TA/Prabhupada 0436 - எந்த நிலையும் மகிழ்ச்சியாக இருந்து, கிருஷ்ண பக்தியில் மட்டுமே ஆர்வமுடன் இருப்பது
Lecture on BG 2.8-12 -- Los Angeles, November 27, 1968
பக்தன்: ஸ்லோகம் 11, புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: அறிவாளியைப் போல பேசும் அதே சமயத்தில் கவலைப்பட வேண்டாதவற்றிற்காக நீ கவலைப்படுகிறாய். அறிஞர் வாழ்பவர்களுக்காகவோ, மாண்டவர்களுக்காகவோ வருந்துவதில்லை (பகவத்-கீதை 2.11)." பொருளுரை: "உடனடியாக ஆசிரியரின் நிலையை ஏற்ற பகவான், மாணவனை 'முட்டாள் ' என்று மறைமுகமாக அழைத்துக் கண்டிக்கின்றார். பகவான் கூறினார், "நீ அறிவாளியைப் போலப் பேசுகிறாய், ஆனால் உன்மையான அறிஞனானவன், உடல் என்றால் என்ன, ஆத்மா என்றால் என்ன என்பதை அறிந்தவன். உடலின் எந்த நிலைக்கும், உயிரோடு இருந்தாலும், இறந்தாலும், வருந்துவதில்லை, என்பதே உனக்கு தெரியவில்லை. பின்வரும் அத்தியாயங்களில் விளக்க இருப்பதைப் போல, அறிவு என்றாலே, ஜடம், ஆத்மா, மற்றும் இவற்றின் ஆளுனரை அறிவதுதான். அரசியல், சமூக நியதிகளைக் காட்டிலும் அறநெறிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று அர்ஜுனன் வாதாடினான். ஆனால் ஜடம், ஆத்மா, பரம புருஷரைப் பற்றிய அறிவு ஆகியவை அறநியதிகளைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை அவன் அறியவில்லை. இவ்வறிவு போதுமான அளவில் இல்லாதபோது, அவன் தன்னை பெரும் அறிஞனாக காட்டிக் கொண்டிருக்கக் கூடாது. அவன் பெரும் அறிஞன் அல்ல என்ற காரணத்தால், கவலைப்பட வேண்டாதவற்றிற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். பிறந்த இவ்வுடல், இன்றோ நாளையோ அழிய வேண்டியதே; எனவே, இவ்வுடல் ஆத்மாவைப் போல அவ்வளவு முக்கியமானதல்ல. இதை அறிபவனே உண்மை அறிஞன். இத்தகைய அறிஞன் ஜட உடலின் எந்த நிலைக்கும் வருந்துவதில்லை." பிரபுபாதர்: கிருஷ்ணர் கூறுகிறார், "இந்த உடல், உயிருடன் இருந்தாலும் சரி, உயிர் இல்லாமல் இருந்தாலும் சரி, வருந்தத்தக்கது அல்ல." பிணம், உடலிலிருந்து உயிர் சென்றப் பிறகு, அதற்கு எந்த மதிப்பும் கிடையாது. வருந்தி என்ன பிரயோஜனம்? ஆயிரம் ஆண்டுகளுக்கு வருந்தினாலும் போன உயிர் திரும்பி வராது. ஆக இறந்த உடலுக்காக வருந்துவதற்கு காரணமே இல்லை. மேலும் ஆன்மாவைப் பொருத்தவரை, அது முடிவற்றது. இறந்ததாகத் தோன்றினாலும், அதாவது இந்த உடலின் இறப்புடன், அவன் (ஆன்மா) இறப்பதில்லை. பிறகு எதற்காக ஒருவன் சோகத்தில் மூழ்கி இருக்கவேண்டும், "ஓ, என் தந்தை இறந்துவிட்டார், என் உறவினர், இறந்துவிட்டார், " பிறகு அழுகை வேறு ? அவன் சாகவில்லை. இந்த அறிவு ஒருவருக்கு இருந்தாக வேண்டும். பிறகு அவன் எந்த நிலையிலும் மகிழ்ச்சியாக இருப்பான், மற்றும் கிருஷ்ண உணர்வில் மட்டுமே ஆர்வம் கொண்டிருப்பான். உயிரோடு இருந்தாலும், இறந்தாலும், உடலுக்காக வருந்துவதற்கு எதுவும் இல்லை. இதுதான் இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணரால் போதிக்கப் பட்டிருக்கிறது. மேலும் படிக்கவும். பக்தன்: "நானோ, நீயோ, இம்மன்னர்களோ இல்லாமலிருந்த காலம் எதுவுமில்லை. எதிர்காலத்திலும் நம்மில் எவரும் இல்லாமலிருக்கப் போவதுமில்லை. (பகவத் கீதை 2.12)." பொருளுரை: "வேதங்களில், கட உபநிஷத் மற்றும் ஷ்வேதாஷ்வதர உபநிஷத்தில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால்..." பிரபுபாதர்: பல உபநிஷதங்கள் உள்ளன. அவைகள் வேதம் என்றழைக்கப்படுகின்றன. உபநிஷதங்கள் வேதங்களின் தலைப்புகளைப் போன்றவை. ஒரு அத்தியாயத்திற்கு தலைப்பு இருப்பது போல், இந்த உபநிஷதங்கள் என்பவை வேதங்களின் தலைப்புகள் ஆகும். 108 முக்கியமான உபநிஷதங்கள் உள்ளன. அவைகளிலும் ஒன்பது உபநிஷதங்கள் மிகவும் முக்கியமானவை. ஆக அந்த ஒன்பது உபநிஷதங்களில், ஷ்வேதாஷ்வதர உபநிஷத், தைத்திரேய உபநிஷத், ஐத்ரேய உபநிஷத், ஈஷ உபநிஷத், முண்டக உபநிஷத், மாண்டுக்ய உபநிஷத், கட உபநிஷத், இவைகள் மிகவும் முக்கியமானவை. எப்பொழுதாவது ஏதாவதொரு விஷயத்தில் விவாதம் ஏற்பட்டால், இந்த உபநிஷதங்களிலிருந்து ஒருவர் மேற்கோள்களை வழங்கவேண்டும்.