TA/Prabhupada 0920 - இந்த உயிர் சக்தியான ஆத்மா இருப்பதனால்தான், முழு உடலும் இயங்குகிறது
730422 - Lecture SB 01.08.30 - Los Angeles
மொழிபெயர்ப்பு: "உண்மையிலேயே இது குழப்பம் அளிப்பதுதான். நீர் செயலற்றவராக இருந்தபோதிலும் செயல்படுகின்றீர், நீர் உயிர் சக்தியாகவும், பிறப்பற்றவராகவும், இருந்த போதிலும் நீர் பிறப்பெடுக்கின்றீர். நீர் விலங்குகள், மனிதர்கள், முனிவர்கள் நீர்வாழ்வன போன்றவற்றின் இடையே அவதரிக்கிறார். உண்மையிலேயே இது குழப்பம் அளிக்கின்றது."
பிரபுபாதர்: இங்கு கிருஷ்ணர் விஸ்வாத்மன் என்று அழைக்கப்படுகிறார். பிரபஞ்சத்தின் உயிர்சக்தி. என்னுடைய உடலில், மற்றும் உங்களுடைய உடலில் ஒரு உயிர்சக்தி இருப்பதைப் போல. இந்த உயிர் சக்தியே ஆத்மா அல்லது உயிர் வாழி. எனவே இந்த உயிர் சக்தி, இந்த ஆத்மா இருப்பதனால் தான் முழு உடலும் இயங்குகிறது.
அதைப் போலவே ஒரு உன்னத உயிர் சக்தியும் இருக்கிறது. அந்த உன்னத உயிர்சக்தி கிருஷ்ணர் அல்லது பரம புருஷ பகவானாவார். எனவே, அவரின் பிறப்பு, தோற்றம் மற்றும் மறைவு பற்றிய கேள்வி எங்கே? பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. ஜன்ம கர்ம ச மே திவ்யம் (ப.கீ 4.9). திவ்யம் என்றால் ஆன்மீகம். அஜோ 'பி ஸந்ன் அவ்யயாத்மா. அஜ என்றால் பிறப்பவர். அவ்யயாத்மா, அழிவற்றவர். எனவே கிருஷ்ணர், இந்த ஸ்தோத்திரத்தின் ஆரம்பத்தில்.... குந்தி, கிருஷ்ணரை அழைத்ததைப் போல: "நீங்கள் உள்ளும் இருக்கிறீர்கள், வெளியிலும் இருக்கிறீர்கள், இருந்தும் கண்ணுக்குத் தோன்றாதவராக இருக்கிறீர்கள்." கிருஷ்ணர் உள்ளும், புறமும் இருக்கிறார். நாம் அதனை விளக்கினோம். ஈஷ்வர: ஸர்வ-பூதானாம்' ஹ்ரு'த்-தேஷே 'ர்ஜுன திஷ்டதி (ப.கீ. 18.61). ஸர்வஸ்ய சாஹம்' ஹ்ரு'தி ஸந்னிவிஷ்ட: (ப.கீ. 15.15). கிருஷ்ணர் எல்லோரது இதயத்திலும் இருக்கிறார். எனவே அவர் எல்லாவற்றுக்குள்ளும் இருக்கிறார். அண்டாந்தர-ஸ்த-பரமாணு-சயாந்தர-ஸ்தம் (பி.ஸம் 5.35). அவர், அவர் ஒரு அணுவிற்குள் கூட இருக்கிறார். மேலும் வெளியிலும் கூட.
கிருஷ்ணர் காட்டிய விஸ்வரூபத்தை போல, விஸ்வரூபம், வெளிப்புற தன்மை. இந்த மிகப் பெரும் பிரபஞ்சத்தின் தோற்றம், இது கிருஷ்ணருடைய வெளிப்புற உடல். இவையெல்லாம் ஸ்ரீமத் பாகவதத்தில் விளக்கப்பட்டுள்ளது. மலைகள், குன்றுகள் இவையெல்லாம் எலும்புகள் என்று விளக்கப்பட்டுள்ளது. நம்முடைய உடலில், எலும்புகளால் சில பகுதிகள் உயர்த்தப்பட்டு இருப்பதை போல, அதைப் போலவே இந்தப் பெரும் மலைகளும் குன்றுகளும், இவை எலும்புகள் என்று விளக்கப் விளக்கப்பட்டுள்ளன. மேலும், பெரும் பெரும் கடல்கள், பல்வேறு உடலின் துவாரங்களாக விளக்கப்பட்டுள்ளன. மேலும் கீழும். அதைப்போலவே பிரம்மலோகம், மண்டை ஓடு ஆகும், தலை..
எனவேதான் கடவுளை காண முடியாத ஒருவன், கடவுளை பல்வேறு வகைகளில் காணும்படி அறிவுறுத்தப்படுகிறான். இதுதான் வேத இலக்கியங்களின் அறிவுரை. ஏனெனில் நீங்கள் கடவுளின் உயர்ந்த தன்மையை வெறுமனே சிந்திக்கத் தான் முடியும்.... அந்தப் பெரும் தன்மை.... அவர் எவ்வளவு பெரியவர் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். எனவே உங்கள் சிந்தனையில் பெரும் விஷயங்களான..... இந்த மிகப்பெரும் மலைகள், வானம், பெரும் பெரும் கிரகங்கள். இவற்றின் வர்ணனைகள் உள்ளன. இதனை நீங்கள் சிந்திக்கலாம். அதுவும் கூட கிருஷ்ண உணர்வு தான். இந்த மலை கிருஷ்ணருடைய எலும்பு என்று நீங்கள் நினைத்தால், அதுவும் கிருஷ்ண உணர்வு தான். அது உண்மையும் கூட. இந்தப் பெரும் பசிபிக் பெருங்கடல் கிருஷ்ணருடைய நாபி என்று நீங்கள் நினைத்தால். இந்தப் பெரும், பெரும் மரங்கள் செடிகள் இவை கிருஷ்ணருடைய உடலில் காணப்படும் முடிகள். மேலும் கிருஷ்ணருடைய தலை பிரம்மலோகம். அவருடைய உள்ளங்கால் பாதாள லோகம். அதைப்போலவே.... இதுதான் மஹதோ மஹீயான். நீங்கள் கிருஷ்ணரை பெரியவற்றில் எல்லாம் பெரியவர் என்று நினைத்தால், நீங்கள் இதுபோல சிந்திக்கலாம். மேலும் நீங்கள் கிருஷ்ணரை இரண்டும் என்று நினைத்தால், அதாவது சிறியவற்றுள் சிறியவர் என்றும் சிந்திக்கலாம். அதுவும் கூட உயர்ந்த தன்மை. அதுவும் கூட உயர்ந்த தன்மையே. கிருஷ்ணர் இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சத் தோற்றத்தையும் படைக்க முடியும், மேலும், அவர் சிறு பூச்சியையும், ஒரு புள்ளியை விட சிறியதான பூச்சியையும் கூட படைக்க முடியும்.
நீங்கள் சில சமயம் உங்கள் புத்தகத்தில் ஒரு பூச்சி ஊர்வதை காணலாம். அது ஒரு புள்ளியை காட்டிலும் சின்னதாக இருக்கும். இதுதான் கிருஷ்ணருடைய படைப்புத்திறன். அவரால் பெரியவற்றுள் பெரியதையும், சிறியவற்றுள் சிறியதையும் படைக்க முடியும். இப்போது மனிதர்கள் அவர்களுடைய கருத்தின்படி, இந்த மிகப் பெரியதான விமானமாக கருதப்படும் 747 விமானத்தை உருவாக்கியுள்ளனர். சரிதான். உங்கள் கருத்துப்படி, மிகப்பெரிய ஒன்றை நீங்கள் தயாரித்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஒரு சிறு பறக்கும் பூச்சியை போன்ற சிறிய விமானத்தை உருவாக்க முடியுமா? அது சாத்தியம் அல்ல. எனவே உயர்ந்த தன்மை என்றால், பெரியவற்றுள் பெரியவனாக முடியும் அதே நேரத்தில், சிறியவற்றுள் சிறியவன் ஆகவும் வேண்டும். அதுதான் உயர்ந்த தன்மை.