TA/Prabhupada 0258 - நிர்மாணப்படி நாம் எல்லோரும் சேவகர்கள்
Lecture -- Seattle, September 27, 1968
வங்காளத்தில் ஒரு நல்ல பழமொழி இருக்கிறது, கிருஷ்ண புலியா ஜீவ போக வாஞ்சா கரே பாஸாதே மாயா தாரே ஜாபடியா தரே. எப்பொழுது நம் உண்மையான உணர்வு, பௌதிக இன்பத்தின் உணர்வால் சீர்கெட்டுப் போகிறதோ, அதாவது "நான் இந்த பௌதிக வளங்களை அடக்கி ஆள வேண்டும்..." இப்படி நாம் நமது உணர்வைத் திருப்பிய உடனேயே, நம் பிரச்சனைகள் தொடங்கிவிடுகின்றன. உடனேயே மாயா. இந்த குறிப்பிட்ட உணர்வு, அதாவது "இந்த பௌதிக உலகை என்னால் இயன்ற வரை அனுபவிக்க முடியும்..." ஒவ்வொருவரும் இதைச் செய்ய முயல்கின்றனர். நாம் ஒவ்வொருவரும், சிறு எறும்பிலிருந்து, மீஉயர்ந்த உயிர்வாழியான ப்ரஹ்ம தேவர் வரை, அனைவரும் ஒரு எஜமான் ஆக முயற்சி செய்கிறோம். உதாரணத்திற்கு, சமீபத்தில் உங்கள் நாட்டின் ஜனாதிபதி ஆவதற்கு பலரும் பிரசாரம் செய்து வந்தார்கள். ஏன்? அதே கருத்து தான். எல்லோரும் ஏதோ ஒரு வகையில் எஜமான் ஆக ஆசைப்படுகிறார்கள். இது தான் மாயை. நம் கிருஷ்ண பக்தி இயக்கம் இதற்கு நேர்மாறானது. நாங்கள் கிருஷ்ணரின் சேவகரின் சேவகரின் சேவகரின் சேவகன் ஆக மட்டுமே முயற்சி செய்கிறோம். அப்படியே நேர்மாறாக. எஜமான் ஆவதற்கு பதிலாக, நாங்கள் கிருஷ்ணரின் அடியவருக்கு தொண்டராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். கோபி-பர்த்துஹு பத-கமலயோர் தாஸ-தாசானுதாசஹ (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 13.80). ஆக இந்த நவீன நாகரிகத்தின் போக்கில், மக்கள் இதை அடிமை மனப்பான்மை என்று அழைக்கலாம். இது நல்ல யோசனை. "நான் ஏன் ஒரு அடிமை ஆக வேண்டும்? நான் எஜமான் ஆவேன்." ஆனால், "நான் எஜமான் ஆக வேண்டும்," என்ற இந்த மனப்பான்மை தான், ஒருவரின் துன்பத்திற்குக் காரணம் என்பதை நாம் உணருவதில்லை. இந்த தத்துவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் நமது ஸ்வரூப நிலையில் நாம் அனைவரும் சேவகர்களே. இந்த பௌதிக உலகின் எஜமான் ஆவேன் என்ற பெயரில் நாம் நம் புலன்களுக்கு அடிமைகளாக மாறிவிட்டோம். ஏனென்றால் ஸ்வரூப நிலையிலும் நாம் சேவகர்கள் தானே. நம்மால் சேவை செய்யாமல் இருக்கவே முடியாது. இந்த கூட்டத்தில் அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரும் சேவகரே. இப்போது, கிருஷ்ண பக்தியை மேற்கொண்டிருக்கும் இந்தச் சிறுவர்கள், கிருஷ்ணரின் சேவர்கர்கள் ஆக ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே அவர்களின் பிரச்சனை தீர்ந்துவிட்டது. ஆனால் "நான் ஏன் இறைவனுக்கோ அல்லது ஒரு சுவாமியாருக்கோ சேவகன் ஆக வேண்டும்? நான் எஜமான் ஆகிவிடுவேன் ..." என்று மற்றவர்கள் சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் உண்மையில் அவனால் ஒருபோதும் எஜமான் ஆக முடியாது. அவர் தன் புலன்களின் சேவகன், அவ்வளவு தான். சற்று புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். சேவகனாகத் தான் அவனால் இருக்க முடியும், ஆனால் அவன் தன் காமத்தின் சேவகன், தனது ஆசைப் பெருக்கின் சேவகன், தனது பேராசையின் சேவகன், தனது கோபத்தின் சேவகன், பல விஷயங்களுக்கும் சேவகன். காமாதீனாம் கடி ந கடிதா பாலித துர்நிதேஷாஹ. அதைவிட ஒருபடி மேம்பட்ட உணர்வின் நிலையில், ஒருவர் மனித இனத்தின் சேவகராக மாறிவிடுகிறார், மற்றொருவர் சமூகத்தின் சேவகராக மாறிவிடுகிறார், இன்னும் ஒருவரோ நாட்டின் சேவகராக மாறிவிடுகிறார், ஆனால் உண்மையான நோக்கம் என்னவோ "நான் எஜமான் ஆக வேண்டும்," என்பது தான். அந்த நோய் உள்ளத்தில் இருக்கிறது. ஜனாதிபதியாகப் போட்டியிடும் வேட்பாளர்கள், "நான் மிகச்சிறப்பாக நாட்டிற்காக பணி புரிவேன். எனக்கு உங்கள் வாக்கை அளியுங்கள்," இப்படி தங்களது வெவ்வேறு கொள்கைகளை முன்வைக்கிறார்கள். ஆனால் "எப்படியோ, நான் இந்த நாட்டின் தலைவன் ஆக வேண்டும்," என்பது தான் அவர்களின் உண்மையான எண்ணம். ஆக இது தான் மாயா (மாயை). ஆக இந்த எளிதான தத்துவத்தை நாம் புரிந்து கொண்டால், அதாவது ஸ்வரூப நிலையில் நான் ஒரு சேவகன்... அதில் எந்த சந்தேகமும் இல்லை. "நான் சுதந்திரமானவன், நான் எஜமான்," என்று யாராலும் சொல்ல முடியாது. யாராலும் சொல்ல முடியாது. அப்படி அவன் நினைத்தால், அது மாயா (மாயை). அது பொய்.