TA/Prabhupada 0796 - நான் பேசுகிறேன் என்று நினைக்காதீர்- நான் வெறும் கருவி - உண்மையான பேச்சாளர் கடவுள்தான்
Lecture on BG 6.1-4 -- New York, September 2, 1966
இங்கு, ஸ்ரீ பகவான் உவாச என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பரமபுருஷ பகவான் பேசுகிறார். அவர் பேசிக் கொண்டிருக்கிறார் என்றால் அவர் எல்லா ஞானத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார்.அவருடைய ஞானம் எந்த குறைபாடுகளும் அற்றது. நம்முடைய ஞானத்தில் பலப் பல குறைகள் உள்ளது. நாம் தவறு செய்யும் இயல்புடையவர்கள், நாம் மாயைக்கு உட்படுபவர்கள். சில சமயம் நாம் ஏதாவது பேசுவோம், ஆனால் நம் இதயத்தில் வேறு ஏதாவது ஒன்று இருக்கும். அதாவது நாம் ஏமாற்றுகிறோம் என்று பொருள். மேலும் நம்முடைய அனுபவங்கள் எல்லாம் குறைபாடு உடையவை, காரணம் நம்முடைய புலன்கள் குறைபாடு உடையவை. எனவே தான் என்னால் உங்களிடம் எதையும் பேச முடியாது. "சுவாமிஜி, பிறகு நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்களே? என்று நீங்கள் என்னைக் கேட்கலாம், நான் பரம புருஷ பகவான் பேசியதைத் தான் பேசிக் கொண்டிருக்கிறேன். அதே வார்த்தைகளை நான் திருப்பிக் கூறிக் கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான். நான் பேசிக் கொண்டிருப்பதாக நினைக்காதீர்கள். நான் வெறும் ஒரு கருவி தான். உண்மையில் உள்ளும் புறமும் இருக்கும் பரமபுருஷ பகவான் தான் பேசுகிறார். அவர் என்ன கூறுகிறார்? அவர் கூறுவதாவது...., அனாஷ்2ரிதம்...
- அனாஷ்2ரித: கர்ம-ப2லம்'
- கார்யம்' கர்ம கரோதி ய:
- ஸ ஸந்ந்யாஸீ ச யோகீ3 ச
- ந நிரக்3னிர் ந சாக்ரிய:
- (ப.கீ 6.1)
அனாஷ்2ரித:. அனாஷ்2ரித: என்றால் எந்தவித அடைக்கலமும் இல்லாத என்று பொருள். கர்ம-ப2லம். எல்லோருமே ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து செயலை செய்து கொண்டிருக்கிறார்கள் எந்த செயலை செய்தாலும், நீங்கள் ஏதாவது ஒரு பலனை எதிர்பார்க்கிறீர்கள். இங்கு பகவான் கூறுகிறார், பரமபுருஷ பகவான் கூறுகிறார், அதாவது, "விளைவுகளில் எந்த அடைக்கலத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் செயல்படும் ஒருவன்...." அவன்தான் செயல்படுகிறான். அவன் எந்தப் பலனையும் எதிர்பார்க்கவில்லை என்றால் பிறகு ஏன் அவன் செய்கிறான்? .... நான் இந்த வகையில் ஒரு செயலை செய்யுமாறு யாரையாவது கேட்டுக்கொள்கிறேன் என்று வைத்துக் கொள்வோம் பிறகு, அவன் எதையாவது, ஏதாவது ஓர் பலனையோ, அல்லது வெகுமதியையோ, அல்லது பாராட்டையோ, அல்லது ஊதியத்தையுயோ எதிர்பார்ப்பான். இதுதான் இங்கு செயல்படும் முறை. ஆனால் கிருஷ்ணர் பரிந்துரைப்பது, அனாஷ்2ரித: கர்ம-ப2லம், " பலனையோ அல்லது வெகுமதியையோ எதிர்பார்க்காமல் செயலை செய்யும் ஒருவன்" பிறகு ஏன் அவன் செயலை செய்கிறான்?கார்யம் . " இது என் கடமை. இது என்னுடைய கடமை" பலனை எதிர்பார்த்து அல்ல, ஆனால் ஒரு கடமையாக. " நான் இந்த செயலை செய்ய கடமைப்பட்டுள்ளேன்" கார்யம்' கர்ம கரோதி ய:. இந்த வகையில், யாராவது செயல்பட்டால், ஸ ஸந்ந்யாஸீ, அவன் உண்மையில் துறவு நிலையில் உள்ளான்.
வேத நாகரிகத்தின் படி வாழ்வின் நான்கு நிலைகள் உள்ளன. நாம் பலமுறை உங்களுக்கு விளக்கியுள்ளபடி, பிரம்மச்சாரி, கிரகஸ்தர், வனப்பிரஸ்தம், மற்றும் சந்நியாசி. பிரம்மச்சாரி என்றால் மாணவப்பருவம், ஆன்மீக புரிதலில், கிருஷ்ண உணர்வில்,பயிற்சி அளிக்கப்பட்டு, முழுமையாக பயிற்சியளிக்கப்பட்டவன். அவன்தான் பிரம்மச்சாரி. அதன்பிறகு, முழுமையான பயிற்சிக்குப் பிறகு, அவன் திருமணம் செய்து கொண்டு, ஒரு மனைவியை ஏற்றுக்கொண்டு, தன் குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் வாழ்வான். இதுதான் கிரகஸ்த வாழ்க்கை. அதன்பிறகு, 50 வயதிற்குப் பிறகு, அவன் தன் குழந்தைகளை விட்டு, வீட்டை விட்டு , தன் மனைவியுடன் வெளியேறி, புனிதத் தலங்களுக்கு பயணம் செய்வான். இது வானப்பிரஸ்த எனப்படும். மேலும் கடைசியில் தன்னுடைய மனைவியை தன் குழந்தைகளின்- வளர்ந்த குழந்தைகளின் பாதுகாப்பில் விட்டு விட்டு, அவன் தனியாக இருப்பான். இது சன்னியாசம் அல்லது துறவு நிலை என்று அழைக்கப்படுகிறது. ஆக வாழ்வின் இந்த நான்கு நிலைகள் உள்ளது.
இப்போது, கிருஷ்ணர் துறவு மட்டுமே எல்லாம் என்று கூறவில்லை. வெறுமனே துறவு என்பதல்ல. ஏதாவது ஒரு கடமை நிச்சயமாக இருக்க வேண்டும். கார்யம். கார்யம் என்றால் "இது என்னுடைய கடமை." இப்போது, அந்தக் கடமை என்ன? அவன் தன் குடும்ப வாழ்வை துறந்து விட்டான். அவனுக்கு தன்னுடைய மனைவி குழந்தைகளின் பராமரிப்பு பற்றிய கவலை இனி இல்லை. பிறகு அவனுடைய கடமை என்ன? அந்தக் கடமை மிகவும் பொறுப்புள்ள கடமையாகும்- கிருஷ்ணருக்காக செயல்படுவது. கார்யம். கார்யம் என்றால் உண்மையான கடமை. நம் வாழ்வில் இரு வகையான கடமைகள் உள்ளன. ஒரு கடமை மாயைக்கு சேவை செய்வது, மற்றொன்று உண்மைக்கு சேவை செய்வது. நீங்கள் உண்மைக்கு சேவை செய்யும் போது அது உண்மையான சன்யாசம் என்று அழைக்கப்படும். மேலும் நாம் மாயைக்கு சேவை செய்யும் போது, அது மாயை என்று அழைக்கப்படும். இப்போது, மாயைக்கோ அல்லது உண்மைக்கோ ஏதாவது ஒன்றுக்கு கட்டாயம் சேவை செய்யும் நிலையில் நான் உள்ளேன். என்னுடைய நிலை தலைவன் ஆவதில்லை, ஆனால் சேவகன் ஆவது. இதுவே என்னுடைய நிலை.