TA/Prabhupada 0679 – தெரிந்தோ தெரியாமலோ கிருஷ்ணப் பிரக்ஞையில் எதைச் செய்தாலும், அதற்கு பயனுண்டு
Lecture on BG 6.25-29 -- Los Angeles, February 18, 1969
விஷ்ணுஜன : ஸ்லோகம் 29 : "உண்மை யோகி, என்னை எல்லா உயிர்களிலும்,என்னில் எல்லா உயிர்களையும் காண்கிறான். உண்மையில், தன்னுணர்வுடையவன் பரம புருஷரான என்னையே எங்கும் காண்கிறான். (ப.கீ 6.29)
பிரபுபாதா: ஆம் இப்போது, " உண்மை யோகி என்னை எல்லா உயிர்களிலும் காண்கிறான்." ஏப்படி அவரால் அப்படி காணமுடியும்? எல்லா உயிர்களும் க்ருஷ்ணரே என்று அவர்கள் கூறுகின்றனர். அப்படியானால், க்ருஷ்ணரை தனியாக வணங்குவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. எனவே அவர்கள் சமூக சேவையில் ஈடுபடுகின்றனர். இது நல்லது என்று அவர்கள் கூறுகின்றனர். ஏன் க்ருஷ்ணரை வழிபட வேண்டும்? ஒருவன் எல்லா உயிர்களிலும் தன்னைக் (க்ருஷ்ணரை) காண வேண்டும் என க்ருஷ்ணர் கூறுகிறார். எனவே நாம் சேவை செய்வோம். ....... ஆனால் அவர்களுக்கு அந்த முறை தெரியவில்லை. அதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஆன்மிக குருவின் பயிற்சி தேவை இங்கு, " உண்மை யோகி என்னை எல்லா உயிர்களிலும் காண்கிறான்." உண்மை யோகி, பக்தன். பக்தர்கள் க்ருஷ்ண உணர்வைப் பரப்புவதற்காக வெளியே செல்வதைப் போல. ஏன்? அவர்கள் எல்லா உயிர்களிலும் க்ருஷ்ணரை காண்கின்றனர். எப்படி? ஏனென்றால் எல்லா உயிர்களையும் க்ருஷ்ணரின் அம்ஸங்களாக அவர்கள் பார்க்கின்றனர். அவர்கள் க்ருஷ்ணரை மறந்த நிலையில் உள்ளனர். எனவே நாம் அவர்களை க்ருஷ்ண உணர்வில் விழித்தெழச் செய்வோம். ஒரு பக்தன், க்ருஷ்ண உணர்வில்லாத ஒருவனைப் பார்க்கிறான். அதாவது, சில சமயம், சில சமூக சேவைகள் , எழுத்தறிவற்றவனுக்கு, கல்வி போதிக்கப் படுகிறது. ஏன்? ஏனென்றால், அவர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் கல்விதேவை என்பதை அவர்கள் காண்கிறார்கள். அவர்களுக்கும் வாழ்வின் மதிப்பு புரிய வேண்டும். இதுவே அவர்களின் பரிவு. இங்கும் அதுபோலத் தான். அவர்களும் க்ருஷ்ணரின் அம்சங்கள் என்று அவர்களும் உணர வேண்டும் என்பது தான். இந்த உணர்வை மறப்பதனால்தான் அவன் துன்பப்படுகிறான். அதுவே , எல்லாரிடத்திலும் க்ருஷ்ணரைக் காண்பது. எல்லா உயிர்வாழிகளும் க்ருஷ்ணராகி விடுகின்றனர் என்பதல்ல. அந்த வகையில் பார்க்காதீர்கள், அது தவறான கண்ணோட்டம். ஒவ்வொரு உயிர்வாழியுமே..... அதாவது, நான் ஒருவனைப் பார்க்கிறேனென்றால், இந்தப் பையன் , இவன் , இன்னாருடைய மகன் என்று பார்க்கிறேன். அதாவது, நான் அந்தப் பையனிடம் அவன் தந்தையைப் பார்க்கிறேன் என்று அர்த்தம். புரிகிறதா? நான், எல்லா உயிர்வாழிகளையும், கடவுளின் அல்லது க்ருஷ்ணரின் குழந்தையாகப் பார்க்கிறேன் என்றால், நான் எல்லா உயிர்வாழிகளிலும் கடவுளைப் பார்ப்பதாக அர்த்தம். இது புரிந்து கொள்வதற்கு கடினமானதாக இருக்கிறதா?
விஷ்ணுஜன: இது சகவாசமா? இல்லை இது ஒரு கண்ணோட்டமா?
பிரபுபாதா: இல்லை, இதுவே உண்மை (சிரிப்பு) இது சகவாசமுமில்லை, கண்ணோட்டமுமில்லை, இது தான் உண்மை. நீங்கள் ஒரு பூனையை பார்க்கும் போதும், நாயை பார்க்கும் போதும் , அதனுள் கிருஷ்ணரை பார்க்கிறீர்கள். ஏன் ? அது ஒரு பூனை, ஒரு உயிர் வாழி என்று உங்களுக்கு தெரியும் அவனது செயல்களால் ,அவனது கடந்த கால செயல்களால், அவனுக்கு தற்போதைய இந்தப் பூனையின் உடலும், மறதியும் கிடைத்துள்ளது எனவே , அதற்கு சிறிது கிருஷ்ண பிரசாதம் கொடுத்து உதவி செய்யலாம். அதனால், அவன் என்றாவது ஒருநாள் க்ருஷ்ண உணர்விற்கு வருவான். இது தான் எல்லா உயிர்களிலும் க்ருஷ்ணரைக் காண்பதாகும். " ஒ, இதோ க்ருஷ்ணர், எனவே நான் இந்தப் பூனையைக் கட்டிபிடிக்கிறேன் " என்பதல்ல, இது முட்டாள்தனம். இதோ ஒரு புலி, " ஒ, இதோ க்ருஷ்ணர், வா, வந்து என்னை சாப்பிடு " இது மூடத்தனம். ஒவ்வொரு உயிர்வாழியிடமும் , அவன் கிருஷ்ணரின் அம்சம் என்ற வகையில், அவனிடம் நீங்கள் கருணை கொள்ள வேண்டும். வாஞ்சா-கல்பதருப்யஷ் ச க்ருபா-ஸிந்துப்ய ஏவ ச. " வா க்ருஷ்ணா" என்று அவனை அனைத்துக் கொள்வதல்ல. எனவே , "உண்மை யோகி , என்னை எல்லா உயிர்களிலும் காண்கிறான் " .இதுவே காண்பதாகும். நாம் ஏன் இந்த குழந்தைகளை வரவேற்கிறோம்? ஏனென்றால் , அவர்களும் கிருஷ்ணரின் அம்சமே. இயன்ற வகையில், அவர்களும் கீர்த்தனையில் பங்கெடுத்துக் கொள்ள, பிரசாதம் ஏற்றுக்கொள்ள, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறீர்கள். இங்கு வரும் குழந்தைகள், இதை பார்த்து நகல் செய்கின்றன , இது பயனற்ற வேலை என்று நினைக்காதீர்கள். கிருஷ்ண உணர்வில் செய்யப்படும் செயல், தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்யப்பட்டாலும், அதற்கான பலன் இருக்கும். இந்தக் குழந்தைகள், கிருஷ்ணருக்கு தலை வணங்குகிறார்கள், அல்லது "கிருஷ்ணா" என்று உச்சரிக்க முயற்சிக்கிறார்கள், அல்லது கைதட்டுகிறார்கள். கிருஷ்ண உணர்வு எனும் வங்கிக் கணக்கில் இவையெல்லாம் வரவு வைக்கப்படுகின்றன. ஒரு குழந்தை ,நெருப்பைத் தொட்டால் சுடும் அல்லவா ,அதுபோல. " ஒ, இவன் ஒரு குழந்தை, இவனுக்கு என்ன தெரியும்? " என்று நெருப்பு அவனை மன்னிக்காது. நெருப்பு சுடவே செய்யும் . அதைப்போலவே, க்ருஷ்ணர் பரமாத்மா என்றால், ஒரு குழந்தையும் இதில் பங்கேற்கலாம், கிருஷ்ணர் செயல்படுவார். அவனுக்கு தெரிந்தாலும் சரி, தெரியாவிட்டாலும் சரி, அதைப்பற்றி கவலையில்லை. ஏனென்றால் , அங்கே கிருஷ்ணர் இருக்கிறார். எனவே ,இது மிக அருமையானது. எனவே எல்லா உயிர்வாழிகளுக்குமே வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இந்தப் பையன்கள், வெளியில் இருப்பவர்களை இந்த அன்பு விருந்திற்கு வரவேற்கிறார்கள். அவர்களுடைய நோக்கம் என்ன? அவர்கள் வந்து சிறிது பிரசாதம் ஏற்றுக் கொள்ளட்டும் , என்றாவது ஒருநாள் அதனால் அவர்கள் கிருஷ்ண உணர்வில் செயல்படுவார்கள் என்பதே அவர்களுடைய நோக்கம். இது கட்டாயம் செயல்படும் . இதுவே அவர்களுடைய பிரச்சாரம் . அவர்கள் அனைவரையும் பார்க்கிறார்கள். கிருஷ்ணா, அவர்கள், இந்த வகையில் எல்லோரிடத்திலும் கிருஷ்ணரை பார்க்கிறார்கள் எல்லோருமே கிருஷ்ணர் என்பதல்ல. இந்த தவறை செய்யாதீர்கள். கிருஷ்ணர் எல்லா இடத்திலும் நிறைந்திருப்பவர். மனிதனிடம் ஏன், அவர் அணுவிலும் உள்ளார் அண்டாந்தர-ஸ்த-பரமாணு-சயாந்தர-ஸ்தம் (பி.ச 5.35) பரமாணு என்றால் அணு . இதை நீங்கள் பிரம்ம சம்ஹிதையில் காணலாம். எனவே , அவர் அணுவிலும் உள்ளார். ஏன் ஒவ்வொரு உயிர்வாழியிலும் இருக்க மாட்டார்? உங்களுக்கு அந்த ஞானம் இருக்க வேண்டும்.