TA/Prabhupada 1046 - கிருஷ்ணருடன் பேசி, விளையாடி, ஆடக்கூடிய ஒரு உடலைப் பெறுவதா என்று முடிவு செய்யுங்கள்



750712 - Lecture SB 06.01.26-27 - Philadelphia

நிதாய் : "அஜாமிளன் தன் மகன் மீது பற்றுக் கொண்டு தன் வாழ்க்கையை கழித்த போது, அவன் மரணத்திற்கான நேரம் வந்தது. அந்த நேரத்தில் வேறு எந்த சிந்தனையும் இன்றி அவன் தன் மகனைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினான்."

பிரபுபாதா :

ஸ ஏவம்' வர்தமானோ 'ஜ்ஞோ
ம்ரு'த்யு-கால உபஸ்தி2தே
மதிம்' சகார தனயே
பா3லே நாராயணாஹ்வயே
(ஸ்ரீமத் பா 6.1.27)

வர்தமான அனைவரும் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கின்றனர். இதுதான் பௌதிக வாழ்க்கை. நான் ஒரு குறிப்பிட்ட உணர்விற்கு கீழ் உள்ளேன் நீங்கள் ஒரு குறிப்பிட்ட உணர்வில் உள்ளீர்கள்- அனைவருமே இயற்கையின் குணங்களின் படி, நாம் வாழ்க்கை குறித்து பல்வேறு கருத்துக்களையும், வெவ்வேறு உணர்வுகளையும் கொண்டுள்ளோம். இதுதான் பௌதிக வாழ்க்கை எனப்படுகிறது. நாம் அனைவரும், இங்கு அமர்ந்து உள்ள அனைவரும், வெவ்வேறு உணர்வுகளை கொண்டுள்ளோம். பொதுவாக இது புலன் நுகர்ச்சிக்கானது. பௌதிக வாழ்க்கை என்றால் அனைவரும் "நான் இப்படி வாழ்வேன், நான் இப்படியாக பணத்தை சேர்ப்பேன், நான் இந்த வகையில் அனுபவிப்பேன்." என்று திட்டமிடுவது தான். ஒவ்வொருவரும் ஒரு திட்டத்தை வைத்துள்ளனர். எனவே அஜாமிளனும் ஒரு திட்டத்தை வைத்திருந்தான். அவனது திட்டம் என்ன? அவன் தன்னுடைய கடைசி குழந்தையிடம் மிகுந்த பற்றுக் கொண்டு இருந்ததினால், அவனுடைய முழு கவனமும் அங்கு இருந்தது, அந்தக் குழந்தை எப்படி நகர்கிறது, எப்படி சாப்பிடுகிறது, அந்தக் குழந்தை எப்படி பேசுகிறது, மேலும், சில சமயம் அவனை அழைத்து, அவனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தான். எனவே அவனது முழு மனமும் அந்த குழந்தையின் செயல்களில் ஆழ்ந்திருந்தது. முந்தைய ஸ்லோகத்தில் நாம் ஏற்கனவே பார்த்தோம்:

பு4ஞ்ஜான: ப்ரபிப3ன் கா2த3ன்
பா3லகம்' ஸ்நேஹ-யந்த்ரித:
போ4ஜயன் பாயயன் மூடோ4
ந வேதா3க3தம் அந்தகம்
(ஸ்ரீமத் பா 6.1.26).

அஜாமிளன் மட்டுமல்ல, அனைவருமே, குறிப்பிட்ட வகையான உணர்வில் ஆழ்ந்துள்ளனர். இது என்ன காரணத்தினால்? எப்படி இந்த உணர்வு வளர்ச்சி அடைகிறது? ஸ்நேஹ-யந்த்ரித: என்று கூறப்படுகிறது . ஸ்நேஹ என்றால் பற்று. "இயந்திரத்தால்...... பாதிக்கப்பட்டிருப்பது பற்று என்று அழைக்கப்படுகிறது" எனவே அனைவரும் இந்த இயந்திரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த இயந்திரம்..... இந்த உடல்தான் அந்த இயந்திரம். இது இயற்கையினால் செயல்படுத்தப்படுகிறது. மேலும் வழிகாட்டுதல், பரம புருஷ பகவானிடமிருந்து வருகிறது. நாம் குறிப்பிட்ட வகையில் அனுபவிக்க விரும்புகிறோம். எனவே கிருஷ்ணர் குறிப்பிட்ட வகையான உடலை, இயந்திரத்தை அளித்துள்ளார். உதாரணமாக நீங்கள் பலவகையான மோட்டார் கார்களை பெற்றுள்ளீர்கள். நீங்கள் "சிலர் எனக்கு ஒரு பிக் கார் வேண்டும்" என்று விரும்புகின்றனர், சிலர் கூறுகின்றனர் "எனக்கு செவர்லெட் வேண்டும்", சிலர் "ஃப்போர்டு" அவை தயாராக இருக்கிறது. அதைப் போலவே, நம் உடலும் அது போலத்தான். சிலருக்கு ஃப்போர்டு, சிலருக்கு செவர்லெட், சிலருக்கு பிக், மேலும் கிருஷ்ணர் நமக்கு அதற்கான வாய்ப்பு அளிக்கிறார். "நீ இந்த வகையான கார் அல்லது உடலை விரும்பினாய், நீ இதில் அமர்ந்து அனுபவித்துக் கொள்" இதுதான் நம்முடைய பௌதிக நிலை.

ஈஷ்2வர: ஸர்வ-பூ4தானாம்' ஹ்ரு'த்3-தே3ஷே2 அர்ஜுன திஷ்ட2தி (ப.கீ 18.61). நாம் மறந்து விட்டோம். இந்த உடலை மாற்றிய பிறகு, நான் என்ன விரும்பினேன் என்பதையும் ஏன் இந்த வகையான உடலை பெற்றுள்ளேன் என்பதையும் நாம் மறந்து விடுகிறோம். ஆனால் கிருஷ்ணர் உங்கள் இதயத்தில் வீற்றிருக்கிறார், அவர் மறக்க மாட்டார். அவர் அளிக்கிறார். யே யதா2 மாம்' ப்ரபத்3யந்தே (ப.கீ 4.11). நீங்கள் இந்தவகையான உடலை விரும்பினீர்கள்: எனவே, நீங்கள் இதனை பெற்றீர்கள். கிருஷ்ணர் மிகவும் கருணை வாய்ந்தவர். ஒருவன் எதை வேண்டுமானாலும் உண்ணும் படியான உடலை விரும்பினால், கிருஷ்ணர் அவனுக்கு மலத்தை கூட உண்ணும்படியான பன்றியின் உடலை தருகிறார். மேலும் ஒருவன், "நான் கிருஷ்ணருடன் ஆடுவேன்." எனும்படியான உடலை விரும்பினால், அவன் அத்தகைய உடலை பெறுகிறான். எனவே, கிருஷ்ணருடன் பேசக்கூடிய, கிருஷ்ணருடன் ஆடக்கூடிய, கிருஷ்ணருடன் விளையாடக்கூடிய உடல் வேண்டுமா என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் அதனைப் பெறலாம். மேலும், நீங்கள் மலத்தையும், சிறுநீரையும் உண்ணக்கூடிய உடலை விரும்பினால், நீங்கள் அதனை பெறுவீர்கள்.