TA/Prabhupada 0407 - ஹரிதாசரின் சரித்திரத்தை பார்த்தால் அவர் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர்



Discourse on Lord Caitanya Play Between Srila Prabhupada and Hayagriva -- April 5-6, 1967, San Francisco

பிரபுபாதர்: இடையில் ஒரு பிராம்மணர் வந்து பகவான் சைதன்யரை இவ்வாறு அழைத்தார், "நான் பனாரஸைச் சேர்ந்த அனைத்து சன்னியாசிகளையும் அழைத்திருக்கிறேன். தாங்கள் இந்த மாயாவாதி சன்னியாசிகளை சந்திப்பதில்லை என்பதை நான் அறிவேன். இருந்தாலும் நான் தங்களை அழைக்கின்றேன். தயவுசெய்து தாங்கள் என் அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.” சைதன்ய மஹாபிரபு இதை பிரகாஷாநந்த சரஸ்வதியை சந்திப்பதற்கான வாய்ப்பாக எண்ணினார். அவர் பிராம்மணரின் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். பிறகு அவர்கள் எல்லோரும் பேச்சுவார்த்தை கொள்ள கூறினார்கள். அதில் பிரகாஷாநந்த சரஸ்வதியுடன் வேதாந்த-சூத்திரத்தின் மேல் பேச்சுவார்த்தை நடந்தது. மேலும் அவர் அவரை (பிரகாஷாநந்தரை) ஒரு வைஷ்ணவராக மாற்றினார். அது வேறு ஒரு சம்பவம். ஹயக்ரீவன்: இவருக்கு எத்தனை வயது இருக்கும்? பிரபுபாதர்: பிரகாஷாநந்த சரஸ்வதியா? அவரும் வயதானவர் தான். அறுபதுக்கு குறைந்து இருக்காது. ஆம். ஹயக்ரீவன்: அந்த நகரத்தில் அவர் யாராக இருந்தார்? அவர் பதவி... அவர் வேதாந்த ஆசிரியரா? பிரபுபாதர்: பிரகாசாநந்த சரஸ்வதி. அவர் ஒரு மாயாவாதி சன்னியாசியாக இருந்தார். அவர் சைதன்ய மஹாபிரபுவின் தத்துவத்தை ஏற்று அவருக்கு மரியாதை செலுத்தினார். அவர் திருப்பாதங்களை தொட்டது மட்டும் இல்லாமல் மஹாபிரபுவின் இயக்கத்திலும் சேர்ந்தார். ஆனால் அவர் முறையாக வைஷ்ணவர் ஆனதைப் பற்றி எந்த குறிப்பும் இல்லை. ஆனால் அவர் சைதன்ய மஹாபிரபுவின் தத்துவத்தை ஏற்றுக்கொண்டார். மறுபுறம் சர்வபௌம பட்டாச்சாரியார் முறையாக வைஷ்ணவர் ஆனார். பிறகு திரு ஹரிதாசர் சந்திப்பு... ஹயக்ரீவன்: ஐந்தாம் காட்சி. பிரபுபாதர்: ஐந்தாம் காட்சி. ஹயக்ரீவன்: இது ஹரிதாச தாகுரா? பிரபுபாதர்: ஹரிதாச தாகுர். ஹயக்ரீவன்: யாருடைய இறப்பு? ஹரிதாசருடைய இறப்பிலா? பிரபுபாதர்: ஆமாம். ஹரிதாசர் நல்ல வயதானவர். அவர் முஹம்மதியர். ஹயக்ரீவன்: இவர் அந்த நதியில் தூக்கி எறியப்பட்டவர் தானே? பிரபுபாதர்: ஆமாம். ஹயக்ரீவன்: ஆக இங்கு இறுதியாக அவர் தன் முடிவை அடைகிறார், இந்த ஐந்தாம் காட்சியில். பிரபுபாதர்: அதையெல்லாம் காண்பிப்பது நமது நோக்கம் அல்ல. ஹரிதாச தாகுர் வாழ்க்கை ஒரு தனி கதை, ஆனால் நாம் அதை காண்பிக்க போவதில்லை. ஹயக்ரீவன்: ஆம். சரி. வெறும் இந்த ஒரு சம்பவம் தான். பிரபுபாதர்: இந்த குறிப்பிட்ட சம்பவம் முக்கியமானது, அதாவது சைதன்ய மஹாபிரபு ஒரு பிராம்மணர் மேலும் அவர் ஒரு சன்னியாசியாகவும் இருந்தார். அப்போதைய சமூக வழக்கப்படி ஒரு முஹம்மதியரை தொடுவது ஒரு தகாத விஷயம், ஆனால் இந்த ஹரிதாச தாகுரோ ஒரு முஹம்மதியர், மற்றும் அவர் இறப்பில், அவர் உடலை தானே இரு கைகளால் தூக்கி ஆடினார். பிறகு அவரை சமாதியில் வைத்து பிரசாதத்தை வினியோகம் செய்தார். அதற்கு முன்பு ஹரிதாச தாகுர் இரண்டு மூன்று நாட்களாகவே உடல் சரியில்லாமல் இருந்தார். அவர் முஹம்மதியராக இருந்த காரணத்தால், அவர் ஜகன்னாதரின் கோயில் படி ஏறவில்லை. ஏனென்றால் இந்துக்கள் மிகவும் கண்டிப்பாக இருந்தார்கள். அவர் ஒரு பக்தராக இருந்தபோதிலும் அவர் அதை பொருட்படுத்தவில்லை. எதற்காக வீண் வம்பு? ஆக சைதன்ய மஹாபிரபு அவரது இந்த சுபாவத்தை மெச்சினார், அதாவது அவர் எந்த விதமான வம்பையும்... தாம் பக்தன் ஆனதால் பலவந்தமாக கோயிலுக்குள் செல்ல முயலவில்லை. ஆனால் சைதன்ய மஹாபிரபு தினந்தோறும் தானே நேரடியாக அவரை பார்க்க வருவார். கடலில் குளிக்க போகும் வழியில், முதலாக அவர் ஹரிதாசரை சந்திப்பார். "ஹரிதாசா? நீ என்ன செய்கிறாய்?" ஹரிதாசர் அவருக்கு மரியாதை செலுத்துவார், பிறகு சற்று நேரம் அவருடன் அமர்ந்து பேசுவார். அதன்பின் சைதன்ய மஹாபிரபு குளிக்க செல்வார். இப்படி ஒருநாள் அவர் ஹரிதாசரை பார்க்க வந்தபோது, ஹரிதாசர் நோயுற்று இருந்தார். "ஹரிதாசா? உன் உடல் நலம் தானா?" "ஆமாம் ஐய்யா, அவ்வளவு நன்றாக இல்லை... இது உடல் தானே. அப்படி தான் இருக்கும்." அதற்கு மூன்றாம் நாள், ஹரிதாசர் தன் உடலை அன்று விட்டுச்செல்ல நேரம் வந்துவிட்டது என்பதை அவர் கண்டு உணர்ந்தார். ஆகையால் சைதன்ய மஹாபிரபு அவரிடம் கேட்டார், "ஹரிதாசா, உன் ஆசை என்ன?" இருவரும் புரிந்துகொண்டார்கள். ஹரிதாசர் கூறினார், "என் கடைசி நேரம் நெருங்கிவிட்டது. தாங்கள் தயவுசெய்து என் முன்னால் நின்றால் என் ஆசை தீரும்." ஆக சைதன்ய மஹாபிரபு அவர் முன்னால் நின்றவுடன் அவர் தனது உடலை விட்டுச்சென்றார். (இடைவேளை) ஹயக்ரீவன்: தாங்கள் கூறியிருந்தீர்கள்... பிரபுபாதர்: அவர் மறைந்த பிறகு அவர் உடலை சைதன்ய மஹாபிரபு தானே தூக்கினார், பிறகு மற்ற பக்தர்களுடன் சேர்ந்து அவரை கல்லறையில் புதைத்து அடக்கம் செய்தார். அந்த கல்லறை இன்றைக்கும் ஜகன்னாத புரியில் இருக்கிறது. ஹரிதாச தாகுரின் சமாதி, கல்லறை. ஆக சைதன்ய மஹாபிரபு ஆட ஆரம்பித்தார். அது தான் சடங்காக இருந்தது. ஏனென்றால் வைஷ்ணவ சடங்குகளில் எல்லாம் கீர்த்தனமும் ஆடலும் தான். இவ்வாறு ஹரிதாச தாகுரின் கடைசி விழா நிகழ்ந்தது. ஹயக்ரீவன்: தாங்கள் சைதன்ய மஹாபிரபு ஹரிதாச தாகுருடன் சேர்ந்து ஆடுவதைப் பற்றி ஏதோ கூறியிருந்தீர்களே ? பிரபுபாதர்: ஹரிதாசருடைய உடல். சைகன்யர்... இறந்த உடல். ஹரிதாசருடைய இறந்த உடல். ஹயக்ரீவன்: ஓ, அவருடைய இறந்த உடலுடனா? பிரபுபாதர்: ஆம். அவரது இறந்த உடலை தூக்கிக் கொண்டு. ஹயக்ரீவன்: அவர் இறந்த பிறகு. பிரபுபாதர்: ஆம், அவர் இறந்த பிறகு. ஹயக்ரீவன்: சைதன்ய... பிரபுபாதர்: நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஹரிதாசர் உயிருடன் இருந்தபோது, அவர் சேர்ந்து ஆடினார். ஆனால் ஹரிதாசருடைய இறப்புக்குப் பிறகு, சைதன்ய மஹாபிரபு தானே அவர் உடலை தூக்கி, கீர்த்தனத்துடன் பாடி ஆட ஆரம்பித்தார். அதாவது அவர் இறுதி சடங்கை சைதன்ய மஹாபிரபுவே நடத்தினார். அவர் அந்த உடலை எடுத்து கடற்கரைக்கு சென்றபிறகு கல்லறையில் அவரை... ஹயக்ரீவன்: அவர் சடங்கை நடத்தி... பிரபுபாதர்: ஆம். இறுதி சடங்கு, ஆம். ஹயக்ரீவன்: கீர்த்தனத்துடன். பிரபுபாதர்: ஆம். கீர்த்தனத்துடன். கீர்த்தனை எப்போதும் இருக்கும். அடக்கம் செய்தபிறகு பிரசாத வினியோதமும் கீர்த்தனமும் இருந்தது. ஹரிதாச தாகுர். இந்த இடத்தில் மனம் உருகும் வகையில் ஹரிதாசருடன் நடந்த பேச்சை சற்று நடித்து காட்ட வேண்டும். ஹாலோவீன்: சரி. வேறு ஏதாவது... ஹரிதாசரைப் பற்றி வேறு ஏதாவது குறிப்புகள் உள்ளதா? பிரபுபாதர்: ஹரிதாசருடைய வாழ்க்கை வரலாறு என்னவென்றால் அவர் ஒரு முஹம்மதியர் குடும்பத்தில் பிறந்தவர். எப்படியோ அவர் ஒரு பக்தர் ஆகி மூன்று இலட்சம் தடவை தினமும் திருநாமத்தை ஜெபித்தார், ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே, எனவே சைதன்ய மஹாபிரபு அவருக்கு ஆச்சாரியார் பட்டத்தை சூட்டினார், திருநாம ஜெபத்தின் அதிகாரி என்று. ஆகையால் தான் நாம் அவரை, "நாமாச்சாரியார் ஹரிதாச தாகுர் கீ ஜய." என புகழ்கிறோம். ஏனென்றால் அவர் ஹரே கிருஷ்ண திருநாம ஜெபத்தின் அதிகாரி, அதாவது ஆச்சாரியாராக அங்கீகரிக்கப்பட்டார். பிறகு பகவான் சைதன்யர் சன்னியாசம் ஏற்றப் பொழுது, ஹரிதாச தாகுர் தன் ஆசையை தெரிவித்தார், "என் அருமை நாதரே, தாங்கள் நபத்வீபை விட்டுச் செல்கிறீர்கள், பிறகு நான் வாழ்வதற்கு என்ன பயன்? தாங்கள் என்னையும் கூட்டி அழைத்துச் செல்லுங்கள் இல்லாவிட்டால் என்னை இங்குயே என் உயிரை இழக்க அனுமதியுங்கள்." அதற்கு சைதன்ய மஹாபிரபு கூறினார், “வேண்டாம். தாங்கள் எதற்காக உயிரை விடவேண்டும்? தாங்கள் என்னுடன் வாருங்கள்.” ஆக மஹாபிரபு அவரை ஜகன்னாத புரிக்கு தன்னுடன் அழைத்துச் சென்றார். ஜகன்னாத புரியில், அவர் தம்மை முஹம்மதியர் குடும்பத்தில் பிறந்ததாக எண்ணி கோயில் படியை ஏறவில்லை. எனவே சைதன்ய மஹாபிரபு அவருக்கு காசிநாத மிஷ்ராவின் இல்லத்தில் தங்க இடம் வழங்கினார் அங்கு அவர் ஜெபம் செய்து வந்தார் மற்றும் சைதன்ய மஹாபிரபுவும் அவருக்கு பிரசாதம் அனுப்புவார். இவ்வாறு அவர் தன் காலத்தை கழித்தார். சைதன்ய மஹாபிரபு அவரை பார்க்க தினமும் வருவார். பிறகு இப்படி ஒருநாள் அவர் மறைந்தார்.