TA/Prabhupada 0934 - ஆத்மாவின் தேவைகளைக் குறித்து கவலைப்படுவது, இது முட்டாள்தனமான நாகரிகம்



Lecture on SB 1.8.33 -- Los Angeles, April 25, 1972

பக்தர்: மொழிபெயர்ப்பு: "பிறர் வசுதேவரும், தேவகியும் உம்மைப் பிரார்த்தித்துக் கொண்டதால் நீர் அவர்களுக்கு புதல்வனாகப் பிறந்தீர் என்று கூறுகின்றனர், நீர் பிறப்பற்றவர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இருந்தும், நீர் தேவர்களின் நலனுக்காகவும், அவர்கள் மீது வெறுப்புடையோரை அழிப்பதற்காகவும் பிறப்பெடுக்கின்றீர்."

பிரபுபாதர்: எனவே அவதாரம் எடுப்பதற்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன. இது பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யதா யதா ஹி தர்மஸ்ய
க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய
ததாத்மானம்' ஸ்ரு'ஜாம்யஹம்
(ப.கீ. 4.7).

எப்போதெல்லாம் அதர்மங்கள் இருக்கின்றதோ, தர்மஸ்ய, தர்மங்களின் ஒழுங்கின்மை.... க்லானிஹி. க்லானிஹி என்றால் ஒழுங்கின்மைகள். நீங்கள் ஏதோ ஒரு சேவை செய்து கொண்டிருப்பது போல். ஏதாவது ஒழுங்கின்மைகள் ஏற்படலாம். பிறகு அது களங்கப்படுகிறது. எனவே, யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி... தர்மஸ்ய க்லானிர் பவதி... என்றால் அதர்மங்கள் தலை தூக்குதல். அதாவது உங்கள் செல்வம் குறைந்தால் பிறகு உங்கள் ஏழ்மை அதிகரிக்கும், சமன்பாடு. நீங்கள் இந்தப் பக்கம் அதிகரித்தால், மறுபக்கம் உயர்ந்து செல்லும், மேலும் நீங்கள் அந்தப் பக்கம் அதிகரித்தால், மறுபக்கம்.... நீங்கள் இதனை சமன்படுத்த வேண்டும். அதுதான் தேவைப்படுகிறது.

இந்த மனித சமூகம், சமன் படுத்துவதற்காகவே உள்ளது. சமன்பாடு என்பது என்ன? அதை அவர்கள் அறிய மாட்டார்கள்... இது ஒரு தராசை போன்றது. ஒருபக்கம் ஆன்மீகம், மற்றொரு பக்கம் பௌதிகம். இப்போது உண்மையில் நாம் ஆன்மீக ஆத்மா. ஏதோ ஒரு வகையில் நாம் இப்போது இந்த உடலில், பௌதிக உடலில் சிக்குண்டு விட்டோம். அதனால், நாம் இந்த உடலை பெற்றுள்ள வரைக்கும், உண்ணுதல், உறங்குதல், உடலுறவு கொள்ளுதல், மற்றும் தற்காத்துக் கொள்ளுதல் போன்ற உடலின் தேவைகளை நாம் பெற்றிருப்போம். இவை எல்லாம் உடலின் தேவைகள். ஆத்மாவிற்கு இந்த தேவைகள் எல்லாம் இல்லை. ஆத்மா உண்ண வேண்டியது எதுவும் இல்லை. இது நமக்கு தெரியாது. நாம் எதையெல்லாம் சாப்பிடுகிறோமோ, அவை இந்த உடலைப் பராமரிப்பதற்கானவை. எனவே உடலின் தேவைகள் எல்லாம் இருக்கின்றன, ஆனால் நீங்கள் உடலின் தேவைகளை மட்டும் கவனித்துக் கொண்டு, ஆத்மாவின் தேவைகளைப் பற்றி கவலைப்படவில்லை என்றால், பிறகு இது முட்டாள்தனமான நாகரிகமே. இந்தச் சமன்பாடு இல்லை. இதை அவர்கள் அறிவதில்லை.

ஒரு அயோக்கியனை போல..... அவன் வெறுமனே உடைகளை துவைத்துக் கொண்டு இருக்கிறான், ஆனால் உடலைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. அல்லது, கூண்டில் இருக்கும் ஒரு பறவையின் கூண்டைப் பற்றி மட்டும் நீங்கள் அக்கறை காட்டி, உள்ளிருக்கும் பறவையைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதைப் போல.... அந்தப் பறவை அலறுகிறது "கா கா. உணவைக் கொடு, எனக்கு உணவைக் கொடு". ஆனால் நீங்கள் கூண்டை மட்டும் பராமரிக்கிறீர்கள். இது முட்டாள்தனம். எனவே நாம் இப்போது ஏன் மகிழ்ச்சியற்றவர்களாக உள்ளோம்? ஏன், குறிப்பாக உங்கள் நாட்டில்..... உங்கள் நாடு உலகத்திலேயே பெரும் பணக்கார நாடாக கருதப்படுகிறது. உங்களுக்கு எந்த பஞ்சமும் இல்லை. உணவுப் பஞ்சம் இல்லை, மோட்டார் வண்டிகளுக்கு பஞ்சமில்லை, வங்கிக் கணக்கிற்கு பஞ்சமில்லை, உடலுறவிற்கு பஞ்சமில்லை. எல்லாமே இருக்கிறது, முழுமையாக, நிறையவே. இருந்தாலும், ஏன் மக்களில் ஒரு பகுதியினர் விரக்தியுற்று குழப்பமுற்று, ஹிப்பிகளைப் போல இருக்கின்றனர்? அவர்கள் திருப்தி அடையவில்லை. ஏன்? இதுதான் குறைபாடு. காரணம் எந்த சமன்பாடும் இல்லை. நீங்கள் வாழ்வின் உடல் தேவைகளை குறித்து அக்கறை கொள்கிறீர்கள், ஆனால் ஆத்மாவைப் பற்றிய எந்த தகவலும் உங்களிடத்தில் இல்லை. மேலும் ஆத்மாவின் தேவையும் கூட இருக்கிறது. ஏனெனில் ஆத்மாதான் உண்மையான விஷயம். உடல், அதனை மூடி உள்ள உறை தான்.