TA/Prabhupada 0875 - உங்கள் சொந்த கடவுளின் பெயரை உச்சரியுங்கள். மறுப்பு எங்கே- ஆனால் இறைவனின் திருநாமத்தை உ



750519 - Lecture SB - Melbourne

நம்மால் கடவுளை பார்க்க முடியாது. நாம் பார்க்கலாம், ஆனால் உடனடியாக அல்ல. நாம் முன்னேறியவராகினால் நம்மால் கடவுளை பார்க்க முடியும், அவரிடம் பேச முடியும். ஆனால் நாம் அந்த அளவுக்கு தகுதியானவர்கள் அல்ல என்பதால், இதுதான் கடவுளின் பெயர் என்று நாம் அறிந்தால், அதனை நாம் உச்சரிக்கலாம். அவ்வளவுதான். அது மிகவும் கடினமான வேலையா? யாராவது இதை மிகவும் கடினமான வேலை என்று சொல்வார்களா? இறைவனின் நாமத்தை, திருநாமத்தை உச்சரியுங்கள். பிறகு என்ன நடக்கும்? சேதோ-தர்பண-மார்ஜனம் (சை சரி அந்த்ய 02.12). நீங்கள் இறைவனின் திருநாமத்தை உச்சரித்தால் பிறகு, கண்ணாடியைப் போல கருதப்படும் உங்கள் இதயம்.... உதாரணமாக கண்ணாடியில் நீங்கள் உங்கள் முகத்தை பார்க்கிறீர்கள், அதைப் போலவே, உங்கள் இதயத்தின் கண்ணாடியில் நீங்கள் உங்கள் நிலையை பார்க்கலாம். அதை நீங்கள் பார்க்கலாம். இதுதான் தியானம் என்று அழைக்கப்படுகிறது.

எனவே தற்போதைய நொடியில் நமது இதயம் பௌதிக கருத்துக்களின் தூசிகளால் மறைக்கப்பட்டுள்ளது. அதாவது, "நான் இந்தியன்," "நான் அமெரிக்கன்", "நான் இது," "நான் அது," "நான் அது." இவையெல்லாம் தூசிகள் தான். நீங்கள் இவற்றை சுத்தம் செய்ய வேண்டும். உதாரணமாக, கண்ணாடியின் மீது ஒரு தூசியின் படலம் இருந்தால், நீங்கள் அதனை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு நீங்கள் உங்கள் உண்மையான முகத்தை பார்க்கலாம். எனவே சைதன்ய மஹாபிரபு கூறுகிறார், சேதோ-தர்பண-மார்ஜனம்: "இறைவனின் திருநாமத்தை ஜபம் செய்வதால், உங்கள் இதயத்தை மூடிமறைத்துள்ள தூசிகளை நீங்கள் படிப்படியாக சுத்தம் செய்கிறீர்கள்." மிக எளிமையான விஷயம். ஜபம் செய்து கொண்டிருங்கள். மேலும் உங்களுடைய நிலை என்ன ஆகும்? பவ-மஹா-தாவாக்னி-நிர்வாபணம்: "இந்த பௌதிக இருப்பின் கவலைகளின் காட்டுத்தீ உடனடியாக முடிந்து போகும்." மிக எளிமையான இந்த முறையால், ஜபம் செய்வதினால். நீங்கள் ஏதாவது பெயரை தெரிந்து கொண்டிருந்தால், ஹரே கிருஷ்ண ஜபம் செய்வதற்கு உங்களுக்கு ஏதேனும் தடை இருந்தால், உங்களுக்கு கடவுளின் எந்த நாமம் தெரியுமோ அதனை நீங்கள் ஜெபம் செய்யலாம். இதுதான் எங்கள் இயக்கம். நீங்கள் இதைத்தான் செய்ய வேண்டும் என்று நாங்கள்... ஆனால் இது சைதன்ய மகாபிரபுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அதாவது ஹரேர் நாம (சை சரி ஆதி 17.21) எனவே உங்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்றால் நீங்கள் ஹரே கிருஷ்ண ஜபம் செய்யலாம். மேலும் நீங்கள், "இந்த ஹரே கிருஷ்ண, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது, நாங்கள் இதனை ஜபம் செய்யமாட்டோம்," என்று நினைத்தீர்கள் என்றால், சரிதான், உங்கள் சொந்த கடவுளின் திருநாமத்தை ஜெபம் செய்யுங்கள். மறுப்பு எங்கே? ஆனால் நாமத்தை, இறைவனின் திருநாமத்தை ஜபம் செய்யுங்கள். இதுதான் எங்கள் பிரச்சாரம்.

சேதோ-தர்பண-மார்ஜனம் பவ-மஹா-தாவாக்னி-நிர்வாபணம் (சை சரி அந்த்ய 20.12). மேலும் உங்கள் இதயம் தூய்மை அடைந்தால் உடனேயே கவலைகளிலிருந்து.... ந ஷோசதி ந காங்க்ஷதி (ப.கீ 12.17). நீங்கள் படிப்படியாக முன்னேறுவீர்கள். பிறகு நீங்கள் புரிந்து கொள்வீர்கள், "நான் அமெரிக்கனும் அல்ல, இந்தியனும் அல்ல, பூனையும் அல்ல, நாயும் அல்ல, ஆனால் பரமபுருஷ பகவானின் அங்கத் துணுக்கு." மேலும், நீங்கள் பரம புருஷ பகவானுடைய அங்க துணுக்கு என்று புரிந்து கொண்டால், பிறகு உங்கள் வேலை என்ன என்பதையும் புரிந்து கொள்வீர்கள். உதாரணமாக உங்கள் உடலில் நீங்கள் பல அங்கங்களை பெற்றிருக்கிறீர்கள். அதாவது நீங்கள் கைகளை பெற்றிருக்கிறீர்கள், கால்களை பெற்றிருக்கிறீர்கள், தலையை பெற்றிருக்கிறீர்கள், விரல்களை பெற்றிருக்கிறீர்கள், காதுகளை பெற்றிருக்கிறீர்கள், மூக்கைப் பெற்றிருக்கிறீர்கள் - இப்படி பல அங்கங்கள். இந்த உடலின் அங்கங்களின் வேலை என்ன? உடலின் அங்கங்களுடைய வேலை, இந்த உடலை சரியாக பராமரிப்பது: உடலுக்கு சேவை செய்வது. உதாரணமாக இந்த விரல் இருக்கிறது. நான் சில தொந்தரவை உணர்கிறேன்; உடனடியாக என்னுடைய விரல்கள் வந்து சேவை செய்கிறது, தானாகவே.. எனவே முடிவு என்னவெனில், கடவுளின் அங்கத்தின் வேலை கடவுளுக்கு சேவை செய்வதுதான். இதுதான் ஒரே வேலை, இயற்கையான வேலை. எனவே நீங்கள் கடவுளுடைய சேவையில் ஈடுபட்டு இருந்தால், இறைவனின் திருநாமத்தை ஜபிப்பதால், நீங்கள், இறைவன் யார் என்பதையும், அவருடைய அறிவுரைகள் என்ன என்பதையும், அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதையும், என்ன சேவை என்னிடமிருந்து எதிர் பார்க்கிறார் என்பதையும் அறிந்து அந்த சேவையில் நீங்கள் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். இது தான் உங்கள் வாழ்க்கையின் பக்குவ நிலை. இதுதான் கிருஷ்ண பக்தி இயக்கம். சேதோ-தர்பண-மார்ஜனம்' பவ-மஹா-தாவாக்னி-நிர்வாபணம்' ஷ்ரேய:-கைரவ-சந்த்ரிகா-விதரணம். நீங்கள் எல்லா அசுத்தங்கள் இருந்து தூய்மை அடைந்த உடனேயே, பிறகு உங்கள் வாழ்வின்உண்மையான முன்னேற்றம் தொடங்குகிறது.