TA/Prabhupada 0297 - பூரண உண்மையை துருவியறிந்து புரிந்துக் கொள்ள விருப்பம் - அவருக்கு ஆன்மீக குரு தேவை
Lecture -- Seattle, October 4, 1968
நமது செயல்முறையில், ஆதௌ குர்வாஷரயம் சத்-தர்ம ப்ருச்சாத். ஒருவன், அங்கீகாரம் பெற்ற ஆன்மீக குருவை ஏற்று, அவரிடம் சத்-தர்ம ப்ருச்சாத், அதாவது பணிவுடன் விசாரிக்க வேண்டும். அதுபோலவே, ஸ்ரீமத் பாகவதத்திலும், ஜிக்ஞாஸு: ஷ்ரேய உத்தமம் என்று கூறப்பட்டிருக்கிறது. "பூரண உண்மையை புரிந்துகொள்ள ஆவலாக இருப்பவனுக்கு ஆன்மீக குரு தேவை." தஸ்மாத் குரும் ப்ரபத்யேத ஜிக்ஞாஸு: ஷ்ரேய உத்தமம் (ஸ்ரீமத் பாகவதம் 11.3.21). ஜிக்ஞாஸு: என்றால் தெரிந்துகொள்ள ஆவலாக இருப்பவன், கேட்டறிபவன். கேட்டறிவது இயல்பான விஷயம். ஒரு பிள்ளையைப் போல் தான்: ஓரளவுக்கு வளர்ந்தவுடன், அவன் தன் பெற்றோர்களிடம் விசாரிப்பான், "அப்பா, அது என்ன? அம்மா, இது என்ன? அது என்ன? அது என்ன? " இது நல்ல விஷயம். ஒரு பிள்ளை இப்படி கேள்விகளை கேட்டால் அவன் மிகவும் புத்திசாலியான பிள்ளை என்று அர்த்தம். ஆக நாம் புத்திசாலித்தனமாக விசாரிக்க வேண்டும், ஜிஞாஸா. ப்ரஹ்ம-ஜிஞாஸா. இந்த வாழ்க்கை, ப்ரஹ்ம-ஜிஞாஸா, அதாவது கடவுளைப் பற்றி விசாரித்து, புரிந்துகொள்வதற்கு தான். அப்போது தான் ஒரு வாழ்க்கை வெற்றிகரமானதாகும். அதாதொ ப்ரஹ்ம-ஜிஞாஸா. மேலும் அப்படி விசாரித்து, விசாரித்து, விசாரித்து, புரிந்துகொண்டு, புரிந்துகொண்டு, பிறகு இறுதிகட்ட நிலை என்ன? அது பகவத்-கீதையில் கூறப்பட்டுள்ளது: பஹுனாம் ஜன்மனாம் அந்தே ஞானவான் மாம் ப்ரபத்யதே (பகவத் கீதை 7.19). பற்பல ஜென்மங்கள் எடுத்து, இப்படி விசாரித்து, ஒருவன் உண்மையிலேயே விவேகமுள்ளவன் ஆனவுடன், பிறகு என்ன நடைபெறும்? பஹுனாம் ஜன்மனாம் அந்தே ஞானவான் மாம் ப்ரபத்யதே: "அவன் என்னிடம் சரணடைவான்," என்று கிருஷ்ணர் கூறுகிறார். ஏன்? வாசுதேவ: ஸர்வம் இதி. வாசுதேவ, அதாவது கிருஷ்ணர் தான் காரணங்களுக்கு எல்லாம் மூல காரணமானவர் என்பதை அவன் புரிந்துகொள்வான். ஸ மஹாத்மா ஸு-துர்லப:. ஆனால் இந்த விஷயத்தை வாஸ்தவத்தில் புரிந்துகொள்ளக்கூடிய அப்பேர்ப்பட்ட அபாரமான ஒரு ஆன்மா கிடைப்பது மிகவும் அரிது. ஆக சைதன்ய-சரிதாம்ருதம் கூறுகிறது, ஸேய் படோ சதுர: அவன் மிகவும் புத்திசாலி. ஆக இதுதான் புத்திசாலி என்ற வார்த்தைக்கு அர்த்தம். ஆக நாம் புத்திசாலி ஆக விரும்பினால், எவ்வாறு புத்திசாலி ஆவது என்னும் இந்த செயல்முறையை பின்பற்றலாம். ஆனால் மறு புறம், நாம் உண்மையிலேயே புத்தியுள்ளவராக இருந்தால், உடனடியாக கிருஷ்ண பக்தியை ஏற்று, ஏன் புத்திசாலி ஆகக் கூடாது? கடினமான செயல்முறை எதையும் மேற்கொள்ளாமல், இதை எடுத்துக் கொள்ளு... அவதாரங்களிலேயே கருணை மிகுந்த அவதாரமான, பகவான் சைதன்யரால் வழங்கப்பட்டது இந்த செயல்முறை. அவர் உங்களுக்கு வழங்குகிறார், க்ருஷ்ண-ப்ரேம-ப்ரதாயதே (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 19.53). அவர் நமக்கு கிருஷ்ணரின் மீதான அன்பை வழங்குகிறார். ரூப கொஸ்வாமீ, பகவான் சைதன்யரிடம் தலை வணங்குகிறார், நமோ மஹா-வதன்யாய க்ருஷ்ண-ப்ரேம-ப்ரதாய தே : "ஓ என் அன்புக்குரிய பகவான் சைதன்யரே, அவதாரங்களிலேயே கருணைமிக்கவர், அருளார்ந்தவர் தாங்கள் தான். ஏன்? ஏனென்றால் நீங்கள் கிருஷ்ணருக்காக அன்பை நேரடியாகவே அளிக்கிறீர்கள். பற்பல பிறவிகளுக்கு பிறகும் அடைய முடியாத கிருஷ்ணரின் அன்பை, 'இதோ எடுத்துக் கொள்ளுங்கள்,' என்று தாங்கள் சுலபமாக வழங்குகிறீர்கள். நமோ மஹா-வதன்யாய க்ருஷ்ண-ப்ரேம-ப்ரதாயதே க்ருஷ்ணாய க்ருஷ்ண-சைதன்ய. அவர்களால், "தாங்கள் (பகவான் சைதன்யர்) தான் கிருஷ்ணர்", என்பதை புரிந்துகொள்ள முடிந்தது, இல்லையெனில், கிருஷ்ண-பிரேம, அதாவது கிருஷ்ணரரின்மீதான அன்பை, இவ்வளவு சுலபமாக அளிப்பது யாருக்கும் சாத்தியமில்லை. "தாங்கள் தான் கிருஷ்ணர், தங்களுக்கு அந்த சக்தி இருக்கிறது." மேலும் உண்மையிலேயே அவரே தான் கிருஷ்ணர். கிருஷ்ணர் நேரில் வந்து பகவத்-கீதையை கற்பித்த போது க்ருஷ்ண-ப்ரெமை, அதாவது கிருஷ்ணரின் அன்பை கொடுக்க தவறிவிட்டார். அவர் வெறும், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ (பகவத் கீதை 18.66) என்று சொன்னார். ஆனால் மக்கள் அவரை தவறாக புரிந்துகொண்டார்கள். ஆகவே கிருஷ்ணர் ஒரு பக்தராக வந்து கிருஷ்ண-பிரேமையை பொதுமக்களுக்கு வழங்கினார். ஆக எல்லோரிடமும் எங்கள் வேண்டுகோள் என்னவென்றால், இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள், அதற்கு பிறகு நீங்கள், "எனக்கு இனிமேல் எதுவும் வேண்டாம், இனிமேல் எதுவும் வேண்டாம். நான் பரிபூரண திருப்தியை அடைந்தேன்," என்று அபார திருப்தியை உணர்வீர்கள். மிக்க நன்றி.