TA/Prabhupada 0398 - ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய பிரபு பொருள்விளக்கம்
Purport to Sri Krsna Caitanya Prabhu -- Los Angeles, January 11, 1969
ஸ்ரீ-க்ருஷ்ண-சைதன்ய ப்ரபு தொயா கொரொ மொரே, தோமா பினா கே தொயாலு ஜகத-மாயாரே. இது நரோத்தம தாச தாகுரால் எழுதப்பட்ட ஒரு பாடல். அவர் பகவான் சைதன்யர் இடம் வேண்டுகிறார், "என் அன்பு நாதரே, தயவுசெய்து என்மேல் கருணை காட்டுங்கள், ஏனெனில் இந்த மூன்று லோகங்களில் உங்களைவிட கருணை மிக்கவர் யார் இருக்க முடியும்? இது வாஸ்தவத்தில் உண்மை தான். நரோத்தம தாச தாகுர் மட்டும் அல்ல, ரூப கோஸ்வாமியும், அல்லாஹாபாதில் உள்ள பிரயாகில் பகவான் சைதன்யரை சந்தித்தபோது வேண்டினார்; பகவான் சைதன்யர் மற்றும் ரூப கோஸ்வாமியின் இடையே, பிரயாகத்தில் நடந்த முதல் சந்திப்பில்; ஸ்ரீல ரூப கோஸ்வாமியும் கூறியது என்னவென்றால், "என் அருமை நாதரே, எல்லா அவதாரங்களையும் வைத்துப் பார்த்தால் தாங்கள் தான் உதாரகுணம் மிக்கவர். ஏனென்றால் தாங்கள் கிருஷ்ணரின்மீதான அன்பை, கிருஷ்ண உணர்வை விநியோக்கிறீர்." வேறு விதமாக சொன்னால், கிருஷ்ணரே நேரடியாக இவ்வுலகில் இருந்தபோது, அவர் வெறும் நம்மை சரணடைவதற்கு கேட்டுக்கொண்டார், ஆனால் அவர் தம்மை அவ்வளவு சுலபமாக வழங்கவில்லை. "முதலில் நீ என்னிடம் சரணடைய வேண்டும்." என அவர் நிபந்தனை விதித்தார். ஆனால் இந்த அவதாரத்தில், பகவான் சைதன்யர், அவரே கிருஷ்ணராக இருந்தப்பின்னும், அவர் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. "இதோ கிருஷ்ணரின்மீதான அன்பை ஏற்றுக்கொள்ளுங்கள்." என தாராளமாக விநியோகிக்கிறார். ஆகையால் பகவான் சைதன்யர் அனைத்திலும் கருணை மிக்க அவதாரமாக அங்கீகரிக்கப் படுகிறார். மேலும் நரோத்தம தாச தாகுர் கூறுகிறார், "தயவுசெய்து என்மீது கருணை காட்டுங்கள். தாங்கள் மிகவும் உதாரகுணமுடையவர். ஏனெனில் தாங்கள் இந்த யுகத்தின் தாழ்வடைந்த ஜீவன்களைக் கண்டு, அவர்கள்மீது மிகவும் கருணையுடன் இருக்கிறீர்கள். ஆனால் அவர்களில் நான் தான் எல்லோரைவிட தாழ்வடைந்தவன் என்பதை தாங்கள் தெரிந்து கொள்ளுங்கள். என்னைவிட தாழ்வடைந்தவர் யாருமே கிடையாது. பதித-பாவன-ஹேது தவ அவதார. "தாங்கள் மயக்கத்தில் உள்ள ஜீவன்களை, தாழ்வடைந்த ஜீவன்களை மீட்டெடுப்பதற்காகவே அவதரித்தீர். ஆனால் என்னைவிட தாழ்வடைந்தவர் யாரையும் உங்களால் கண்டுபிடிக்க முடியாது என நான் உறுதியாக கூறுகிறேன். எனவே உங்கள் கருணைக்கு நான் தான் முதலில் ஆளாகவேண்டும். பிறகு அவர் நித்யானந்த பிரபுவிடம் வேண்டுகிறார். அவர் கூறுகிறார், ஹா ஹா ப்ரபு நித்யானந்த, ப்ரேமானந்த ஸுகி. "என் அன்புக்குரிய நித்யானந்தரே, தாங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக தோன்றுகிறீர்கள், தெய்வீக பேரின்பத்தில் இருக்கிறீர்கள். எனவே நான் மிகவும் துன்பத்தில் இருப்பதால் உங்களிடம் வந்திருக்கிறேன். என்மேல் தங்களது திருஷ்டி பட்டால், நானும் அந்த மகிழ்ச்சியை அடையமுடியும். தயவுசெய்து என்னை திரும்பி பாருங்கள். பிறகு அவர் அத்வைத பிரபுவிடம் வேண்டுகிறார்: ஹா ஹா ப்ரபு ஸீதா-பதி அத்வைத கோஸாய். அத்வைத பிரபுவின் மனைவியின் பெயர் ஸீதா. ஆகையால் அவர் சிலசமயங்களில் ஸீதா-பதி என்றழைக்கப்படுவார். ஆக "என் அருமை அத்வைத பிரபுவே, ஸீதா மாதாவின் கணவரே, தயவுசெய்து என்மேல் கருணை காட்டுங்கள். ஏனென்றால், தாங்கள் என்மேல் கருணை காட்டினால், இயல்பாகவே பகவான் சைதன்யர் மற்றும் நித்யானந்தரும் என்மேல் கருணை கொள்வார்கள். அதற்கு காரணம் என்னவென்றால், உண்மையில் பகவான் சைதன்யரை கீழே வரவழைத்தது அத்வைத பிரபு தான். தாழ்வடைந்த ஜீவன்கள் அனைவரும், கிருஷ்ண உணர்வைப் பற்றி எந்த அறிவும் இல்லாமல், புலன் இன்பம் பெறும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு இருப்பதைக் கண்டு, அத்வைத பிரபு, அவர்களுக்காக மிகவும் பரிதாபப்பட்டார். அனைத்து தாழ்வடைந்தோரையும் மீட்க தமக்கு சக்தி இல்லை என அவர் நினைத்தார். ஆகையால் அவர் கிருஷ்ணரிடம் வேண்டினார், "நீரே வரவேண்டும். தாங்கள் இங்கு நேரடியாக இல்லாவிட்டால், தாழ்வடைந்த இந்த அனைத்து ஜீவன்களை மீட்டெடுப்பது சாத்தியம் அல்ல." ஆக அவர் அழைப்பால் தான் பகவான் சைதன்யர் தோன்றினார். "இயற்கையாகவே..." நரோத்தம தாச தாகுர் அத்வைத பிரபுவிடம் வேண்டுகிறார், "தாங்கள் என்மேல் கருணை காட்டினால், இயற்கையாகவே பகவான் சைதன்யர் மற்றும் நித்யானந்தரும் என்மேல் கருணை காட்டுவார்கள்." பிறகு அவர் கோஸ்வாமிகளிடம் வேண்டுகிறார். ஹா ஹா ஸ்வரூப, ஸநாதன, ரூப, ரகுநாத. "என் அன்புக்குரிய கோஸ்வாமி பிரபுக்களே," ஸ்வரூப. ஸ்வரூப தாமோதர் என்பவர் பகவான் சைதன்யரின் நெருங்கிய சேவகர். அவர் எப்போதும் சைதன்ய மஹாபிரபு அருகில் தான் இருப்பார். மற்றும் மஹாபிரபுக்கு தேவையானதை அவர் உடனடியாக ஏற்பாடு செய்து தருவார். ஸ்வரூப தாமோதர் மற்றும் கோவிந்தர், இந்த இரண்டு சேவகர்களும் எப்பொழுதும் சைதன்ய ஆகவே நரோத்தம தாசர் ஸ்வரூப தாமோதரரையும் வேண்டுகிறார். பிறகு கோஸ்வாமிகளை. ஆறு கோஸ்வாமிகளும் பகவான் சைதன்யரின் நேரடி சீடர்கள் ஆவார்: ஸ்ரீ ரூப, ஸ்ரீ ஸனாதன, ஸ்ரீ பட்ட ரகுநாத, ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி, ஜீவ கோஸ்வாமி மற்றும் ரகுநாத தாச கோஸ்வாமி. பகவான் சைதன்யர், இந்த ஆறு கோஸ்வாமிகளை, கிருஷ்ண பக்தி இயக்கத்தை பரப்புவதற்காக நேரடியாக போதித்தார். நரோத்தம தாச தாகுர் அவர்களின் கருணையையும் வேண்டிக் கேட்கிறார். ஆறு கோஸ்வாமிகளுக்கு அடுத்து ஸ்ரீனிவாச ஆச்சாரியார் இருந்தார். ஆக அவர் ஸ்ரீனிவாச ஆச்சாரியாரிடமும் வேண்டுகிறார். உண்மையில், நரோத்தம தாச தாகுர் சீட பரம்பரையில் ஸ்ரீனிவாச ஆச்சாரியாருக்கு அடுத்த தலைமுறையாக இருந்தார். கிட்டத்தட்ட அவர் சமகாலத்தினராகவே இருந்தார். மேலும் ராமசந்திர சக்கரவர்த்தி என்பவர் அவருடைய நெருங்கிய நண்பராக இருந்தார். எனவே, "நான் எப்பொழுதும் ராமசந்திரரின் சகவாசத்தில் இருக்கவேண்டும்." என அவர் வேண்டுகிறார். பக்தரின் சகவாசம். மொத்தத்தில், வழிமுறை என்னவென்றால் நாம் எப்பொழுதும் மூத்த ஆச்சாரியார்களின் கருணைக்காக ஏங்க வேண்டும். மற்றும் தூய பக்தரிடம் சகவாசம் வைத்திருக்க வேண்டும். அப்பொழுது, பகவான் சைதன்யர் மற்றும் கிருஷ்ண பகவானின் கருணையை ஏற்று, கிருஷ்ண உணர்வில் முன்னேறுவது நமக்கு சுலபமாகிவிடும். இதுதான் நரோத்தம தாச தாகுரால் பாடப்பட்ட இந்த பாடலின் சாரம்.