TA/Prabhupada 0374 - பஜஹு ரே மன பாடலின் பாகம் 1 பொருள்



Purport to Bhajahu Re Mana -- San Francisco, March 16, 1967

பஜ ஹு ரே மன ஸ்ரீ-நந்த-நந்தன அபய-சரணாரவிந்த ரே. பஜ, பஜ என்றால் வழிபடு; ஹு, அடேய்; மன, மனமே. ஒரு சிறந்த தத்துவவாதியும், கடவுளின் பக்தனுமான கவிஞர் கோவிந்த தாசர், வேண்டுகிறார். அவர் தன் மனதிடம் வேண்டிக்கேட்பது எதற்காக என்றால், ஒவ்வொருவரின் தோழனும் மனம் தான் மற்றும் எதிரியும் மனம் தான். ஒருவனால் தன் மனதிற்கு கிருஷ்ண பக்தியில் பயிற்சி அளிக்க முடிந்தால், அவன் வெற்றிகரமானவன். மனதிற்கு பயிற்சி அளிக்க முடியாத பட்சத்தில் அவன் வாழ்க்கை ஒரு தோல்வியே. ஆகையால், கிருஷ்ண பெருமானின் சிறந்த பக்தரான கோவிந்த தாசர்... அவர் பெயரே குறிக்கிறது, கோவிந்த தாசர். கோவிந்த, கிருஷ்ணர் மற்றும் தாசர் என்றால் சேவகன். பகதர்களுடைய மனப்பான்மை அது தான். அவர்கள் எப்போதும் தாசன் அதாவது சேவகன் என்ற பெயரை இணைத்து விடுவார்கள். ஆக கோவிந்த தாசர் வேண்டுகிறார், "என் அன்பு மனமே, நீ நந்தரின் மகனை வழிபட முயற்சி செய், அவர் அபய-சரண, அதாவது அவர் தாமரை பாதங்கள் பாதுகாப்பானவை. அங்கு பயம் என்பதற்கு இடமே இல்லை." அபய. அபய என்றால் பயம் இல்லாத, மற்றும் சரண, சரண என்றால் தாமரை பாதங்கள். ஆக அவர் தன் மனதிற்கு ஆலோசனை கூறுகிறார், "என் அன்பு மனமே, தயவு செய்து, நீ, நந்தரின் மகனின் பயமற்ற தாமரை பாதங்களை வழிபடுவதில் தம்மை ஈடுபடுத்திக் கொள். பஜஹு ரே மன ஸ்ரீ-நந்த-நந்தன. நந்த-நந்தன என்றால் நந்த மகாராஜரின் மகனான கிருஷ்ணர். மற்றும் அவர் தாமரை பாதங்கள் என்பவை அபய, அதாவது பயமற்றவை.


ஆக கோவிந்த தாசர் தன் மனதை வேண்டுகிறார், "தயவு செய்து நீ கிருஷ்ணரின் தாமரை பாதங்களின் அன்பு நிறைந்த திவ்யமான தொண்டில் ஈடுபட்டு இரு." மற்ற விஷயங்களை பொறுத்தவரை... அவர் இதையும் கூறுகிறார், துர்லப மானவ-ஜனம. துர்லப என்றால் அரிதானது. மானவ-ஜனம என்றால் இந்த மனித பிறவி. பல சுற்றுகளுக்கு பிறகு தான் அது வரும். கிருஷ்ண உணர்வை அடைந்து, பிறப்பு மற்றும் இறப்பின் சூழற்சியிலிருந்து வெளியேறுவதற்கு, ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆகையால் அவர் ஆலோசனை கூறுவது என்னவென்றால், இந்த மனித பிறவி என்பது மிகவும் முக்கியமானது, துர்லப. துர்லப என்றால்... து: என்றால் பெறும் சிரமத்திற்கு பிறகு, மற்றும் லப என்றால் கிடைக்கக்கூடியது. மூடர்களுக்கு இந்த மனிதப்பிறவி எவ்வளவு முக்கியமானது என்பதே தெரியாது. அவர்கள் மிருகங்களை போல் வெறும் புலனுகர்ச்சியில் வீணாக்குகிறார்கள். ஆக நமக்கு அறிவூட்டுமாறு, அவர் தன் மனதிற்கு பயிற்சி அளிக்கிறார், "நீ உன் மனதை கிருஷ்ண பெருமானை வழிபடுவதில் ஈடுபடுத்து." துர்லப மானவ-ஜனம ஸத்-ஸங்கே. மேலும் இந்த மனப் பயிற்சி நல்லோரின் சகவாசத்தில் மட்டுமே சாத்தியம் ஆகும், ஸத்-ஸங்க. ஸத்-ஸங்க என்றால் நூறு சதவீதம், வெறும் பகவானுக்கு சேவை செய்வதிலேயே ஈடுபட்டிருப்பவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஸத் என்று பெயர். ஸதாம் ப்ரஸங்காத். பக்தர்கள் சகவாசம் இல்லாமல், மனதிற்கு பயிற்சி அளிப்பது சாத்தியம் அல்ல. யோகா அல்லது தியானம் என்றழைக்கப்படும் முறைகளால் அது சாத்தியம் இல்லை. பக்தர்களின் சகவாசம் வைத்திருக்கவேண்டும்; இல்லாவிட்டால் இது சாத்தியம் இல்லை. அதற்கு தான் நாம் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை அமைத்திருக்கிறோம், அதாவது பக்தர்களின் இந்த சங்கத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக.


ஆக கவிஞர் மற்றும் பக்தனான கோவிந்த தாசர், ஆலோசனை கூறுகிறார், துர்லப மானவ-ஜனம ஸத்-ஸங்கே, "உனக்கு இந்த சிறந்த, அரிய மனித உடல் கிடைத்திருக்கிறது. ஆக, பக்தர்களுடன் உறவாடி, கிருஷ்ணரின் அபயம் அளிக்கும் தாமரைப் பாதங்களில் மனதை ஈடுபடுத்து." அவர் தன் மனதிடம் விண்ணப்பிக்கிறார். பிறகு வாழ்க்கையின் ஏமாற்றத்தை அவர் சுட்டி காட்டுகிறார். என்ன அது? ஷீத ஆதப பாத பரிசன எ தின ஜாமினி ஜாகி ரே. ஷீத என்றால் குளிர்காலம். ஆதப என்றால் கோடைக்காலம், அதாவது மிகுந்த வெப்பமான காலம். ஷீத ஆதப பாத, குளிர், பரிசன, தீவிரமான மழைகாலம். ஆக இந்த தொந்தரவுகள் எப்பொழுதும் உள்ளன. சிலசமயங்களில் தீவிரமான குளிர் இருக்கும். சிலசமயம் சுட்டெரிக்கும் வெப்பம் இருக்கும். சிலசமயங்களில் மழை கொட்டும். ஏதாவது நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆக அவர் கூறுகிறார், ஷீத ஆதப பாத பரிசன எ தின ஜாமினி ஜாகி ரே. இரவும் பகலும், மக்கள் எதற்கும் கவலைப் படாமல் உழைத்து வருகிறார்கள், தீவிரமான குளிரிலும், தீவிரமான வெப்பத்திலும், தீவிரமான மழையிலும், இரவிலும், பாலைவனத்திலும், கடலுக்குள்ளிலும் - எல்லா இடங்களிலும், ஓய்வே இல்லாத உழைக்கிறார்கள். ஷீத ஆதப பாத பரிசன எ தின ஜாமினி ஜாகி ரே. இரவுநேரப்பணி மற்றும் அதைப் போன்ற பல ஈடுபாடுகள் உள்ளன. ஆக அவர் கூறுகிறார், ஷீத ஆதப பாத பரிசன எ தின ஜாமினி ஜாகி ரே, பிபஃல சேவினு க்ருபண துரஜன சபல ஸுக-லப லாகீ ரே. "இவ்வளவு கஷ்டப்பட்டு நான் என்னத்தை கண்டேன்? என் கிருஷ்ண பக்திக்கு சாதகமே இல்லாத சில நபர்களுக்கு பணியாற்றி இருக்கிறேன். எதற்காக பணியாற்றினேன்?"


சபல ஸுக-லப லாகீ ரே


"சபல, நிலையில்லாத இன்பம். என் குழந்தை சிரித்தால், நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என எண்ணுகிறேன். என் மனைவியை திருப்தியடைய செய்தால், நான் மகிழ்வேன் என எண்ணுகிறேன். ஆனால் இந்த தற்காலிகமான சிரிப்பு மகிழ்வு, இவையெல்லாம் நிலையற்றவை." அதை ஒருவர் உணரவேண்டும். இதைப்போலவே மற்ற கவிஞர்கள் பலரும் பாடியிருக்கிறார்கள், இந்த மனம் ஒரு பாலைவனத்தைப் போன்றது. கடலளவு தண்ணிருக்காக ஏங்குகிறது. பாலைவனத்தை ஒரு கடலால் நிரப்பினால் அது நிறைவடையும். மேலும் வெறும் ஒரு சொட்டு தண்ணிரால் என்ன பலன் அடையமுடியும்? அதுபோலவே, நம் மனமும், நம் உள்ளமும் கடலளவு மகிழ்ச்சிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது. மற்றும் குடும்ப வாழ்க்கையில், சமூக வாழ்க்கையில் கிடைக்கும் இந்த தற்காலிகமான மகிழ்ச்சி எல்லாம் ஒரு சொட்டு தண்ணீரைப் போல் தான். ஆக தத்துவவாதிகளைப் போன்றவர்களால், அதாவது உலக நிலைமையை ஆய்ந்தறிந்தவர்களால், "இந்த நிலையற்ற இன்பத்தால் என்க்கு நிரந்தரமான மகிழ்ச்சியை தரமுடியாது." என்பதை புரிந்துகொள்ள முடியும். பிறகு அவர் கூறுகிறார்,


கமல-தல-ஜல, ஜீவன தலமல


கமல-தல-ஜல என்றால் தாமரையைப் போல். நீங்கள் குளத்தில் தாமரைப் பூக்களை பார்த்திருப்பீர்கள். அவைகள் தண்ணீரின் மேல் தள்ளாடிக் கொண்டு இருக்கின்றன. எந்நேரத்திலும் அது முழுகலாம். அதுபோலவே, இந்த வாழ்க்கை எந்நேரமும் ஆபத்துக்கள் நிறைந்தது. எந்த நொடியிலும் அது முடிந்து போகலாம். பல உதாரணங்கள் இருக்கின்றன. மக்கள் அவையை பார்த்தும் மறந்துவிடுகிறார்கள். அது தான் ஆச்சரியப்படக்கூடிய ஒரு விஷயம். அவர்கள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியிலும், தான் ஆபத்தில் இருப்பதை, மற்றோர் ஆபத்தில் இருப்பதை பார்க்கிறார்கள். அப்படி இருந்தும், "நான் பாதுகாப்பாக இருக்கின்றேன்." என தவறாக எண்ணுகிறார்கள். இது தான் நிலைமை.