைய பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருக்கிறது. ஆக ஆன்மீக விமோசனத்தைப் பற்றி கவலை படாதவன், தன் ஆன்மீக மரணத்தை அழைக்கிறான். ஆன்மீக மரணம் என்றால் தம்மை மறந்துவிடுவது, அதாவது தாம் ஆன்மா என்பதை மறந்துவிடுவது. அதுதான் ஆன்மீக மரணம். மிருக வாழ்வில் முற்றிலும் மறதி தான். அவர்கள் இந்த உடல் அல்ல, உடலிலிருந்து வேறுபட்டவர் என்பதை எந்த சூழ்நிலையிலும் அவர்களுக்கு ஞாபகப்படுத்த முடியாது. இந்த மனித உடலில், மனித பிறவியில் மட்டுமே தாம் இந்த உடல் அல்ல, தாம் ஆன்மா என்பதை புரிந்துகொள்ளலாம். ஹரே கிருஷ்ண ஜெபிப்பதால், இந்த உண்மையை எளிதாக புரிந்துகொள்ளலாம், மற்றும் பகவான் சைதன்யரை வழிபடுவதால், அவர் கொள்கைகளை மற்றும் வகுத்த பாதையை பின்பற்றுவதால், ஒருவரால் ஹரே கிருஷ்ண ஜெபம் செய்யமுடியும். பிறகு எளிதாக ஆன்மீக புரிதலின் தளத்திற்கு எளிதாக வரமுடியும். ஆனால் நாம் இதை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம் என நரோத்தம் தாச தாக்குர் நம் சார்பில் கூறுகிறார். ஆக நாம் நமது ஆன்மீக மரணத்தை வரவேற்த்திருக்கின்றோம். அடுத்து அவர் கூறுகிறார், ப்ரேம-ரதன-தன ஹேலாய ஹாராய்னு. ஆன்மீக வாழ்க்கை என்றால் உண்மையான அன்பை வளர்ப்பது. எல்லோரும் நேசம் என்பார்கள். பல விளம்பரங்களில், செய்தித்தாள்களில் பார்க்கிறோம், 'அன்பு, நேசம்." ஆனால் அது அன்பு கிடையாது. இது வெறும் வெளிப்படையான தோற்றம் தான். வாஸ்தவத்தில் எல்லாம் வெறும் காமம் தான். போதைக்கான நேசம், உடலுரவுக்கான நேசம், அந்த நேசம்... இதுதான் நடந்துகொண்டிருக்கிறது.


உண்மையில் நேசம் என்றால்... நேசம் என்ற வார்த்தை கடவுளை அதாவது கிருஷ்ணரை மட்டுமே சம்பந்தப்பட்டது. ஏனென்றால் நாம் அதற்காக தான் படைக்கப்பட்டுள்ளோம். நேசிப்பது என்றால் கிருஷ்ணரை நேசிப்பது. அதுதான் தேவை. அதுதான் ஆன்மீக நேசம். ஆக ப்ரேம-ரதன. என்னால் தேசத்தின் அந்த திவ்யமான நிலையை அடையமுடியும், ஆனால் நான் அதை பற்றி கவலை படுவதில்லை. ஆகையால் நானே என் ஆன்மீக மரணத்திற்கு வழி வகுத்து கொண்டிருக்கிறேன். மேலும் இதுவெல்லாம் என் கடந்த கால பாவச் செயல்களுக்கு விளைவாக நிகழ்கின்றன. யாருக்கெல்லாம் ஜட உடல் கிடைத்திருக்கிறதோ அது அவர்களின் கடந்த கால பாவச் செயல்களின் விளைவாக தான். சிலசமயங்களில் நாம் புண்ணிய காரியங்கள் என்கிறோம். வாஸ்தவத்தில் ஜட உடலை பெறுவதற்கான காரணமான எந்த செயலையும் புண்ணியமாக எண்ணமுடியாது. புண்ணியம் என்றால் மீண்டும் ஜட உடலை பெறவேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கும் நிலை. அதுதான் புண்ணியம். அப்படி பார்த்தால் வாஸ்தவத்தில், நீண்ட ஆயுளும், எல்லா சக்தியும் கொண்ட, இந்த பிரம்மாண்டத்தின் தலை உயிர்வாழியான பிரம்ம தேவரும், ஜட உடலை பெற்றிருப்பது, பாவச் செயல்களால் தான் என கருதப்படுகிறது. ஆக நாம் நம் பாவச் செயல்களினால், அடுத்தடுத்து படிப்படியாக தாழ்ந்த உடல்களை பெற்று கீழ்நோக்கி போகின்றோம். பாகவதத்திலும் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், இந்த புலனுகர்ச்சி பாதையில் செல்பவர்கள் மீண்டும் மற்றொரு உடலை அடைவார்கள் என்பதை அவர்கள் அறிவதில்லை. மேலும் இந்த உடல் தான் பௌதீக வேதனையின் காரணமானது. இந்த உடல் பெற்றிருப்பதால் தான் தலைவலி, வயிற்றுவலி இதுவெல்லாம் நான் அனுபவிக்கவேண்டியிருக்கிறது. ஆனால், ஜட உடல்களிலிருந்து விடுபட்டவுடன் மேலும் எந்த பௌதீக வேதனையும் இருப்பதில்லை. அது வெறும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை.


ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்னாத்மா (பகவத்-கீதை 18.54)


ப்ரஸன்னாத்மா என்றால் இன்பம் நிறைந்து, ஆன்மீக வாழ்வை அடைந்தவுடன். ஆக என் கடந்த கால பாவச் செயல்களினால், இந்த வாய்ப்பை நான் இழந்துவிடுகின்றேன். ஆபன கர மத ஸேவா... அது அப்படி ஏன் நடக்கிறது? ஸத்-ஸங்க சாடி காய்னு அஸத்யேர விலாஸ. "நான் பக்தர்களின் சகவாசத்தை கைவிட்டு, அறிவற்ற பொதுமக்களுடன் உறவாடிக் கொண்டிருக்கிறேன்." அஸத்யேர. அஸத் மற்றும் ஸத். ஸத் என்றால் ஆன்மா. மற்றும் அஸத் என்றால் ஜட இயற்கை. ஆக பௌதீக ஆசாபாசங்களுடன் தொடர்பு கொள்வதின் விளைவாக இந்த கட்டுண்ட பௌதீக வாழ்க்கையில் சிக்கவைக்கப்படுகிறோம்.. ஆக பக்தர்களின் தொடர்பில் இருக்கவேண்டும். ஸதாம் ப்ரஸங்காத் மம வீர்ய-ஸம்விதோ. பக்தர்களின் தொடர்பில் மட்டுமே ஒருவரால் கடவுளை புரிந்துகொள்ள முடியும். எனவே நாம் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை, சங்கத்தை பரிந்துரைக்கின்றோம். வாஸ்தவத்தில், இந்த சங்கத்தில் வருபவன் யாரும், சில நாட்கள், சில வாரங்கள் தொடர்பு கொள்வதால், உணர்வு விழிப்படைந்து, தீக்ஷை ஏற்று முன்னேற முன்வருகிறான். ஆக இந்த சங்கம் என்பது மிகவும் முக்கியமானது. வெவ்வேறு மையங்கள் மற்றும் கோவில்களில் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள், பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும், ஏனென்றால் எல்லாம் அவர்களின் நேர்மையான செயல்கள் மற்றும் நடத்தையை தான் சார்ந்து இருக்கிறது. அவர்கள் நேர்மையை கைவிட்டால், அது பலனளிக்காது. ஒருவர் நம்மிடம் வந்து நம் தொடர்பில் இருக்கலாம், ஆனால் நாம் நேர்மையை கடைபிடிக்க தவறினால், அது அவ்வளவு பலனளிக்காது. ஆனால் பக்தர்கள் நேர்மையாக இருந்தால், ஒரு பக்தனின் தொடர்பில் வருபவன் யாரும், மாறிவிடுவான். அதுதான் ரகசியம். ஸத்-ஸங்க சாடி அஸத்யேர விலாஸ. மேலும் அத்தகைய பக்தர்களின் சங்கத்தை கைவிட்ட அடுத்த நிமிடமே மாயை என்னை இழுத்துச் செல்வாள். இந்த சகவாசத்தை கைவிட்டவுடன், மாயை கூறுவாள், "ஓ, என் சகவாசத்தில் இருக்க வாயேன்." தனிமையில் இருப்பதால் யாவராலும் பற்றற்றவராக இருக்கமுடியாது. அது சாத்தியம் அல்ல. ஒன்று மாயையின் சகவாசத்தில் இருந்தாகவேண்டும் அல்லது கிருஷ்ணரின் சகவாசத்தில் இருந்தாகவேண்டும்.


ஆகையால் ஒவ்வொருவரும் பக்தர்களுடன், அதாவது கிருஷ்ணருடன் தொடர்பு கொள்வதில் மிகவும் தீவிரமாக இருக்கவேண்டும். கிருஷ்ண என்றால்... நாம் கிருஷ்ணரை பற்றி பேசும்போது, "கிருஷ்ண" என்றால் கிருஷ்ணர் மற்றும் அவருடைய பக்தர்கள். கிருஷ்ணர் ஒருபோதும் தனியாக இருப்பதில்லை. கிருஷ்ணர் ராதாராணியுடன் இருப்பார். ராதாராணி கோபியர்களுடன் இருப்பாள். அதை தவிர்த்து கிருஷ்ணர் தனது இடைய தோழர்களுடன் இருப்பார். நாம் அருவவாதிகள் அல்ல. நாம் கிருஷ்ணரை தனிமையில் காண்பதில்லை. அப்படித் தான், கிருஷ்ணர் என்றால் அவர் பக்தர்கள் உட்பட. ஆக கிருஷ்ண உணர்வு என்றால் கிருஷ்ணரின் பக்தர்களின் தொடர்பில் இருப்பது. விஷய விஷம விஷ ஸதத காய்னு. அடுத்து அவர் கூறுகிறார், "நான் எப்பொழுதும் புலனுகர்ச்சியின் மிக ஆபத்தான விஷத்தை குடித்திருக்கிறேன்." விஷய விஷம விஷ. விஷய என்றால் புலனுகர்ச்சி. உண்ணுதல், உறங்குதல், உடலுறவு கொள்ளுதல் மற்றும் தற்காத்துக் கொள்ளுதல். இவைகளுக்கு விஷய எனப் பெயர். மற்றும் விஷம என்றால் ஆபத்து விளைவிக்குமாறு. மற்றும் விஷ என்றால் விஷம். மிருகங்களை போல், ஒருவன் வெறும், வாழ்வின் இந்த நான்கு கொள்கைகளில் ஈடுபட்டிருந்தால், அது வெறும் விஷத்தை அருந்துவதற்கு சமமானது தான். அவ்வளவு தான். விஷய விஷம ஸதத காய்னு. "இது விஷம் என்பதை அறிந்தும், அளவுகடந்த போதையில் இருப்பதால், நான் இந்த விஷத்தை ஒவ்வொரு நிமிடமும் அருந்துகின்றேன்."


கௌர-கீர்த்தன-ரஸே மகன நா பாய்னு


"மேலும் பகவான் சைதன்யர் தொடக்கிய சங்கீர்த்தன இயக்கத்தில் என்னால் ஆழ்ந்து இன்பம் குளிக்க முடியவில்லை. ஓ, அது தான் வாஸ்தவத்தில் உண்மை. பௌதீக வாழ்க்கையில் அதிகமாக பற்றுள்ளவர்கள், அதாவது புலனுகர்ச்சி என்ற விஷத்தை எப்பொழுதும் அருந்துவார்கள், சங்கீர்த்தன இயக்கத்தால் ஒருபோதும் கவரப்படுவதில்லை. இறுதியில் நரோத்தம தாச தாக்குர் இவ்வாறு வருத்தப்படுகிறார். அவர் தன்னை நம்மிடத்தில் வைத்து அவ்வாறு கூறுகிறார். ஒருவன் அந்த வருத்தத்தை உணரும் நிலைக்கு வந்தால், அதுவும் சிறந்தது. அவன் உடனேயே தூய்மை அடைகிறான். வருத்தப்படுவது என்றால் தூய்மைப்படுத்துவது. ஆகையால் அவர் கூறுகிறார்,


கேனோ வா ஆசய ப்ராண கிசு பலி'


"எதற்காக நான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்? நான் பக்தர்களுடன் தொடர்பு கொள்வதில்லை, சங்கீர்த்தன இயக்கத்தில் பங்கேற்பதில்லை. கிருஷ்ணர் என்றால் என்னவென்று அறிவதில்லை. பகவான் சைதன்யர் யார் என்பதை புரிந்துகொள்வதில்லை. பிறகு நான் எதற்காக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்?" இது தான் அவர் வருத்தம். "இது தான் என் தரம் கெட்ட இன்பமா ? நான் எதற்காக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் ?" நரோத்தம தாஸ கேன நா கேலா. "எதற்காக நான் பற்பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போகவில்லை? நான் இறந்திருக்கவேண்டும். நான் வாழ்ந்து என்ன பயன்?" இது நரோத்தம தாச தாக்குருடைய வருத்தம் அல்ல. நம்மில் ஒவ்வொருவரும் அப்படி நினைக்கவேண்டும். "என்னால் பக்தர்களின் சகவாசத்தில் இருக்கமுடியவில்லை என்றால், கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது என்னவென்று புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், பகவான் சைதன்யர் மற்றும் அவர் பக்த குழாமினரின் தொடர்பில் நாம் வராமல் இருந்தால், நான் இறந்து போவதே மேல். அதை தவிர்த்து வேறு எந்த பரிகாரமும் இல்லை."