TA/Prabhupada 0684 – யோகப்பயிற்சியின் முக்கிய சோதனை – உமது மனதை விஷ்ணுவுருவின்மேல் நிலைநிறுத்த முடிகிறத
Lecture on BG 6.30-34 -- Los Angeles, February 19, 1969
விஷ்ணுஜன : ஸ்லோகம் 32 : " அர்ஜுனா , எவனொருவன் எல்லா உயிர்களுடைய சுகதுக்கங்களை தன்னுடன் ஒப்பிட்டுக் காண்கிறானோ, அவன் பரம யோகியாகக் கருதப்படுகிறான்.
பிரபுபாதா : இதுவே உலகளாவிய பார்வை. கடவுள் உங்கள் இதயத்தில் அமர்ந்திருக்கிறார், ஒரு பூனையின் இதயத்திலோ, நாயின் இதயத்திலோ இல்லை என்பதல்ல. அவர் எல்லாருடைய இதயத்திலுமே அமர்ந்திருக்கிறார். சர்வ பூதானாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சர்வ பூதானாம் என்றால், எல்லா உயிர்களிலும் என்று பொருள். அவர் மனிதன் இதயத்திலும் அமந்திருக்கிறார், எறும்பின் இதயத்திலும் அமர்ந்திருக்கிறார். அவர் நாயின் இதயத்திலும் அமர்ந்திருக்கிறார். எல்லோர் இதயத்திலும் அமர்ந்திருக்கிறார். ஆனால் நாயும் பூனையும் அதை உணர முடியாது . இதுவே வித்தியாசம் . ஆனால் ஒரு மனிதன் , முயற்சி செய்தால் , அவன் யோக முறையை சாங்கிய யோக முறை, பக்தியோக முறையைப் பின்பற்றினால், பிறகு அவன் அறிந்து கொள்ளலாம். இதுவே மனிதப் பிறவியின் தனிச் சிறப்பு. . இதை நாம் தவறவிட்டோமானால், கடவுளுடனான நமது தொடர்பை அறிந்து கொள்ளவில்லையென்றால், நாம் இந்த வாய்ப்பை இழந்து விடுகிறோம். நாம் 8,400,000 வகையான பிறவிகளை , பரிணாம வளர்ச்சியில் கடந்து மனிதப் பிறவியை அடைந்தும் இந்த வாய்ப்பை இழந்து விட்டோம் என்றால், நாம் எவ்வளவு நஷ்டமடைகிறோம் என்று நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். எனவே நாம் அதை உணர வேண்டும். உங்களுக்கு நல்ல உடல், மனித உடல், புத்தி மற்றும் நாகரீகமான வாழ்க்கை கிடைத்துள்ளது. நாம் மிருகங்களைப்போல அல்ல. நம்மால் அமைதியாக சிந்திக்க முடியும். மிருகங்களைப் போல, வாழ்விற்கான கடுமையான போராட்டம் நமக்கு இல்லை. எனவே இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . இதுவே பகவத் கீதையின் அறிவுரை. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் . இதனை இழந்துவிடாதீர்கள்.
விஷ்ணுஜன : ஸ்லோகம் 33 : " அர்ஜுனன் கூறினான் : மதுசூதனரே மனம் நிலையற்றதும் அமைதியற்றதும் ஆனதால், நீங்கள் இப்போது கூறிய யோகம் முறையானது நடைமுறைக்கு ஒத்துவராத தாகவும் தாங்கமுடியாத் தோன்றுகிறது. (ப.கீ 6.33)
பிரபுபாதா : இது தான் யோகமுறைக்கான முக்கியமான பரீட்சை -- உங்களால், விஷ்னுவின் வடிவத்தின் மீது மனதை ஒருநிலைப்படுத்த முடிகிறதா என்பது தான். இந்த முறை, ஏற்கனவே கூறியபடி, குறிப்பிட்ட முறையில் அமர்ந்து, குறிப்பிட்ட முறையில் பார்க்க வேண்டும், குறிப்பிட்ட முறையில் வாழ வேண்டும் . இப்படி பல விஷயங்களை நாம் ஏற்கனவே விவாதித்தோம். ஆனால் ," இது எனக்கு மிகவும் கடிணம் " என்று அர்ஜுனன் கூறுகிறான். இதனை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அர்ஜுனன் கூறுகிறான், " ஒ, மதுசூதனா, நீங்கள் விளக்கிய யோக முறையானது......." இது அஷ்டாங்க யோகம் என்று அழைக்கப்படுகிறது. அஷ்டாங்க, எட்டு பகுதிகள். யம, நியம , முதலில் விதிமுறைகளை கடைப்பிடித்து புலன்களை கட்டுப்படுத்துதல் பிறகு சில ஆசனங்களை பயிற்சி செய்வது, பிறகு மூச்சு பயிற்சி செய்வது பின் மனதை ஒரு நிலைப்படுத்துதல் அதன்பின் வடிவத்தில் ஆழ்ந்து போவது அதில் எட்டு நிலைகள் உள்ளன, அஷ்டாங்க யோகம்.
எனவே அர்ஜுனன் கூறுகிறான் , "இந்த அஷ்டாங்க யோகம் மிகவும் கடினமாக இருக்கிறது" அவன், " நடைமுறைக்கு ஒத்துவராததுமாகத் தோன்றுகிறது" என்று கூறுகிறான், நடைமுறைக்கு ஒத்துவராதது என்றல்ல. அவனுக்கு அப்படித் தோன்றுகிறது, அதாவது முடியாதது என்பதல்ல. அது நடைமுறைக்கு ஒத்துவராததாக இருந்திருந்தால், கிருஷ்ணர் அதனை விளக்கியிருக்க மாட்டார், அவ்வளவு சிரமத்தை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார். அது நடைமுறைக்கு ஒத்துவராதது அல்ல, நடைமுறைக்கு ஒத்துவராததாகத் தோன்றுகிறது. ஒரு செயல், எனக்கு நடைமுறைக்கு ஒத்துவராமலிருக்கலாம், ஆனால் உங்களுக்கு நடைமுறைக்கு சரிவரலாம், அது வேறு விஷயம். ஆனால் பொதுவாக , ஒரு சாதாரண மனிதனுக்கு, இது நடைமுறைக்கு ஒத்துவராதது தான். அர்ஜுனன் தன்னை ஒரு சாதரண மனிதனின் நிலையில் வைத்துப் பேசுகிறான் , அதாவது, அவன் ஸந்நியாசி அல்ல, குடும்ப வாழ்வைத் துறந்தவனல்ல, உணவுக்கு வழியில்லாதவனுமல்ல. ஏனென்றால், அவன் ராஜ்ஜியத்துக்காக போரிடத் தான் போர்களத்தில் இருக்கிறான். எனவே அவன் சாதாரண மனிதனாகவே கருதப் படுகிறான். எனவே, உலக செயல்களில் ஈடுபடும் சாதரண மனிதர்கள், அதாவது, சம்பாத்தியம், குடும்பம், குழந்தை, மனைவி போன்ற பல பிரச்சனைகளில் உள்ளவனுக்கு, இது நடைமுறைக்கு ஒத்துவராததே. இதுதான் இங்கே குறிப்பிடப்படுவது. ஏற்கனவே எல்லாவற்றையும் துறந்த ஒருவனுக்குத் தான் இது நடைமுறைக்கு சாத்தியமானதாகும். ஒரு மலை அல்லது மலை குகை போன்ற தூய்மையான தனிமையான இடத்தில். தனிமையில், எந்த தொந்தரவும் இல்லாமல். ஆக, நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு , முக்கியமாக , இந்த காலத்தில் , இதற்கு எங்கே வாய்ப்பு? எனவேதான் இந்த யோக முறை நடைமுறைக்கு ஒத்துவராது. மிகப் பெரும் வீரனான அர்ஜுனனால் இது ஒத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது. அவன் மிக உயர்ந்த நிலையில் இருந்தான், உயர்ந்த குடியில் பிறந்து இருந்தான், மேலும் பல விஷயங்களில் மிகத் தேர்ந்தவன் அவன் சொல்கிறான், இது நடைமுறைக்கு ஒத்துவராது என்று. புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அர்ஜுனருடன் ஒப்பிடும்போது, நாம் யார் ? இந்த முறையை நாம் முயற்சி செய்தால் , அது சாத்தியமல்ல . நிச்சயம் தோல்வியே. பொருளுரையை படியுங்கள் .
விஷ்ணுஜன : பகவான் கிருஷ்ணரால் அர்ஜுனனிடம் விவரிக்கப்பட்ட யோகமுறை, இயலாததாகக் கருதி அர்ஜூனனால் நிராகரிக்கப் படுகிறது.
பிரபுபாதா : ஆம் , அர்ஜுனனால் நிராகரிக்கப் படுகிறது.
விஷ்ணுஜன : நிராகரிக்கப் படுகிறது. ஒரு சாதாரண மனிதன் வீட்டை விட்டு வெளியேறி மலையிலோ காட்டிலோ உள்ள தனி இடத்திற்கு சென்று யோகா பயிற்சி செய்வது என்பது இக் கலியுகத்தில் இயலாத காரியம். தற்போதைய யுகத்தில் குன்றிய ஆயுளை கழிப்பதே கடும் போராட்டமாக விளங்குகிறது.
பிரபுபாதா: ஆம், முதலில் , நமது ஆயுள் மிகக் குறைவாகவே உள்ளது. புள்ளிவிவரங்களில் பார்த்தீர்களானால், உங்கள் மூதாதையர்கள் 100 ஆண்டுகள் அல்லது 80, 90 ஆண்டுகள் வாழ்ந்ததை காணலாம். இப்போது அறுபது எழுபது வயதில் மக்கள் இறக்கின்றார்கள். மெல்ல மெல்ல இது குறையும் இந்த யுகத்தில் ஞாபக சக்தி , ஆயுள், கருணை, என பல விஷயங்கள் குறையும். இவையே கலியுகத்தின் அறிகுறிகள்