TA/Prabhupada 0393 - நிதாய் குண மணி ஆமார பொருள்விளக்கம்
Purport to Nitai Guna Mani Amara
இது லோசன தாச தாக்குரால் பாடப்பட்ட ஒரு பாடல். இவர் கிட்டத்தட்ட பகவான் சைதன்ய மஹாப்ரபுவின் சமகாலத்தினர். அவர் பகவான் சைதன்ய மஹாப்ரபுவின் வாழ்க்கை மற்றும் அவரது போதனைகளை பல புத்தகங்களாக தொகுத்திருக்கிறார். அவர் கூறுகிறார், நித்யானந்த பகவான் நற்குணங்களால் நிறைந்தவர், குண-மணி. குண-மணி என்றால் எல்லா சிறப்பு குணங்களும் கொண்ட ஒரு ரத்தினம். ஆக நிதாய் குண-மணி ஆமார நிதாய் குண-மணி. அவர் மறுமுறையும் கூறுகிறார், பகவான் நித்யானந்தர் அனைத்து நற்குணங்களின் இருப்பிடமாக விளங்குகிறார். ஆனியா ப்ரேமேர வன்யா பாஸாய்லோ அவானீ. மேலும் தனது தைவீக குணங்களால், அவர், முழு உலகத்தையும் இறைவனின்மீதான அன்பு வெள்ளத்தில் மூழ்கச் செய்தார். இறைவனின்மீதான அன்பு என்றால் என்ன, என்பதை அவர் கருணையால் தான் மக்களால் உணரமுடிகிறது. ப்ரேமேர வன்யா லொய்யா நிதாய் ஆய்லா கௌட-தேஷே. சைதன்ய மஹாப்ரபு வீட்டை விட்டு சன்னியாசம் ஏற்றபோது, அவர் ஜகன்நாத புரியை தன் தலைமையகமாக வைத்திருந்தார். அவர் சன்னியாசத்தை எற்றவுடன், தனது வீட்டையும் நாட்டையும் விட்டுச் சென்றபொழுது, பகவான் நித்யானந்தரும் அவருடன் ஜகன்நாத புரி வரை சென்றார். சில நாட்களுக்கு பிறகு, பகவான் சைதன்யர் அவரிடம் கேட்டுக் கொண்டார், "நாம் இருவரும் இங்கு இருந்தால், வங்காளத்தில் யார் பிரசாரம் செய்வது?" வங்காளம் என்பது கௌட-தேசம் என்று அழைக்கப்படுகிறது. ஆக பகவான் சைதன்ய மஹாப்ரபுவின் உத்தரவால், அவர் (நித்யானந்தர்) அவரிடமிருந்து (சைதன்யரிடமிருந்து) இறைவன் மீதான அன்பு வெள்ளத்தை கொண்டு வந்தார். அதை வங்காளம், அதாவது கௌட-தேசம் முழுவதிலும் பரப்பினார். மேலும் இறைவன்மீதான அந்த அன்பு வெள்ளத்தில், பக்தர்கள் அனைவரும் மூழ்கினார். பக்தராக இல்லாதவர்களால் மட்டும் மூழ்க முடியவில்லை, ஆனால் அவர்கள் மிதந்து கிடந்தார்கள், தீன ஹீன பாசெ. ஆனால் நித்யானந்த பிரபுவை பொறுத்தவரை, அவர், பக்தர்கள், பக்தர் இல்லாதவர்கள் என்று பாரபட்சம் பார்க்கவில்லை. தீன ஹீன பதித பாமர நாஹி பாசெ. ஏழையோ, பணக்காரனோ, ஞானியோ, முட்டாளோ, அனைவருக்கும் பகவான் சைதன்ய மஹாப்ரபுவின் போதனையை ஏற்று, இறைவனின்மீதான அன்பு பெருங்கடலில் மூழ்க வாய்ப்பு இருந்தது. இறைவன்மீதான இப்பேர்பட்ட அன்பு, ப்ரம்மார் துர்லப. அதாவது, இந்த பிரம்மாண்டத்தின் மீயுயர்ந்த ஆசாரியரான பிரம்ம தேவரும் அதை சுவைக்கமுடியவில்லை. ஆனால் பகவான் சைதன்ய மஹாப்ரபு மற்றும் பகவான் நித்யானந்த பிரபுவின் அனுகிரகத்தால், இறைவன் மீதான இந்த அன்பு, அனைவருக்கும் பாரபட்சமில்லாமல் விநியோகிக்கப்பட்டது. ஆக ஆபத்த கருணா-ஸிந்து, எல்லா திசைகளிலிருந்தும் சூழ்ந்த ஒரு பெருங்கடலை போல் அது இருந்தது. இறைவன்மீதான அன்புக் கடல் என்பது ஒரு மிகப்பெரிய பெருங்கடல், ஆனால் அதில் அனைத்தும் மூழ்கியதல்ல. ஆகையால் நித்யானந்த பிரபு அந்த கடலிலிருந்து ஒரு வாய்க்காலை வெட்டி, ஒவ்வொரு வாசப்படிக்கும் அதை கொண்டு வந்தார். கரே கரே புலே ப்ரேம-அமியார பான. இவ்வாறு, இறைவன்மீதான அன்பு தேன் வெள்ளம், வங்காளத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் விநியோகிக்கப்பட்டது. உண்மையில், பகவான் சைதன்ய மஹாப்ரபு மற்றும் பகவான் நித்யானந்த பிரபுவைப் பற்றிய பேச்சு எழும்பும் பொழுது, இன்றைக்கும் வங்காளம் மகிழ்ச்சியால் நிரம்பி போகிறது. லோசன போலெ, இங்கு இதை எழுதியவர் தன் சார்பில் கூறுகிறார், யாரொருவன் பகவான் நித்யானந்த பிரபுவால் வழங்கப்பட்ட இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லையோ, அவன் தெரிந்தே தற்கொலை செய்வதாக அவர் கருதுகிறார்.