TA/Prabhupada 0391 - மானஸ தேஹ கேஹ பொருள்விளக்கம்
மான்ஸா, தேஹோ, கேஹோ, ஜோ கிச்சு மோர. இது பக்திவினோத தாக்குரால் பாடப்பட்ட ஒரு பாடல். அவர் முழுமையாக சரணாகதி அடைவதற்கான முறையை போதக்கிறார். மான்ஸா, தேஹோ, கேஹோ, ஜோ கிச்சு மோர. முதலில் அவர் தனது மனத்தை அர்ப்பணிக்கிறார், ஏனென்றால் எல்லா விதமான மனோபாவனைகளுக்கும் மனம் தான் காரணம். மற்றும் சரணாகதி அடைவதற்கு, பக்தியில் பணியாற்றுவதற்கு முதல் படி என்றால் மனதை கட்டுப்படுத்துவது. எனவே அவர் கூறுகிறார், மனஸா, அதாவது "மனம்", பிறகு தேஹ: "புலன்கள்." ஷரீர. தேஹ என்றால் உடல்; உடல் என்றால் புலன்கள். ஆக, நாம் நமது மனதை கிருஷ்ணரிடம் அர்ப்பணித்தால், புலன்களும் தானாகவே கீழ்படியும். பிறகு, "என் இல்லம்." தேஹ, கேஹொ. கேஹொ என்றால் இல்லம். ஜோ கிச்சு மோர. நம்முடைய அனைத்து உடைமைகளும் அடிப்படையில் இந்த மூன்று விஷயங்களைக் கொண்டது: மனம், உடல் மற்றும் நமது இல்லம். ஆக பக்திவினோத தாக்குர் அனைத்தையும் அர்ப்பணிக்கவேண்டும் என பரிந்துரைக்கிறார். அர்பிலு துவா பதே, நந்த-கிஷோர. நந்த-கிஷோர என்றால் கிருஷ்ணர். அதாவது "நான் என் மனதை, உடலை மற்றும் இல்லத்தை உன்னிடம் அர்ப்பணிக்கிறேன்." பிறகு, ஸம்பதே விபதே, ஜீவனெ-மரணெ: "நான் இன்பத்தில் இருந்தாலும் சரி, துன்பத்தில் இருந்தாலும் சரி, உயிருடன் இருந்தாலும் சரி, இறந்திருந்தாலும் சரி." தாய் மம கெலா, துவ ஓ-பத பரணே: "நான் இப்பொழுது நிம்மதியை உணருகிறேன். உன்னிடம் அனைத்தையும் அர்ப்பணித்ததால் தான் என்னால் இந்த நிம்மதியை உணர முடிகிறது." மாரோபி ராகோபி-ஜோ இச்சா தொஹாரா: "இனிமேல் எல்லாம் உன் கையில் தான் உள்ளது. என்னை உயிருடன் வைத்திருப்பதும் கொல்வதும் உன்னைப் பொருத்தது." நித்ய-தாச ப்ரதி துவா அதிகார: "உன் தாசனுடன் உனக்கு சரி என்று படுவது எதுவாக இருந்தாலும், அதை செய்வதற்கான முழு உரிமையும் உனக்கு இருக்கிறது. நான் உன் நித்திய தாசன்." ஜன்மோபி மோய் இச்சா ஜதி தோர: "உன் விருப்பம் எப்படியோ அப்படி" - ஏனென்றால் கடவுள் ஒரு பக்தனை தன் திருவீட்டிற்கு திரும்பி அழைத்துச் செல்வார் என்பதை நாம் அறிவோம் - ஆகையால் பக்திவினோத தாக்குர் கூறுகிறார், "நான் மீண்டும் பிறவி ஏற்கவேண்டும் என்று உனக்கு விருப்பம் இருந்தால் பரவாயில்லை." பக்த-க்ருஹெ ஜனி ஜன்ம ஹௌ மோர: "என் ஒரே விண்ணப்பம் என்னவென்றால், நான் மறுபடியும் பிறவி ஏற்க வேண்டிய பட்சத்தில், தயவுசெய்து ஒரு பக்தரின் இல்லத்தில் பிறக்குமாறு வாய்ப்பை அளியுங்கள்." கீட-ஜன்ம ஹௌ ஜத துவா தாஸ: "ஒரு பூச்சியாக பிறந்தாலும் எனக்கு அதைப்பற்றி கவலையில்லை, ஆனால் நான் ஒரு பக்தரின் இல்லத்தில் பிறக்கவேண்டும்." பாஹிர் முக ப்ரம்ம-ஜன்மெ நாஹி ஆஸ: "ஒரு அபக்தனாக வாழ்வதில் எனக்கு விருப்பமில்லை. நான் ஒரு பிரம்மதேவராகவே பிறக்கவேண்டியிருந்தாலும் சரி. நான் பக்தர்களின் சகவாசத்தில் இருக்க விரும்புகிறேன்." புக்தி-முக்தி-ஸ்ப்ருஹா விஹீன ஜெ பக்த: "எனக்கு தேவை, பௌதீக சுகம் அல்லது ஆன்மீக விமோசனத்தைப் பற்றி கவலைப்படாத ஒரு பக்தன்." லபாய்தெ தாகொ சங்க அனுரக்த: "அப்பேர்ப்பட்ட தூய்மையான பக்தர்களுடன் தொடர்பு கொள்வதே என்னுடைய ஆசை." ஜனக ஜனனி, தாயித, தனய: "இனிமேல் நீ தான் என் தந்தை, நீயே என் சகோதரன், நீயே என் மகள், நீயே என் மகன், என் கடவுளும் நீயே, என் குருவும் நீயே, என் கணவனும் நீயே, அனைத்தும் நீயே." பக்திவினோத கொஹெ, ஸுனோ கானா: "என் நாதனே கானா -கிருஷ்ணா, நீ ராதாராணியின் காதலன், ஆனால் நீ தான் என் உயிர், தயவுசெய்து என்னை இரட்சிக்கவேண்டும்."