TA/Prabhupada 0685 – பக்தியோகத்தின் உடனடி முடிவு – தன்னையறிதலும், இதே வாழ்வில் விடுதலை அடைவதுமாகும்



Lecture on BG 6.30-34 -- Los Angeles, February 19, 1969

விஷ்ணுஜன : எளிமையான , நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய தன்னுணர்வு பயிற்சிகளிலேயே மக்களுக்கு அக்கறை இல்லாத போது, வாழும் முறை , அமரும் விதம் , இடத்தேர்வு , ஜட ஈடுபாடுகளில் இருந்து விடுபட்ட மனம் , போன்ற வழிகளைக் கொண்ட கடினமான யோக முறையைப் பற்றிக் கேட்பானேன்? நடைமுறையை உணர்ந்த மனிதன் என்ற முறையில் இந்த யோக முறையை பின்பற்றுவது அசாத்தியமாக கருதினான் அர்ஜுனன்.

பிரபுபாதா: அவன், வெறுமனே சில உடற்பயிற்சிகளை மட்டும் செய்துவிட்டு ஒரு போலி யோகி ஆவதற்கு அவன் தயாராக இல்லை. அவன் ஏமாற்றுக்காரனல்ல. நான் ஒரு குடும்பஸ்தன், நான் ஒரு போர் வீரன் , எனவே , இது எனக்கு சாத்தியமல்ல என்றே கூறுகிறான். அவன் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறான். தன்னால் இயலாத ஒன்றை ஏற்றுக்கொள்ளவில்லை. அது வீண் வேலை . ஏன் ஒருவன் அதை செய்ய வேண்டும்? தொடர்ந்து படிக்கவும்.

விஷ்ணுஜன : அரச குடும்பத்தை சேர்ந்தவனான அவன், பல நற்குணங்களை உடையவன், அவன் மாபெரும் போர்வீரன் நீண்ட வாழ்நாளை உடையவன்.

பிரபுபாதா: ஆம் . வாழ்நாள் , இதுவும் ஒரு விஷயம் தான். ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு , அர்ஜுனன் வாழ்ந்த காலத்தில் , வாழ்நாள் மிக மிக நீண்டதாக இருந்தது . மக்கள் ஆயிரம் ஆண்டு காலம் வாழ்ந்தனர் . தற்காலத்தில் ஒருவருடைய சராசரி வாழ்நாள் 100 வயது என்பதைப்போல, துவாபரயுகத்தில் சராசரி வாழ்நாள் ஆயிரம் வருடங்களாக இருந்தது . அதற்கு முன்பு திரேதாயுகத்தில் சராசரி வாழ் நாள் 10 ஆயிரம் ஆண்டுகளாக இருந்தது . மேலும் அதற்கு முன்பாக சத்ய யுகத்தில் சராசரி வாழ்நாள் ஒரு லட்சம் ஆண்டுகளாக இருந்தது . ஆக , இப்போது வாழ்நாள் குறைந்து கொண்டிருக்கிறது . ஆக , மக்கள் ஆயிரம் ஆண்டு காலம் வாழக்கூடிய ஒரு காலகட்டத்தில் அர்ஜுனன் இருந்திருந்தாலும், அது சாத்தியமற்ற முறை என்றே அவன் நினைத்தான். தொடர்ந்து படிக்கவும்.

விஷ்ணுஜன : எல்லாவற்றிற்கும் மேலாக பரமபுருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நெருங்கிய நண்பன். நம்மிடம் தற்போது இருப்பதைவிட 5000 வருடங்களுக்கு முன்பு பன்மடங்கு வசதிகளைப் பெற்றிருந்தும் , அர்ஜுனன் இந்த யோக முறையை ஏற்க மறுத்தான் .

பிரபுபாதா : இந்த யோகமுறை , அஷ்டாங்க யோகம் , ஆம்.

விஷ்ணுஜன : உண்மையில் அவன் இந்த யோக முறையை பயிற்சி செய்ததாக நாம் சரித்திரத்தில் காணமுடிவதில்லை. எனவே இக்கலியுகத்தில் இம்முறை பொதுவாக அசாத்தியமானதாக கருதப்பட வேண்டும். சில குறிப்பிட்ட விசேஷமான மனிதர்களுக்கு வேண்டுமானால் இது சாத்தியமாகலாம் ஆனால் சாதாரண மக்களுக்கு இது இயலாத காரியமாகும் . 5000 வருடங்களுக்கு முன்பே இந்நிலை என்றால் தற்காலத்தை பற்றி கேட்கவும் வேண்டுமோ? பெயரளவு மையங்களிலும் , சங்கத்திலும் இந்த யோகப் பயிற்சியை நகல் செய்பவர்கள், வசதியுடையவராயினும், காலத்தை வீணடிப்பவர்களே . அவர்கள் , உண்மையான குறிக்கோளை சற்றும் அறியாதவர்களாக உள்ளனர்

பிரபுபாதா : ஆம் . எனவே இந்த அஷ்டாங்க யோக முறை சாத்தியமல்ல. எனவே , இந்த யோக முறை , பக்தி யோக முறை , எல்லோருக்கும் பொருந்தக் கூடியது . இந்த பக்தி யோக முறையில், கீர்த்தனையின் போது , சிறு குழந்தைகளும் கை தட்டுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பார்த்திருக்கிறீர்களா? எந்தப் பயிற்சியும் இல்லாமல் , எந்தக் கல்வியும் இல்லாமல் , தன்னிச்சையாக அவன் பங்கு கொள்கிறான் . எனவே தான் , பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு , இந்த யுகத்திற்கான ஒரே யோகமுறை இதுவே என்று கூறியிருக்கிறார். ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாம ஏவ கேவலம் (சை. சரி ஆதி 17.21) ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கலௌ, இந்த கலியுகத்தில், கலௌ நாஸ்த்யேவ, நாஸ்த்யேவ. நாஸ்த்யேவ: வேறு வழி இல்லை , வேறு வழி இல்லை , வேறு வழி இல்லை . நீங்கள் இந்த முறையை கடைப்பிடிக்கிறார்களானால் , இந்த பக்தி யோக முறை மிக எளிமையானது, எளிமையான மந்திர ஜபம் . உடனடியாக பலனை காண்பீர்கள் . ப்ரத்யக்ஷாவக3மம்' த4ர்ம்யம். மற்ற யோக முறைகளை நீங்கள் பயிற்சி செய்தால் , நீங்கள் இருளில் இருக்கிறீர்கள். எந்த அளவுக்கு நீங்கள் முன்னேறுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் . ஆனால் இந்த யோக முறையில் , "ஆம் , நான் இந்த வகையில் முன்னேறிக் கொண்டிருக்கிறேன் " என்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இந்த யோகா முறை , பக்தியோகப் பயிற்சி முறை மட்டும்தான் சீக்கிரமாக பலன் கொடுக்கும் முக்தியையும் தன்னுணர்வினையும் இந்த ஒரே வாழ்விலேயே அடையலாம் . இன்னொரு பிறப்பிற்காக காத்திருக்கத் தேவையில்லை. இந்த கிருஷ்ண உணர்வு மிகவும் அருமையானது. தொடர்ந்து படிக்கவும்.