TA/Prabhupada 0389 - ஹரி ஹரி பிஃபலே பொருள்விளக்கம்



Purport to Hari Hari Biphale -- Hamburg, September 10, 1969

ஹரி ஹரி பிஃபலெ ஜனம கொனாய்னு. இது நரோத்தம தாச தாக்குரால் பாடப்பட்ட ஒரு பாடல். அவர், சைதன்ய மஹாப்ரபுவின் சம்பிரதாயத்தில், சீட பரம்பரையில் வந்த ஒரு நிபுணரான ஆச்சாரியார். அவர் பல முக்கியமான பாடல்களை பாடியிருக்கிறார் மற்றும் அவர் பாடல்கள் வேதவாக்காக ஏற்க்கப்பட்டுள்ளன. இவை மிகவும் பரிமாணமானவை. அவர் கிருஷ்ண பகவானை வேண்டிக் கேட்கிறார், "என் அன்பு நாதா," ஹரி ஹரி, "நான் என் வாழ்க்கையை வெறும் வீணாக்கிவிட்டேன்." ஹரி ஹரி‌பிஃபலே ஜனம கொனாய்னு. எப்படி உன் வாழ்க்கையை தொலைத்தாய்? அவர் கூறுகிறார், மனுஷ்ய-ஜனம பாய்யா, "எனக்கு இந்த மனித பிறவியில் ஜென்மம் கிடைத்தது," ராதா-க்ருஷ்ண நா பஜியா, "ஆனால் நானோ ராதா-கிருஷ்ணரை வழிபட கவலை படவில்லை. ஆகையால் நான் என் வாழ்க்கையை கெட்டுப்போக்கி விட்டேன்." மேலும் அதை எத்துடன ஒப்பிடலாம்? ஒருவன் நன்கு அறிந்தே விஷத்தை அருந்துவது போல் தான். ஒருவர் தெரியாமல் விஷத்தை குடித்தால் அதை மன்னிக்கலாம், ஆனால் தெரிந்தே குடித்தால், அது தற்கொலை. ஆக அவர் கூறுகிறார், "மனித பிறவி எடுத்து, ராதா கிருஷ்ணரை வழிபடாததால் நான் தற்கொலை செய்துவிட்டேன்." பிறகு அவர் கூறுகிறார், கோலோகேர ப்ரேம-தன, ஹரி-நாம-ஸங்கீர்த்தன. இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில், சங்கீர்த்தன இயக்கத்தின், எந்த விதத்திலும் பௌதீகத்துடன் சம்பந்தப்பட்டது அல்ல. இது கோலோக வ்ருந்தாவனம் என்ற ஆன்மீக சாம்ராஜ்யத்திலிருந்து நேரடியாக பெற்ற ஒன்று. ஆக கோலோக ப்ரேம-தன. மேலும் இது சாதாரண பாடல் அல்ல. இது முழுமுதற் கடவுளுக்கான அன்பின் பொக்கிஷம். மேலும்..."ஆனால் எனக்கு அதற்காக எந்த ஆசையும் இல்லை." ரதி நா ஜன்மிலோ கெனெ தாய். "எனக்கு அதில் எந்த விருப்பமும் இல்லை. எதிர்மாறாக," விஷய-பிஷானலெ, திபா-நிஷி ஹியா ஜ்வாலெ, "மேலும் அதை நான் ஏற்காததால், பௌதீக வாழ்க்கையின் விஷ தீ என்னை தொடர்ந்து சுட்டெரிக்கிறது." திபா-நிஷி ஹியா ஜ்வாலே. "இரவும் பகலும் என் இதயம், இந்த பௌதீக வாழ்க்கையால் ஏற்பட்ட நஞ்சால், பற்றி எரிகிறது." மேலும் தரிபாரெ நா கொய்னு உபாய். "அப்படி இருந்தும் நான் அதற்கு தீர்வு காண முயலவில்லை." வேறு மாதிரி சொன்னால், இந்த பௌதீக வாழ்வெனும் கொழுந்து விட்டு எரியும் தீயிற்கு தீர்வு இந்த சங்கீர்த்தன இயக்கமே. இது ஆன்மீக சாம்ராஜ்யத்திலிருந்து இறங்கி வந்தது. மேலும் இதை கொண்டுவந்தது யார்? அதற்கு அவர் கூறுகிறார், ப்ரஜேந்த்ர-நந்தன ஜெய், ஸசி-ஸுத ஹய்லொ ஸெய். அரஜேந்த்ர-நந்தன, ப்ரஜ மன்னரின் மகன். அது கிருஷ்ணர். கிருஷ்ணரை எல்லோரும் நந்த மஹாராஜரின்‌ மகனாக அறிவார்கள். அவர் தான் ப்ரஜபூமியின் மன்னர். ஆக ப்ரஜேந்த்ர-நந்தன ஜெய், அந்த காலத்தில் நந்த மஹாராஜரின் மகனாக இருந்த அதே நபர், தற்போது ஷசி என்ற தாயின் மகனாக தோன்றியிருக்கிறார். ஷசி-ஸுத ஹய்லொ ஸெய். மற்றும் பலராம ஹய்லொ நிதாய். மற்றும் பலராமர் நித்யானந்தராக தோன்றியுள்ளார். ஆக இந்த இரண்டு சகோதரர்களும் அவதரித்து, எல்லா வகையான தாழ்வடைந்த ஜீவன்களையும் மீட்டெடுக்கின்றார்கள். பாபீ-தாபீ ஜத சிலோ. இவ்வுலகில் எவ்வளவு தாழ்வடைந்த ஜீவன்கள் உள்ளாரோ, அவர்கள் அனைவரையும், வெறும் இந்த திருநாம ஜெபத்தின் வழியால் அந்த இருவரும் மீட்டெடுக்கிறார்கள். ஹரி-நாமெ உத்தாரிலொ, வெறும் இந்த திருநாம ஜெபத்தால். அது எப்படி சாத்தியம்? அதற்கு அவர் கூறுகிறார், தார ஸாக்ஷீ ஜகாய் மற்றும் மாதாய். ஜகாய் மற்றும் மாதாய் என்ற இரண்டு சகோதரர்கள் இதற்கு நடைமுறை உதாரணமாக இருந்தார்கள். இந்த ஜகாய் மற்றும் மாதாய் என்ற இரண்டு சகோதரர்களும் பிராம்மண குடும்பத்தில் பிறந்திருந்தார்கள், ஆனால் அவர்கள் ஒண்ணா நம்பர் ஒழுக்கம் கெட்டவர்களாக மாறிவிட்டார்கள். மேலும்... தற்போது, இந்த காலத்தில், அவர்களின் குணம், ஒழுக்க கேடு என்று எண்ணப்படுவதில்லை. இதுவெல்லாம் இன்று சகஜம் ஆகிவிட்டது. அவர்கள் ஒழுக்கக்கேடு என்னவென்றால் அவர்கள் குடிகாரர்கள், காமவெறி பிடித்தவர்கள். எனவே அவர்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என அழைக்கப்படுவார்கள். அசைவம் உண்பவர்களும் கூட. ஆக... ஆனால் பிறகு அவர்கள் பகவான் சைதன்யர் மற்றும் நித்யானந்தரால் மீட்கப்பட்டார். நரோத்தம தாச தாக்குரின் விளக்கம் என்னவென்றால், இந்த யுகத்தில் மக்கள் குடிகாரர்களாக, காம வெறி கொண்டவர்களாக, அசைவம் உண்பவராக, சூதாட்டகாரர்களாக, இப்படி எப்பேர்ப்பட்ட பாவச் செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களாக இருந்தாலும் சரி, இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் பங்கேற்று, ஹரே கிருஷ்ண ஜெபம் செய்தால், சந்தேகத்திற்கு இடமின்றி அவர்கள் மீட்கப்படுவார்கள். இது பகவான் சைதன்யரின் ஆசீர்வாதம். மேலும் நரோத்தம தாச தாக்குர் வேண்டுகிறார், ஹா ஹா ப்ரபு நந்த-ஸுத, வ்ருஷபானு-ஸுத-ஜுத. "என் அன்புக்குரிய கிருஷ்ண பெருமானே, நீ நந்த மஹாராஜரின் மகன் ஆவாய், மற்றும் வ்ருஷபானு மன்னரின் மகளான ராதாராணி, உன் துணைவி ஆவாள். நீங்கள் இருவரும் இங்கு சேர்ந்து நிற்கிறீர்கள்." நரோத்தம தாச கஹே, நா தெலிஹொ ராங்கா பாய, "நான் இப்போது உன்னிடம் சரணடைகின்றேன், தயவுசெய்து என்னை விரட்டாதே, உன் தாமரை பாதங்களால் என்னை தள்ளிவிடாதே, ஏனென்றால் எனக்கு வேறு எந்த அடைக்கலமும் இல்லை. வேறு வழியில்லாமல் நான் உன்னிடம், உன் தாமரை பாதங்களில் அடைக்கலம் கேட்கிறேன். எனவே தயவுசெய்து என்னை ஏற்று, என்னை மீட்டெடுக்க வேண்டும்." இதுதான் இந்த பாடலின் பொருள்.