TA/Prabhupada 0373 - பஜஹு ரே மன பாடலின் பொருள்
Purport to Bhajahu Re Mana -- The Cooperation of Our Mind
பஜஹு ரே மன ஸ்ரீ-நந்த-நந்தன-அபய சரணாரவிந்த ரே. இது கோவிந்த தாசர் பாடிய பாடல், கவிஞர் கோவிந்த தாசர். அவர் தன் மனதிற்கு உபதேசம் செய்கிறார், ஏனென்றால் இறுதியில், நாம் நமது மனதின் ஒத்துழைப்புடன் தானே செயல்படவேண்டியிருக்கிறது. நம் மனதின் அமைதி கலைத்துப் போனால், நமது மனம் நம்மை வேறு எதையாவது தேர்ந்தெடுக்க வற்புறுத்தினால், ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவது மிகவும் கஷ்டமானது. அது வாஸ்தவம் தான். ஆகையால் மனதை கட்டுப்படுத்துவதற்கு இந்த யோக முறை என்பது இருக்கிறது. இது மனதை கட்டுப்படுத்த ஒரு இயந்திரத்தனமான முறை. ஏனென்றால், மனதை கட்டுப்படுத்தாமல், மனதை சாந்தமாக வைத்திருக்காமல், ஒருவராலும் ஆன்மீகத்தில் முன்னேற முடியாது. ஆனால் வைஷ்ணவ முறை என்பது மனதை நேரடியாக பக்தித் தொண்டில் ஈடுபடுத்துவது தான். அதனால் மனம், பக்தித் தொணடை தவிர்த்து வேறு எதையும் தேடி செல்லாது. அது தான் நம் முறை. அது நடைமுறைக்கும் ஏற்றது. நாம் கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் நம் மனதை ஒருமுகப்படுத்தினால்,
அர்ச்சனம் - ஷ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ:, ஸ்மரணம் பாத-ஸேவனம் (ஸ்ரீமத் பாகவதம் 7.5.23)
பாத-ஸேவனம், பிறகு மனம் தானாகவே கட்டுப்பாட்டில் இருக்கும். யோகிகள் செயற்கையாக மனதை கட்டுப்படுத்த முயன்றாலும், அவர்கள் தோல்வி அடைகிறார்கள். பெரிய பெரிய யோகிகள் தோல்வியடைந்ததாக பல உதாரணங்கள் இருக்கின்றன. ஆக செயற்கையாக செய்த எதுவும் வெற்றிகரமாக இருப்பது சாத்தியம் அல்ல. ஆகையால் மனதிற்கு சிறந்த ஈடுபாட்டை அளிப்பதே மனதை கட்டுப்படுத்தும் முறையாகும். பிறகு தாழ்ந்த சக்தியால் மனம் கவரப்படாமல் இருக்கும். இது தான் விஞ்ஞானம் அல்லது அந்த வெற்றியின் ரகசியம். ஆக கோவிந்த தாசர் தன் மனதை, அபய-சரண எனப்படும் கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் நிலைநிறுத்த முயல்கிறார். அபய என்றால் "பயமில்லாத இடம்" . நாம் நமது பணத்தை ஒரு நம்பகரமான வங்கியில் சேமிப்பது போல்தான். நஷ்டத்தின் பயம் இல்லை என நாம் நம்புவதால் தான். அது தான் அபய, 'பயம் இல்லாத," மற்றும் சரண என்றால் "தாமரை பாதங்கள்." ஆக கோவிந்த தாசர் தன் மனதிற்கு ஆலோசனை அளிக்கிறார், ஹு ரே மன - "என் அன்பு மனமே," ஹு ரே - மனதை போதிக்கும் வகையில். பஜ ஹு ரே மன. பஜ. பஜ என்றால் "பக்தி தொண்டில் ஈடுபட்டிருப்பது." பஜ ஹு ரே மன ஸ்ரீ நந்த-நந்தன, "நந்தரின் மகனான கிருஷ்ணரின் தொண்டில்." கிருஷ்ணரின் பற்பல தோற்றங்கள் உள்ளன, ஆனால் நாம் குறிப்பிட்ட கிருஷ்ணரில் தான் ஆர்வமாக இருக்கிறோம். அதாவது நந்த மக்ராஜாவின் மகனாக மற்றும் வஸுதேவரின் மகனாக தோன்றிய கிருஷ்ணர். ஆகையால் அவர் குறிப்பிட்டு கூறுகிறார்... ஒரு நபரை, அவன் பெயர் மற்றும் அவன் தந்தையின் பெயரை வைத்து சரியாக அடையாளம் காட்டமுடியும். ஆகையால் அவர் கூறுகிறார், ஸ்ரீ நந்த-நந்தன; பஜஹு ரே மன ஸ்ரீ நந்த-நந்தன அபய-சரணாரவிந்த ரே, "அவர் தாமரை பாதங்கள், அடைக்கலம் பெறுவதற்கு பாதுகாப்பானவை." பாகவதத்தில் அதற்கு பல ஸ்லோகங்கள் உள்ளன:
ஸமாஷ்ரிதா யே பத-பல்லவ-ப்ளவம் மஹத்-பதம் புண்ய-யஷோ முராரே:. மஹத்-பதம்
"அனைத்து ஜட படைப்பும் கிருஷ்ணரின் தாமரை பாதங்களையே சார்ந்துள்ளது." ஆக, பிரம்மாண்டமான இந்த படைப்பே சார்ந்திருக்கும் போது, நானோ ஒரு சிறிய முக்கியமற்ற ஜீவன், தான் பயமற்ற கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் அடைக்கலம் பெற்றால், என் பாதுகாப்பு உறுதியானது. பஜஹு ரே மன ஸ்ரீ நந்த-நந்தன, அபய-சரணாரவிந்த ரே, துர்லப மானவ-ஜனம ஸத்-ஸங்கே, தாரோஹோ எ பவ-ஸிந்து ரே. துர்லப, "அரிதாய் கிடைத்த இந்த மனித பிறவி." துர்லப மானவ-ஜனம. நம் மனதை கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் ஒருமுகப்படுத்துவதற்கு, நாம் பக்தர்களுடன் இணைந்து வாழ்வது அவசியம். துர்லப மானவ-ஜனம ஸத்-ஸங்கே. ஸத்-ஸங்கே என்றால் "பக்தர்களின் சகவாசத்தில்." நாம் பக்தர்களின் சகவாசத்தில் வாழாமல் இருந்தால், நாம் கிருஷ்ணரின் தாமரை பாதங்களில், யார் உதவியும் இல்லாமல் மனதை ஒருமுகப்படுத்த நினைத்தால், அது முடியாது. அது தோல்வியடையும். ஆகையால் அவர் கூறுகிறார் ஸத்-ஸங்கே, "பக்தர்களின் சகவாசத்தில்." தாரோஹோ எ பவ-ஸிந்து ரே, "அறியாமையின் கடலை கடந்து போது தான் வாழ்வின் உண்மையான நோக்கம்." ஆக நாம் பக்தர்களின் சகவாசத்தில் கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் நம் மனதை நிலைநிறுத்தினால், நாம் பௌதீக வாழ்க்கையின் அறியாமை கடலை எளிதாக கடந்து போகலாம். ஆனால் என் தற்போதைய ஈடுபாடு என்ன? என் தற்போதைய ஈடுபாடு:
ஷீத ஆதப பாத பரிசன, எ தின ஜாமினி ஜாகி ரே
என் பௌதீக ஈடுபாடு என்னவென்றால் "கடுமையான குறியைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை, கடுமையான வெய்யிலைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை, இரவில் உறங்குவதை பற்றி நான் கவலைப்படுவதில்லை; நான் கடுமையாக இரவும் பகலும் உழைக்கிறேன். ஷீத ஆதப பாத பரிசன எ தின ஜாமினி ஜாகி ரே. எதற்காக ? க்ருபண, பிபஃலே ஸேவினு க்ருபண துரஜன, "க்ருபண துரஜன போன்றவர்களுக்கு தொண்டு செய்வதற்காக." க்ருபண துரஜன என்றால் வெளியாட்கள். இந்த பௌதீக சமுதாயம், நட்பு, நேசம் என்றழைக்கபடுவோர் எல்லாம் வெளியாட்கள். அவர்களால் எனக்கு வாழ்வின் உண்மையான ஆன்மீக முன்னேற்றத்தை அளிக்க முடியாது. ஆனால் நாம், சமுதாயம், நட்பு, நேசம், தேசப்பற்று, சமுதாயப்பற்று என்று பலரின் தொண்டில் ஈடுபட்டிருக்கிறோம். நமக்கு பல ஈடுபாடுகள் உள்ளன, ஆனால் அதுவெல்லாம் பிபஃலே. பிபஃலே என்றால் "பலனற்றது." பலன் என்னவென்றால், பெயரளவில் இருக்கும் என் தேசம், சமுதாயம், குடும்பம், இவையெல்லாம் காப்பதற்காக நான் ஒரு விதமான மனப்பான்மையை வளர்த்துக் கொள்வேன், பிறகு மரண நேரத்தில் என் மனப்பான்மையை பொறுத்து ஒரு உடலை ஏற்கவேண்டியிருக்கும். மக்கள் பல வெறுக்கத்தக்க முறைகளை, சமுதாயம், நட்பு மற்றும் பெயரளவில் இருக்கும் நேசம், இவையை சார்ந்த கடமைகளை தொடர்ந்து செய்வதற்காக கையாளுகிறார்கள். அதன் பலன் என்னவென்றால் அவன் மனித மனநிலை இல்லாத ஒரு வகையான மனநிலையை உருவாக்குகிறான். மேலும் அதன் பலனாக, அவன், அந்த மனநிலையைப் பொறுத்து, அடுத்த ஜென்மத்திற்காக, ஒரு உடலை ஏற்க வற்புறுத்தப்படுவான். ஆகையால் க்ருபண துரஜன. க்ருபண என்றால் "கருமி". அவர்கள் எனக்கு எந்த அறிவையும் தரமாட்டார்கள், வாழ்வின் உண்மையான தேவையைப் பற்றி எந்த அறிவொளியையும் அளிக்க மாட்டார்கள், அப்படி இருந்தும் நாம் இப்படிப்பட்ட துரஜன, அதாவது வெளியாட்களின் சேவையில் ஈடுபட்டிருக்கிறோம். பிபஃலே ஸேவினு க்ருபண துரஜன, சபல ஸுக-லப லாகீ ரே, மற்றும் அதில் சிறிதளவு இன்பம் இருக்கிறது. இல்லாவிட்டால், எப்படி ஒரு மனிதனால் இரவும் பகலும் இவ்வளவு கடுமையாக உழைக்க முடியும். உடலுறவு இன்பம் தான் அந்த இன்பம், சபல, "ஊசலாடும்." வித்யாபதி பாடுகிறார், ததல ஸைகடே வரி பிந்து-ஸம, "அந்த இன்பம் பாலைவனத்தில் தோன்றும் ஒரு துளி நீரைப் போல தான்." பாலைவனத்தில் தண்ணீர் தேவை, ஆனால் துளி தண்ணீரை அதன்மேல் தெளித்து, "இதோ தண்ணீர்," என்றால் அதற்கு என்ன மதிப்பு? அதுபோலவே, நாம் அளவற்ற இன்பத்திற்காக ஏங்குகிறோம், இந்த சமுதாயம், நட்பு நேசம் இவைகளால் நமக்கு எவ்வளவு தரமுடியும்? ஆக நாம் இவ்வாறு இன்பம் பெறுவதில் நம் நேரத்தை வெறும் வீணாக்குகிறோம். இந்த பௌதீக வாழ்க்கையிலிருந்து, சமுதாயம், நட்பு மற்றும் பல்வேறு விதமாக இன்பம் பெறுவதில் வெறும் வீணாக்குகிறோம். பிபஃலே. பிபஃலே என்றால் "எந்த நற்பலனும் இல்லாமல்." பிபஃலே ஸேவினு க்ருபண துரஜன, சபல ஸுக-லப லாகீ ரே. "பரவாயில்லை, நான் சுகமனுபவிப்பேன். என்னிடம் இளமை இருக்கிறது, என்னால் பணம் சம்பாதிக்க முடியும், எனக்கு குடும்பத்தை பற்றி கவலை இல்லை." உண்மையில், தற்போது இது தான் நடந்து கொண்டிருக்கிறது. யாரும் குடும்பத்தை பற்றி கவலைப் படுவதில்லை. தன் பராமரிப்பிலேயே மும்முரமாக இருக்கிறான், தன் இளமையை அனுபவிப்பதற்காக, மற்றும் பல விஷயங்களுக்காக. ஆக... கவிஞர் கோவிந்த தாசர் ஆலோசனை கூறுகிறார், "என் அன்பு மனமே, தற்போது உன்னிடம் இளமையான வாழ்க்கை இருப்பதால் நீ அனுபவிக்கலாம். இது எனக்கு புரிகிறது." ஆகையால், நீ சொல் 'எ தன யவ்வன புத்ர பரிஜன, இதே கி ஆசே பரதீதி ரே, "இந்த செல்வங்களை சேமிப்பதில், இளமையை அனுபவிப்பதில்."
எ தன யவ்வன புத்ர பரிஜன
சமுதாயம், நட்பு மற்றும் நேசத்தில், உண்மையான இன்பம், அதாவது தைவீக இன்பம் ஏதாவது இருப்பதாக நீ நினைக்கிறாயா? இதே கி ஆசே பரதீதி ரே. "இது கிட்டத்தட்ட தாமரை இலையின் மேல் தண்ணீரைப் போல தான்." கமல-தல-ஜல, ஜீவன தலமல. "தண்ணீர் ஊசலாடுகிறது. எந்த நிமிடத்திலும் கீழே விழ வாய்ப்பு இருக்கிறது." வாஸ்தவமாகவே, நமது இளைமையான கொண்டாட்டமும் பணம் சம்பாதிப்பதும், எந்த நொடியிலும் முடிந்து போகிவிடலாம். இப்படிப்பட்ட இன்பத்தை நம்பி வாழமுடியாது. அது நல்லது இல்லை ஏனெனில் அது எந்த நொடியிலும் காணாமல் போகலாம். தற்போது மக்கள் உயரமான கட்டிடங்களை கட்டுவதில், செல்வத்தை சேகரிப்பதில், சொகுசான வாகனங்களை வைத்திருப்பதில், மற்றும் பல விஷயங்களில் ஈடுபட்டு இன்பம் பெற முயல்கிறார்கள், ஆனால் எந்த நொடியிலும் அது இல்லாமல் போகிவிடலாம் என்பதை மறந்து போகிறார்கள். எந்த நொடியிலும். கமல-தல-ஜல, "தாமரை இலையின் மேல் தண்ணீரை வைத்திருப்பதைப் போல் தான்." அது நிலையாக நிற்காது. எந்த நொடியிலும் ஊசலாடி விழலாம். இது நல்ல உதாரணம். ஆகையால் அவர் ஆலோசனை கூறுகிறார், ஷ்ரவண கீர்த்தன, அவ்வாறு அவர் தன் மனதிற்கு உபதேசம் செய்கிறார், "இப்படி செய்யாதே, அப்படி செய்யாதே," என பல விஷயங்கள். பிறகு அடுத்த கேள்வி என்னவென்றால், மனம் கோவிந்த தாசரிடம் கேட்கலாம், "அப்போது நீ என்ன தான் செய்ய விரும்புகிறாய்? நீ இந்த பௌதீக ஈடுபாடுகளை செய்யாதே என்கிறாய், அது சரி. ஆனால் செயவது என்ன என்பதற்கு உன்னிடம் எதாவது திட்டம் இருக்கிறதா? அவர் கூறுகிறார், "என் செயல் திட்டம் இது தான்:
ஷ்ரவண கீர்த்தன ஸ்மரண வந்தன, பாத-ஸேவன தாஸ்ய ரே, பூஜன ஸகி-ஜன ஆத்ம-நிவேதன, கோவிந்த தாஸ-அபிலாஷ ரே
"என் அன்பு மனமே, இந்த அபய-சரணாரவிந்த, கிருஷ்ணரைப் பற்றி கேட்பதில், மற்றும் ஷ்ரவண, அதாவது அவர் புகழைப் பாடுவதில், ஷ்ரவண கீர்த்தன, எனக்கு உதவு. இது தான் என் ஆசை. நான் அவரையே நினைக்கவேண்டும், அவர் தாமரை பாதங்களை சேவிக்க வேண்டும், அவருடன் நட்பு கொள்ளவேண்டும். என்னிடம் இருப்பதெல்லாம் அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். இவை தான் என் ஆசைகள். நீ தயவு செய்து எனக்கு ஒத்தாசையாக இருந்தால், என்னால் இதை செய்ய முடியும்." ஆக இது மனித வாழ்வின் இலக்கை போதிக்கும் ஒரு பாடல், மேலும் இந்த கோட்பாடுகளைப் பின்பற்றுபவர் யாரும், உண்மையாகவே தைவீக இன்பத்தை பெறலாம்.