TA/Prabhupada 0673 – ஒரு குருவி கடல்நீரை வற்றச்செய்ய முயல்கிறதென்றால்-அதுவே மனவுறுதி



Lecture on BG 6.16-24 -- Los Angeles, February 17, 1969

பக்தர்: "உறுதியைப் பொறுத்தவரை, கடலின் அலைகளால் தனது முட்டைகளை இழந்த குருவியின் உதாரணத்தைப் பின்பற்ற வேண்டும். ஒரு குருவி கடற்கரையில் முட்டைகளை இட்டது. ஆனால் பெருங்கடல் அம்முட்டைகளை தனது அலைகளால் இழுத்துச் சென்றுவிட்டது. மிகவும் வருத்தமுற்ற குருவி, தனது முட்டைகளைத் திருப்பித் தரும்படி கடலிடம் கேட்டது. அம்முறையீட்டினை கடல் கண்டுகொள்ளவேயில்லை. எனவே, குருவி கடலை வற்றச் செய்வது என்று முடிவு செய்தது. தன் சின்னஞ்சிறு அலகால்..."

பிரபுபாதா : கவனியுங்கள், ஒரு குருவி, கடலை வற்றச் செய்ய முயற்சிக்கிறது. (சிரிப்பு) இது தான் உறுதி எனப்படுகிறது. நம் காந்தியைப் போல. அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டார். அஹிம்ஸை மற்றும் ஒத்துழையாமை மூலமாகப் போர். ஆனால் அதில் உறுதியிருந்தது. அதாவது, "ஆங்கிலேயர்களை வெளியேற்றியே ஆக வேண்டும்." அதைச் செய்தும் காட்டினார். மேலும் அவரது ஆயுதம் என்ன? அஹிம்சை. "சரி, நீ என்னைத் தாக்கலாம், கொல்லலாம், நான் உன்னைத் தாக்கமாட்டேன்." பார்த்தீர்களா? இதுவே உறுதி. மக்கள் அவரைப் பார்த்துச் சிரித்தார்கள். "காந்தி ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிடுகிறார். ஆங்கிலேயரின் சாம்ராஜ்ஜியமோ மிகவும் சக்தி வாய்ந்தது." உண்மையில், ஆங்கிலயர்கள், இந்தியாவை இழந்த பிறகு, மொத்த சாம்ராஜ்ஜியத்தையுமே இழந்துவிட்டனர். ஏனெனில், இந்தியா ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தின் மணிமகுடமாகத் திகழ்ந்தது. அவர்கள், கிழக்கிலிருந்த எல்லா நாடுகளையும் இழந்தனர், எகிப்தையும் இழந்தனர். சூயஸ் கால்வாயை இழந்தனர், எல்லாவற்றையும் இழந்தனர். எனவே உறுதி என்பது, மிக அருமையானது. மேலே சொல்லுங்கள்.

பக்தர்: "தனது சின்னஞ்சிறு அலகால் கடல் நீரை வெளியேற்ற ஆரம்பித்தது. அதன் சாத்தியமற்ற உறுதியைக் கண்டு எல்லாரும் சிரித்தனர். இச்செய்தி பரவ, இறுதியில் விஷ்ணுவின் மாபெரும் பறவை வாகனமான கருடன் இதனைக் கேட்டார். தனது சிறிய சகோதரிப் பறவையின் மீது கருணை கொண்ட அவர், குருவியைக் காண வந்தார். சிறு குருவியின் உறுதியினால் மகிழ்ந்த அவர், உதவி செய்வதாக வாக்களித்தார். இவ்வாராக, உடனடியாகக் குருவியின் முட்டைகளைத் திருப்பித் தரும்படியும் இல்லாவிடில் குருவியின் செயலைத் தான் செய்துவிடுவேன் என்றும் கருடன் கடலை எச்சரித்தார். கடல் பயந்துபோய் குருவியின் முட்டைகளைத் திருப்பிக் கொடுத்தது. இவ்வாறாகக் கருடனின் கருணையினால் குருவி மகிழ்வுற்றது.

பிரபுபாதா: ஆம். எனவே கருடன் அதன் உதவிக்கு வந்தார்.

பக்தர்: அதுபோல, யோகப் பயிற்சி, குறிப்பாகக் கிருஷ்ண உணர்வில் செய்யப்படும் பக்தியோகம், மிகவும் கடினமாகத் தோன்றலாம். ஆனால், யாரேனும் மிக்க உறுதியுடன் கொள்கைகளைப் பின்பற்றினால், கடவுள் நிச்சயமாக உதவுவார்; ஏனெனில், தனக்கு உதவிக் கொள்பவனுக்குக் கடவுள் உதவுகிறார்.

பிரபுபாதா : ஏதேனும் கேள்விகள்?

பக்தர்: பிரபுபாதா, நீங்கள் வெற்றியடைவதற்கு உறுதி ஒரு முக்கிய காரணம் என்று கூறினீர்கள்... இந்த உற்சாகத்தை எப்படித் தக்க வைத்துக் கொள்வது? அதாவது, இந்த உற்சாகம் அல்லது உறுதியை எப்படி அணையாமல் பார்த்துக் கொள்வது? அதுவும் பல விஷயங்களில் ஈடுபடும்போது...

பிரபுபாதா: உறுதி என்றாலே நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். அது உறுதியின் ஒரு பகுதி தான். உத்ஸாஹாத்³ தை⁴ர்யாத், தத்-தத்-கர்ம (உபதேசாம்ருதம் 3). உத்ஸாஹா, இந்த உற்சாகமே உறுதியின் உண்மையான ஆரம்பம். நீங்கள் உற்சாகமாக இல்லையென்றால், எப்படி உறுதியைத் தொடர முடியும்? எனவே, உறுதி, உற்சாகம், பொறுமை, விதிகளைப் பின்பற்றுதல், இவையெல்லாம் உறுதியின் பல்வேறு செயல்பாடுகளே. உறுதி என்பது இந்த எல்லாவற்றின் ஒரு சொல், உற்சாகம், பொறுமை, நம்பிக்கயுடன் செயல்படுதல். இவையெல்லாம் உறுதியின் பல்வேறு லட்சனங்கள்.