TA/Prabhupada 0394 - நிதாய் பத-கமல பொருள்விளக்கம்



Purport to Nitai-Pada-Kamala -- Los Angeles, January 31, 1969

நிதாய்-பத-கமல, கோடி-சந்த்ர-ஸுஷீதல, ஜெ சாயாய ஜகத ஜுராய். இது நரோத்தம தாச தாக்குர் எழுதிய ஒரு பாடல். கௌடிய-வைஷ்ணவ-சம்பிரதாயத்தில் அவர் ஒரு மிகப்பெரிய ஆச்சாரியார். வைஷ்ணவ தத்துவத்தைப் பற்றி அவர் பல பாடல்களை எழுதியுள்ளார், மற்றும் அவை வேத ஞானத்துடன் முழுமையாக ஒத்துப்போவதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இங்கு நரோத்தம தாச தாக்குர் பாடுகிறார், "இந்த உலகம் முழுவதும், பௌதிக வாழ்க்கை எனும் சுட்டெரிக்கும் தீயால் துன்பப்பட்டிருக்கிறது. ஆகையால், ஒருவன் பகவான் நித்தியானந்தரின் தாமரை பாதங்களில் அடைக்கலம் புகுந்தால்..." இன்றைக்கு அவர் பிறந்தநாள், 31 ஜனவரி, 1969. ஆகவே நாம் நரோத்தம தாச தாக்குரின் இந்த போதனைய ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும். அதாவது, கொழுந்துவிட்டு எரியும் பௌதிக வாழ்க்கையின் இந்த தீயின் துன்பத்தை தணிப்பதற்காக, ஒருவன் பகவான் நித்யானந்தரின் தாமரை பாதங்களில் அடைக்கலம் ஏற்றாக வேண்டும். ஏனென்றால், கோடிக்கணக்கான நிலவுகளின் இணைத்த ஒளியில் இருக்கும் குளிர்ச்சிக்கு சமமான நிம்மதி அங்குள்ளது. அதாவது ஒருவரால் உடனேயே ஒரு நிம்மதியான சூழ்நிலையை உணரமுடியும். ஒருவன் நாள்முழுவதும் உழைத்தப் பிறகு நிலவொளியில் வந்து நின்றால் எப்படி ஒரு நிம்மதியை உணரமுடிகிறதோ அப்படித்தான். பகவான் நித்யானந்தரிடம் அடைக்கலம் பெற்றவுடனேயே எந்த பௌதிகவாதியாலும் அந்த தணிப்பை உணரமுடியும். பிறகு அவர் கூறுகிறார், நிதாய்-பத-கமல, கோடி-சந்திர-ஸுஷீதல, ஜெ சாயாய் ஜகத ஜுராய், ஹெனோ நிதாய் பினே பாய், ராதா-க்ருஷ்ண பாய்தெ நாய், தரோ நிதாய்-சரண துக்கானி. அவர் கூறுகிறார், "நீ முழுமுதற் கடவுளின் திருவீட்டிற்கு திரும்பி செல்ல ஆவலாக இருந்தால், ராதா-கிருஷ்ணரின் சகவாசத்தை பெறுவதற்கு ஆசை இருந்தால், நித்யானந்தரிடம் அடைக்கலம் ஏற்பதே சிறந்த வழியாகும்." பிறகு அவர் கூறுகிறார், ஸெ ஸம்பந்த நாஹி ஜார, ப்ருத ஜன்ம கெலோ தார. "யாரொருவரால் நித்யானந்தருடன் தொடர்பு கொள்ளமுடியவில்லையோ, அவர் தனது அரிய வாழ்க்கையை வெறும் வீணாக்கிவிட்டதாக எண்ணவேண்டும்." ப்ருத ஜன்ம கெலோ, ப்ருத என்றால் எந்த பிரயோசனமும் இல்லாமல், மற்றும் ஜன்ம என்றால் வாழ்க்கை. கெலோ தார, வீணாகிவிட்டது. ஏனென்றால் அவன் நித்யானந்தருடன் தொடர்பு கொள்ள முயலவில்லை. நித்யானந்த என்ற பெயரே குறிக்கிறது... நித்ய என்றால் என்றென்றும். ஆனந்த என்றால் இன்பம். பௌதிக இன்பம் என்பது நித்தியமானது அல்ல. அது தான் வித்தியாசம். ஆகையால் புத்திசாலியானவர்கள், பௌதிக உலகில் உள்ள நிலையற்ற இன்பத்திற்காக கவலைப்படுவதில்லை. நாம் உயிர்வாழிகளில் ஒவ்வொருவரும் இன்பத்தை தேடிச் செல்கிறோம். ஆனால் நாம் தேடிக்கொண்டிருக்கும் இன்பம், நிலையற்றது, தற்காலிகமானது. அது இன்பம் அல்ல. உண்மையான இன்பம் என்றால் நித்யானந்தர், நிரந்தரமான இன்பம். ஆக நித்யானந்தருடன் எந்த தொடர்பும் இல்லாதவனின் வாழ்க்கை கெட்டுப்போனதாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஸெ ஸம்பந்த நாஹி ஜார, ப்ருத ஜன்ம கெலோ தார, ஸெய் பஷீ பொரோ துராசார். இங்கு நரோத தாச தாக்குர் மிகவும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துகிறார். அப்பேர்ப்பட்ட மனிதன் ஒரு கீழ்ப்படியாத மிருகத்தைப் போன்றவன். சில மிருகங்களை பணியவைக்க முடியாது. ஆக நித்யானந்தருடன் தொடர்பு கொள்ளாத யாவரையும், கீழ்ப்படியாத மிருகத்திற்கு சமமாக கருதவேண்டும். ஸெய் பஷு பொரோ துராசார். ஏன் அப்படி? ஏனென்றால் நிதாய் நா பொலிலோ முகே: "அவன் ஒரு முறைகூட நித்யானந்தரின் திருநாமத்தை உச்சரிக்கவில்லை." மேலும் மஜிலோ ஸம்ஸார-ஸுகே, "இந்த பௌதிக இன்பத்தில் மூழ்கிவிட்டான்." வித்யா-குலே கி கொரிபே தார. "அந்த அறிவற்றவனுக்கு புரியவில்லை, எப்படி அவனது படிப்பு, உறவினர்கள், பாரம்பரியம், தேசப் பற்று, இவையெல்லாம் அவனை உதவமுடியும் ? இவையெல்லாம் அவனை உதவாது. இவையெல்லாம் தற்காலிகமானவை. நிரந்தரமான இன்பம மட்டுமே வேண்டுமென்றால், நித்யானந்தருடன் தொடர்பு கொள்ளவேண்டும். வித்யா-குலே கி கொரிபே தார். வித்யா என்றால் கல்வி, மற்றும் குல என்றால் குடும்பம், நாட்டுரிமை. நாம் நல்ல ஒரு குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கலாம், அல்லது கௌரவமுள்ள ஒரு தேசத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம், ஆனால் இந்த உடல் முடிந்து போனதுடன், இதுவெல்லாம் எனக்கு உதவாது. நான் செய்த செயல்களை நான் சுமக்க வேண்டியுள்ளது. அந்த செயல்களுக்கு ஏத்த மாதிரி, வேறொரு உடலை நான் வலுக்கட்டாயமாக ஏற்கவேண்டியிருக்கும். அது மனித உடலை தவிர்த்து வேறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆகையால் இந்த விஷயங்களெல்லாம் நம்மை காப்பாற்ற முடியாது, உண்மையான இன்பத்தையும் அளிக்கமுடியாது. ஆக நரோத்தம தாச தாக்குர் அறிவுறுத்துவது என்னவென்றால் வித்யா-குலே கி கொரிபே தார. பிறகு அவர் கூறுகிறார், அஹங்காரெ மத்த ஹொய்யா. "பொய்யான கௌரவம் மற்றும் செல்வாக்கை வெறித்தனமாக நாடிச்சென்று..." தம்மை இந்த உடலால், உடல் ரீதியான உறவுகளால் தவறாக அடையாளப்படுத்துவதை "அஹங்கார மத்த ஹொய்யா" என்றழைக்கப்பட்டிருக்கிறது. இந்த பொய்யான கௌரவத்திற்காக நாம் பைத்தியமாக இருக்கிறோம். அஹங்காரெ மத்த ஹொய்யா, நிதாய்-பத பாஸரியா. இந்த போலி கௌரவத்தினால் நாம் நினைக்கிறோம், "ஓ, என்ன இது நித்யானந்தர்? அவரால் எனக்காக என்ன செய்யமுடியும்? இதுவெல்லாம் எனக்கு கவலை இல்லை." இவை தான் போலி கௌரவத்தின் அறிகுறிகள். அஹங்காரெ மத்த ஹொய்யா, நிதாய்-பத பாஸ... அஸத்யேர ஸத்ய கொரி மானி. அதன் விளைவாக பொய்யான ஒன்றை நான் ஏற்றுக்கொள்கிறேன். உதாரணமாக, நான் இந்த உடலை ஏற்கிறேன். இதோ இந்த உடல், நான் இந்த உடல் கிடையாது. ஆக, இப்படி தவறாக அடையாளப்படுத்திக் கொள்வதால் நான் மேல் மேலும் சிக்கிக் கொள்கிறேன். இப்படி போலி கௌரவத்தால் யாரொருவன் ஆணவமாக இருக்கிறானோ, அஹங்காரெ மத்த ஹொய்யா, நிதாய்-பத பா... அஸத்யேர ஸத்ய கொரி மானி, அவன் தவறான ஒன்றை சரி என்று எண்ணுகிறான். பிறகு அவர் கூறுகிறார், நிதாயேர் கொருணா ஹபே, ப்ரஜே ராதா-க்ருஷ்ண பாபெ. நீ உண்மையாகவே இறைவனின் திருநாட்டிற்கு திரும்பி செல்வதில் உறுதியாக இருந்தால், தயவுசெய்து நித்யானந்தரின் கருணையை நாடிச் செல். நிதாயேர் கொருணா ஹபெ, ப்ரஜே ராதா-க்ருஷ்ண பாபெ, தரோ நிதாய்-சரண துக்கானி "நித்யானந்தரின் தாமரை பாதங்களை தயவுசெய்து பிடித்துக்கொள்." பிறகு அவர் கூறுகிறார், நிதாயேர் சரண ஸத்ய. இந்த பௌதிக உலகில் நாம் பல விஷயங்களை நம்பி அதில் இறங்கிய பிறகு காலப்போக்கில் அது போலியானதாக நிரூபிக்கப்படுகிறது. அதுபோலவே, ஒருவேளை நாம் நித்யானந்தரின் தாமரை பாதங்களை நம்பி கைப்பிடித்த பிறகு - அது தவறானதாக நிரூபிக்கப்படலாம் அல்லவா. ஆனால் நரோத்தம தாச தாக்குர் உறுதியளிக்கிறார், நிதாயேர சரண ஸத்ய: "அது போலியானதல்ல. ஏனென்றால் நித்யானந்தர் நித்தியமானவர், அவரது தாமரைப் பாதங்களும் நித்தியமானவை." தான்ஹார ஸேவக நித்ய. மேலும் நித்யானந்தருக்கு யாரொருவன் திருப்பணி புரிகிறானோ அவுனும் நித்தியமானவன் ஆகிறான். நித்தியமானவர் ஆகாமல் யாவராலும் நித்தியமானவரை சேவிக்க முடியாது. அது தான் வேத ஞானம். பிரம்மன் ஆகாமல், ஒருவரால் பரபிரம்மனை அணுக முடியாது. உதாரணமாக நெருப்பாகாமல் நெருப்பில் நுழைய முடியாது. தண்ணீராகாமல் தண்ணீரில் நுழைய முடியாது. அதுபோலவே, முழைமையாக ஆன்மீகத்தன்மையை அடையாமல், யாவராலும் ஆன்மீக உலகத்தில் நுழைய முடியாது. ஆக நிதாயேர் சரண ஸத்ய. நித்யானந்தரின் தாமரை பாதங்களை பிடித்தால், ஒருவரால் உடனேயே ஆன்மீகத்தன்மையை அடையமுடியும். மின்சாரத்தை தொட்டவுடன் மின்மயமாக்கப்படுவது போல் தான். அது இயல்பானது. அதுபோலவே, நித்யானந்தர் என்றால் நித்தியமான ஆனந்தம் கொண்டவர், எப்படியாவது நித்யானந்தருடன் தொடர்பு கொண்டால், நாமும் என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்கலாம். த்ன்ஹார ஸேவக நித்ய. ஆக நித்யானந்தரின் தொடர்பில் இருப்பவர் யாரும், நித்தியமானவர் ஆகிறார். நிதாயேர் சரண ஸத்ய, தான்ஹார ஸேவக நித்ய, த்ருட கொரி தரோ நிதாய்ர பாய ஆக அவரை கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள். நரோத்தம பொரோ துகி, நிதாய் மொரே கொரொ ஸுகி. இறுதியில், இந்த பாடலை எழுதிய நரோத்தம தாச தாக்குர், நித்யானந்தரிடம் விண்ணப்பிக்கிறார், "என் அருமை நாதரே, நான் ஆழ்ந்த துன்பத்தில் இருக்கின்றேன். ஆக தயவுசெய்து என்க்கு மகிழ்ச்சியை தரவேண்டும். மற்றும் கருணை செய்து என்னை தங்களது தாமரை பாதங்களில் ஒரு மூலையில் வைத்திருங்கள். இது தான் இந்த பாடலின் பொருள்.