TA/Prabhupada 0034 - எல்லோரும் அதிகாரிகளிடமிருந்து அறிவை பெற்றுக் கொள்கிறார்கள்

Revision as of 14:19, 26 May 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 7.1 -- Durban, October 9, 1975

அத்தியாயம் ஏழு, "பூரணத்தின் ஞானம்." இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன, தற்சார்பானது ( பூரணமான , சுதந்திரமான) மற்றும் மற்றதை சார்ந்தது. இது ஒன்றை ஒன்று சார்ந்த உலகம். அதாவது இங்கு நம்மால் ஒன்றை விட்டு மற்றொன்றை புரிந்துக் கொள்ள முடியாது. "இவன் ஒரு மகன்," என்று சொன்னவுடன் அங்கு நிச்சயமாக ஒரு தந்தை இருந்தாகவேண்டும். "இவர் கணவர்," என்று நாம் சொன்னால், நிச்சயமாக அவருக்கு ஒரு மனைவியும் இருப்பாள். "இவன் வேலைக்காரன்," என்று சொன்னால், அவனுக்கு நிச்சயமாக ஒரு எஜமானர் இருப்பார். "இது வெளிச்சம்," என்று சொன்னதும், இருளும் இருந்து தான் ஆகவேண்டும். இதுதான் சார்புகள் கொண்ட உலகம். ஒரு விஷயத்தை மற்ற சார்ந்த விஷயங்களை வைத்து புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் அங்கே மற்றொரு உலகம் இருக்கிறது, அது பூரண (சார்பறிவிற்கு அப்பால்) உலகம் என்று அழைக்கப்படுகிறது. அங்கே எஜமானரும் வேலைக்காரனும் ஒரு போலவே தான். வித்தியாசம் கிடையாது. ஒருவர் எஜமானரும் மற்றொருவர் வேலைக்காரருமாக இருந்தாலும், இருவருக்கும் ஒரே ஸ்தானம் தான். பகவத் கீதையின் ஏழாம் அத்தியாயம் நமக்கு பூரண உலகத்தைப் பற்றி, பூரண அறிவைப் பற்றி சில குறிப்புகளை வழங்குகிறது. அந்த அறிவைப் பெறுவது எப்படி, என்பதைப் பற்றி பூரணமான, பரமபுருஷரான கிருஷ்ணர் பேசுகிறார். கிருஷ்ணரே பூரணமான பரமபுருஷர் ஆவார். ஈஷ்வர: பரம: கிருஷ்ண: சத்-சித்-ஆனந்த-விக்ரக: அனாதிர் ஆதிர் கோவிந்த: ஸர்வ-காரண-காரணம் (பிரம்ம ஸம்ஹிதா 5.1). இதுதான் கிருஷ்ணரைப் பற்றி பகவான் பிரம்மாவால், அவருடைய ப்ரம்ம-ஸம்ஹிதா, என்னும் புத்தகத்தில் கொடுக்கப்பட்ட வரையறை, மிகவும் அதிகாரம் வாய்ந்த புத்தகம். இந்த புத்தகம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவால் தென் இந்தியாவிலிருந்து தொகுக்கப்பட்டது, பிறகு தென் இந்தியா பயணம் முடிந்து திரும்பியதும், அதை தன்னுடைய பக்தர்களுக்கு வழங்கினார். எனவேதான் நாம் இந்த புத்தகத்தை, ப்ரம்ம-ஸம்ஹிதாவை, அதிகாரம் வாய்ந்த வேத வாக்காக ஏற்றுக்கொள்கிறோம். இதுதான் நமது ஞானம் அடையும் முறை. நாம் அதிகாரிகளிடமிருந்து ஞானத்தைப் பெறுகின்றோம். எல்லோரும் அறிவை குறிப்பிட்ட அதிகாரிகளிடமிருந்து பெறுகிறார்கள், ஆனால் பொதுவான அதிகாரிகள், மற்றும் நாம் அறிவைப் பெறும் செயல்முறை சற்று வித்தியாசமானது. நம்முடைய முறைப்படி ஒருவரை அதிகாரியாக ஏற்பதற்கு முன், அவர் அவருக்கு முன் இருந்த அதிகாரியிடம் சரணடைந்திருக்கவேண்டும். ஒருவரால் யார் உதவியும் இன்றி சுய முயற்சியால் அதிகாரி ஆக முடியாது. அது சாத்தியமல்ல. அது குறைபாடுகள் நிறைந்தது. இந்த உதாரணத்தை நான் பல முறை கூறியிருக்கிறேன், அதாவது ஒரு குழந்தை தன் தந்தையிடமிருந்து கற்றுக் கொள்கிறது. குழந்தை தந்தையிடம் கேட்கிறது, "அப்பா, இது என்ன இயந்திரம்?" அதற்கு தந்தை சொல்கிறார், "என் அன்புக் குழந்தாய், இதற்கு ஒலிவாங்கி எனப் பெயர்." ஆகையால் குழந்தை தந்தையிடமிருந்து அந்த அறிவைப் பெறுகிறது, "இது ஒளிவாங்கி." ஆக அந்த குழந்தை மற்றவரிடம், "இது ஒலிவாங்கி", எனக் கூறும் பொழுது அது சரியானது. அவன் குழந்தையாக இருந்தாலும், அதிகாரம் உள்ளவரிடமிருந்து அந்த அறிவை அவன் பெற்றதால், அவனுடைய அறிவின் வெளிப்படுத்தல் சரியானதாகும். அதுபோலவே, நாம் அறிவை அதிகாரம் உள்ளவரிடமிருந்து பெற்றால், நான் குழந்தையாகவே இருந்தாலும், என் அறிவின் வெளிபடுத்தல் சரியாக இருக்கும். இதுதான் நாம் அறிவை அடையும் முறை. நாம் ஞானத்தை உற்பத்தி செய்வதில்லை. அந்த செயல்முறை தான் பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, ஏவம் பரம்பரா-ப்ராப்தம் இமம் ராஜர்ஷயோ விது: (பகவத் கீதை 4.2)(). இந்த பரம்பரை அமைப்பு... இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவான் அஹம் அவ்யயம். விவஸ்வான் மனவே ப்ராஹ மனுர் இக்ஷ்வாகவே (அ)ப்ரவீத் (பகவத் கீதை 4.1) ஏவம் பரம்பரா. ஆக பூரண (முழு) அறிவை நாம் பூரணமானவரிடமிருந்து கேட்டு தான் தெரிந்துகொள்ளமுடியும். சார்காட்சியால் அறியும் இவ்வுலகில் ஒருவராலும் நமக்கு பூரணனமான அறிவை வழங்க முடியாது. அது சாத்தியமல்ல. ஆக இங்கு நாம் பூரண உலகத்தைப் பற்றி பூரண ஞானத்தைப் பற்றி, பரமபுருஷரிடமிருந்து, பூரணமான நபரிடமிருந்து புரிந்துக் கொண்டிருக்கின்றோம். பூரணத்துவம் வாய்ந்தவர் என்றால் அனாதிர் ஆதிர் கோவிந்தத: (பிரம்ம ஸம்ஹிதா 5.1). அவர்தான் முழுமுதற் நபர், ஆனால் அவருக்கு மூத்தவர் யாரும் இல்லை; ஆகையால் பூரணமானவர். அவர் இருப்பதற்கு காரணம் வேறு யாரோ என்று நினைப்பது தவறு. அப்படி என்றால் அது கடவுள் அல்ல. எனவே இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், ஸ்ரீ பகவான் உவாச, பூரணமான (சுதந்திரமான) நபர்... பகவான் என்றால் பூரணத்துவம் வாய்ந்தவர், யாரையும் சார்ந்து இல்லாதவர்.