TA/Prabhupada 0284 - கீழ்ப்படிவதே நம் இயல்பு

Revision as of 19:02, 29 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture -- Seattle, September 30, 1968

ஆக இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மிகவும் எளிதானது. இது குறிப்பாக பகவான் சைதன்ய மஹாபிரபுவால் துவக்கிவைக்கப்பட்டது. இதன் கருத்து, வேத நூல்களில் இருக்கும் அதே பழமையான கருத்து என்றாலும், வரலாற்று ரீதியாக பார்த்தால், இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது பகவான் கிருஷ்ணர், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன், இந்த பூமியில் தோன்றிய முதல் நடந்துவருகிறது, மேலும் அதன் பிறகு, பகவான் சைதன்யர், ஐநூறு வருடங்களுக்கு முன், இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை விரிவுபடுத்தினார். அவருடைய நோக்கம், பகவான் சைதன்யரின் திட்டம் என்னவென்றால், ஆராத்யோ பகவான் வ்ரஜேஷ-தனய:. நீங்கள் கிருஷ்ணரை நேசிக்க விரும்பினால், அதாவது நீங்கள் கீழ்ப்படிந்து இருக்க விரும்பினால்... எல்லோரும் கீழ்ப்படிந்து தான் இருக்கிறோம். எல்லோரும் சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்கள், ஆனால் யாரும் சுதந்திரமாக இல்லை. எல்லோரும் யாரோ ஒருவருக்கு கீழ்ப்படிந்தவர்கள் தான். "நான் சுதந்திரமானவன்," என்று யாராலும் கூற முடியாது. உங்களால் கூற முடியுமா, உங்களில் ஒருவராவது, நீங்கள் சுதந்திரமானவர்கள் என்று சொல்ல முடியுமா ? அப்படி யாராவது உண்டா ? இல்லை. எல்லோரும் கீழ்ப்படிந்தவர்கள் தான், விருப்பப்பட்டு கீழ்ப்படிகிறோம். கட்டாயத்தால் அல்ல. எல்லோரும் சம்மதத்துடன் கீழ்ப்படிகிறோம். ஒரு பெண் ஒரு பையனிடம் , " நான் உனக்கு கீழ்ப்படிய விரும்புகிறேன்," என்று தானே விருப்பப்பட்டு கூறுகிறாள். அதேபோலவே அந்த பையனும் பெண்ணிடம் கூறுகிறான், "நான் உனக்கு அடிமை ஆக விரும்புகிறேன்." ஏன்? அதுதான் என் இயல்பு. நான் கீழ்ப்படிய விரும்புவது ஏனென்றால், கீழ்ப்படிவது என் இயல்பு. ஆனால் அதை நான் உணருவதில்லை. வாஸ்தவத்தில் நான், ஓரிடத்தில் கீழ்ப்படிதலை நிராகரித்து, மற்றொரு இடத்தில் கீழ்ப்படிய ஒப்புக் கொள்கிறேன். அவ்வளவு தான். ஆனால் கீழ்ப்படிதல் என்பது இருக்கத்த் தான் செய்யும். ஒரு ஊழியனைப் போல் தான். அவன் ஓரிடத்தில் வேலை செய்கிறான். மற்றொரு இடத்தில் இன்னும் நல்ல சம்பளம் கிடைத்தால், அவன் அங்கு செல்கிறான். ஆனால் அவன் சுதந்திரம் பெற்றதாக அர்த்தம் ஆகாது. அவன் இன்னுமும் கீழ்ப்படிந்தவன் தான். ஆக பகவான் சைதன்யர் கற்பிப்பது என்னவென்றால், நீங்கள் ஒருவரிடம் கீழ்ப்படிய விரும்பினால் அல்லது யாரையாவது வழிபட விரும்பினால்... எப்பேர்ப்பட்ட ஒருவரை, ஒருவன் வழிபட விரும்புவான்? ஒருவர் உங்களைவிட சிறந்தவர் என்று நீங்கள் நினைத்தால் ஒழிய, ஏன் நீங்கள் அவரை வணங்குவீர்கள் ? நான் என் முதலாளியை வணங்குகிறேன், ஏனென்றால் அவர் என்னைவிட மேன்மை வாய்ந்தவர் என்று நான் நினைக்கிறேன். அவர் எனக்கு கூலி, சம்பளம், மாதந்தோறும் அறுநூறு டாலர் கொடுக்கிறார். ஆகையினால் நான் அவரை வணங்க வேண்டும், நான் அவரை திருப்திபடுத்த வேண்டும்.

ஆகையால் சைதன்ய மஹாபிரபு கூறுவது என்னவென்றால், நீ கிருஷ்ணரிடம் கீழ்ப்படிய வேண்டும். ஆராத்யோ பகவான் வ்ரஜெஷ-தனய: நீங்கள் வழிபட விரும்பினால், கிருஷ்ணரை வழிபடுங்கள். மேலும் அடுத்து, தத்-தாமம் வ்ருந்தாவனம். நீங்கள் யாரையாவது வணங்க விரும்பினால், கிருஷ்ணரை நேசியுங்கள், அதாவது கிருஷ்ணரை வழிபடுங்கள், அல்லது அவருடை இருப்பிடமான வ்ருந்தாவனத்தை வழிபடுங்கள். ஏனென்றால் ஒவ்வொருவரும் ஏதோவொரு இடத்தை நேசிக்க விரும்புவார்கள். அது இப்போது நாட்டுப்பற்று என்றழைக்கப்படுகிறது - ஏதோவொரு நாடு. ஒருவர் கூறுகிறார், " நான் இந்த அமெரிக்க நிலத்தை நேசிக்கிறேன்." வேறொருவர் , "நான் இந்த சீன மண்ணை நேசிக்கிறேன்," என்பார். இன்னொருவர், " நான் இந்த ரஷ்ய நாட்டை நேசிக்கிறேன்," என்பார். ஆக எல்லோரும் ஏதோவொரு நிலத்தை நேசிக்க விரும்புகிறார்கள். பௌம இஜ்ய-தீஹி. பௌம இஜ்ய-தீஹி. மக்களுக்கு இயற்கையாகவே ஏதோவொரு பௌதிக நிலத்தை நேசிக்க நாட்டம் இருக்கும். பொதுவாக, ஒருவன் எங்கு பிறந்தானோ அந்த இடத்தை அவன் நேசிப்பான். சைதன்ய மஹாபிரபு கூறினார், "உங்களுக்கு யாராவது ஒரு நபரை நேசிக்கும் நாட்டம் இருப்பதால், நீங்கள் கிருஷ்ணரை நேசியுங்கள். நீங்கள் ஏதோவொரு நிலத்தை நேசிக்க விரும்புவதால், நீங்கள் வ்ருந்தாவனத்தை நேசியுங்கள்." ஆராத்யோ பகவான் வ்ரஜேஷ-தனயஸ் தத்-தாம வ்ருந்தாவனம். ஆனால் யாராவது, "கிருஷ்ணரை எப்படி நேசிப்பது? என்னால் கிருஷ்ணரை பார்க்க முடியவில்லையே. கிருஷ்ணரை எவ்வாறு நேசிப்பது?" என்று கேட்டால், அதற்கு சைதன்ய மஹாபிரபு கூறுகிறார், ரம்யா காசித் உபாசனா வ்ரஜவதூ-வர்கெண யா கல்பிதா. கிருஷ்ணரை வழிபடும் முறையை, அவரிடம் அன்பை செலுத்துவது எப்படி என்பதை நீங்கள் கற்க விரும்பினால், கோபியர்களின் அடிச்சுவடுகளை பின்பற்ற முயன்றால் போதும். கோபியர்கள். கோபியர்களின் அன்பு - அன்பின் மீஉயர்ந்த பக்குவ நிலை. ரம்யா காசித் உபாஸனா. இந்த உலகில் வழிபாட்டின், அதாவது அன்பின் பல வகைகள் உள்ளன. தொடக்க நிலையில், "கடவுளே, எங்களுக்கு அன்றாட உணவை கொடுங்கள்." இதுதான் ஆரம்பம். கடவுளிடம் அன்பை செலுத்த கற்கும் ஆரம்ப நிலையில், "நீங்கள் கோயிலுக்குச் செல்லுங்கள், சர்ச்சுக்கு செல்லுங்கள், கடவுளிடம் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற பிரார்த்தனை செய்யுங்கள்," என்று அறிவுரை வழங்கப்படும். அதுதான் ஆரம்பம். ஆனால் அது தூய்மையான அன்பல்ல. தூய்மையான அன்பின் பக்குவ நிலையை, கோபியர்களில் காணலாம். அதுதான் உதாரணம்.

எப்படி ? அவர்கள் கிருஷ்ணரை எப்படி நேசிக்கிறார்கள்? அவர்கள் கிருஷ்ணரை எப்படி நேசிக்கிறார்கள் என்றால்... கிருஷ்ணர் ஒரு மாட்டிடைய சிறுவனாக இருத்தார். அவர் தனது நண்பர்களுடன், மற்ற மாட்டிடைய சிறுவர்களுடன், மாடுகளை மேய்க்க நாள் முழுவதும் செல்வது வழக்கம். அதுதான் வாழ்வாதாரமாக இருந்தது. ஏனென்றால் அந்த காலத்தில், மக்கள், நிலத்தையும் பசுக்களையும் வைத்து திருப்தியாக இருந்தார்கள், அவ்வளவு தான். அனைத்து பொருளாதார பிரச்சனைகளுக்கும் அதுதான் தீர்வு. அவர்கள் தொழிற்சாலைகளை கட்டவில்லை, அவர்கள் யாருக்கும் கூலிக்கு வேலை செய்யவில்லை. வெறும் நிலத்தில் விளைச்சதையும், பசுக்களிடமிருந்து கறந்த பாலையும் பெற்றுக்கொண்டாலே, சாப்பாட்டு பிரச்சனையே முற்றிலும் தீர்ந்துவிடும்.