TA/Prabhupada 0259 - கிருஷ்ணரின் பால் அன்பு செலுத்தும் ஆன்மீக தளத்திற்கு மீண்டும் அமர்த்தப்படுவோம்



Lecture -- Seattle, September 27, 1968

இந்த கூட்டத்தில் யாராவது, தான் யாருக்கும், எதற்கும் அடிமை இல்லை என்று சொல்ல முடியுமா? அவன் சேவகனாக இருந்தே ஆக வேண்டும், ஏனென்றால் அது தான் அவனது ஸ்வரூப நிலை. ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால், நம் புலன்களுக்குப் பணிபுரிவதால், நம் பிரச்சனைக்கு, துன்பங்களுக்கு எந்த தீர்வும் கிடைக்காது. தற்போதைக்கு, நான் இந்த போதையை எடுத்துக்கொண்டேன் என்ற திருப்தி கிடைக்கலாம், மேலும் அந்த போதையின் பிடியில், "நான் யாருடைய அடிமையும் இல்லை. நான் சுதந்திரமானவன்," என்று நினைக்கலாம். ஆனால் அது செயற்கையானது. அந்த மாயத்தோற்றம் மறைந்தவுடன், அவன் மீண்டும் அதே நிலைக்கு வந்துவிடுகிறான், மீண்டும் அடிமையாகிவிடுகிறான். மீண்டும் சேவகன். ஆக இது தான் நம் நிலை. ஆனால் ஏன் இந்தப் போராட்டம்? நான் சேவை செய்யும் கட்டாயத்தில் தள்ளப்படுகிறேன், ஆனால் நான் சேவை செய்ய விரும்பவில்லை. இதை எப்படி ஈடு செய்வது? கிருஷ்ண பக்தி மூலம் தான் ஈடு செய்ய முடியும், அதாவது நீங்கள் கிருஷ்ணரின் சேவகன் ஆகிவிட்டால், பின்னர் எஜமான் ஆகவேண்டும் என்ற உங்கள் ஆசையும், அதே நேரத்தில் உங்களது சுதந்திர வேட்கையும் உடனடியாக நிறைவேறிவிடுகிறது. எடுத்துக்காட்டாக, இங்கு நீங்கள் அர்ஜூனன் மற்றும் கிருஷ்ணரின் ஒரு படத்தைப் பார்க்கிறீர்கள். கிருஷ்ணர், முழுமுதற் கடவுள். அர்ஜுனர் ஒரு உயிர்வாழி, ஒரு மனிதன், ஆனால் கிருஷ்ணரின்மீது ஒரு நண்பனாக அன்பு வைத்திருக்கிறார். அவரது நட்பெனும் அன்பிற்கு கைமாறாக, கிருஷ்ணர் அவரது சாரதியாக, அவருடைய சேவகனாக மாறிவிட்டார். அதுபோலவே, நாம் ஒவ்வொருவரும், கிருஷ்ணரின்மீதான திவ்யமான அன்பின் தளத்தில் மீண்டும் நிலைப் பெற்றால், பிறகு எஜமான் ஆகும் நம் ஆசை நிறைவேறும். அது தற்போது யாருக்கும் தெரிவதில்லை, ஆனால் நாம் கிருஷ்ணருக்குச் சேவை செய்ய ஒப்புக்கொண்டால், பின்னர் காலபோக்கில் கிருஷ்ணர், நமக்கே பணி புரிவதை நம்மால் பார்க்க முடியும். அது உணர்த்தலை சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால் நாம் இந்த பௌதிக உலகின் சேவையிலிருந்து, புலன்களின் சேவையிலிருந்து, விடுபட விரும்பினால், நம் சேவை மனப்பான்மையை கிருஷ்ணரிடம் திருப்ப வேண்டும். இது தான் கிருஷ்ண பக்தி உணர்வு. காமாதீனாம் கடி ந கடிதா பாலிதா துர்நிதேஷாஸ் தேஷாம் மயி ந கருணா ஜாதா ந த்ரபா நோபஷாந்திஹி சாம்ப்ரதாம் அஹம் லப்த-புத்திஸ் த்வம் ஆயாதஹ நியுங்க்ஷ்வாத்மா-தாஸ்யே. ஒரு பக்தர் கிருஷ்ணரிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்கிறார், "இவ்வளவு நாட்கள், என் வாழ்வில், நான் என்னுடைய புலன்களுக்கு சேவை செய்து வந்தேன்." காமாதீனாம். காம என்றால் புலன்கள், காமம். "ஆக நான் எதைச் செய்திருக்க கூடாதோ, அதையும், காமத்தின் தூண்டுதலால் செய்துவிட்டேன்". அவனுக்கு அதை செய்தே தீர வேண்டும் என்ற ஆசை எழும்புகிறது. ஒருவன் அடிமையாக இருக்கும் போது, தான் செய்ய விரும்பாததையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். அவன் அந்த நிலைக்கு தள்ளப்படுகிறான். ஆக இங்கே, ஒரு பக்தர் ஒப்புக்கொள்கிறார், அதாவது " நான் என் காமத்தின் தூண்டுதலால் செய்துவிட்டேன், செய்யக் கூடாத ஒரு விஷயம், ஆனால் நான் செய்துவிட்டேன்." சரி, நீங்கள் செய்துவிட்டீர்கள், உங்கள் புலன்களுக்குப் பணிபுரிகிறீர்கள். அது பரவாயில்லை. "ஆனால் பிரச்சனை என்னவென்றால், தேஷாம் கருணா ந ஜாதா ந த்ரபா நோபஷாந்திஹி. நான் இவ்வளவு சேவை செய்தபிறகும், அவை திருப்தி அடையவில்லை என்பதை நான் பார்க்கிறேன். அவை திருப்தி அடையவில்லை. அது தான் என் பிரச்சனை. புலன்களுக்கும் திருப்தி இல்லை, எனக்கும் திருப்தி இல்லை, புலன்களுக்கும் எனக்கு என் பணியிலிருந்து ஓய்வு வழங்குவதற்குக் கூட கருணையும் இல்லை. அது தான் என் நிலைமை." மாறாக, நான் இவ்வாறு உணர்ந்திருந்தால், அதாவது "நான் பல ஆண்டுகளாக என் புலன்களுக்குச் சேவை செய்திருக்கிறேன், இப்போது என் புலன்கள் திருப்தி அடைந்துவிட்டன...” ஆனால் அப்படி இல்லை. அவை திருப்தி அடையவில்லை. இன்னுமும் எனக்கு ஆணை இடுகின்றன. இன்னும் தூண்டுகின்றன. "நான் மிகவும்..." அது இயற்கையான விஷயம் தான், ஆனால் நான் ஒன்றை வெளிப்படுத்த விரும்புகிறேன், அதாவது என் மாணவர்கள் சிலர், அவரது தாயார், வயதான காலத்தில், திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறினர். பாருங்கள். அவளுக்கு தோளுக்கு மேல் வளர்ந்த குழந்தைகள் இருக்கின்றனர். தம் பாட்டியும் கூடத் திருமணம் செய்து கொண்டதாக மேலும் யாரோ ஒருவர் முறையிட்டார். ஏன்? எழுபத்து ஐந்து வயதில், ஐம்பது வயதில், புலன்கள் இன்னும் வலுவாக இருக்கின்றன. அவள் அந்த வயதிலும் தூண்டப்படுகிறாள்: "ஆம், நீ அதைச் செய்தே ஆக வேண்டும்."