TA/Prabhupada 0400 - ஸ்ரீ ஸ்ரீ ஷிக்ஷாஷ்டகம் பொருள்விளக்கம்
Purport to Sri Sri Siksastakam, CDV 15
சேதோ-தர்பண-மார்ஜனம் பவ-மஹா-தாவாக்னி-நிர்வாபணம் ஸ்ரேய:-கைரவ-சந்ரிகா-விதரணம் வித்யா-வதூ ஜீவனம், ஆனந்தாம்புதி-வர்தனம் ப்ரதி-பதம் பூர்ணாம்ருதாஸ்வாதனம் ஸர்வாத்ம-ஸ்னபனம் பரம் விஜயதே ஸ்ரீ-கிருஷ்ண-ஸங்கீர்தனம். பகவான் சைதன்யர், தன் இயக்கத்தின் கொள்கைகளை எட்டு பதங்களின் வடிவத்தில் வழங்கினார். எட்டு பதங்களில் விளக்கப்பட்ட அந்த கொள்கைகளுக்கு ஷிக்ஷாஷ்டகம் எனப் பெயர். ஷிக்ஷா என்றால் கற்பித்தல், மற்றும் அஷ்டக என்றால் எட்டு. ஆக எட்டு பதங்களில் அவர் தனது கற்பித்தலை உள்ளடக்கியுள்ளார். மற்றும் அவரது அடுத்தபடியான சீடர்களான, ஆறு கோஸ்வாமிகள், பல புத்தகங்களை தொகுத்து அவற்றை விளக்கியிருக்கிறார்கள். இந்த இயக்கத்தின் பொருள், பரம் விஜயதே ஸ்ரீ-க்ருஷ்ண-ஸங்கீர்த்தனம், இவ்வாறு விளங்குகிறது என பகவான் சைதன்யர் கூறுகிறார். ஹரே கிருஷ்ண திருநாம ஜெபத்திற்கே அதாவது இந்த கிருஷ்ண ஸங்கீர்த்தன இயக்கத்திற்கே, எல்லா புகழும் சேரட்டும். முழுமையான புகழ். முழுமையான வெற்றி. அது வெற்றியாக, முழுமையான வெற்றியாக விளங்குவது எப்படி? அதற்கு அவர் விளக்கம் அளிக்கிறார், சேதோ-தர்பண-மார்ஜனம். ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபிப்பதால், இதயத்தில், பௌதிக சீர்கேடால் குவிந்திருக்கும் அழுக்கெல்லாம், அகற்றப்படும். எடுத்துக்காட்டாக அவர் கூறுகிறார், நமது உள்ளம் ஒரு கண்ணாடியை போன்றது. கண்ணாடியின் மேல் ஒரு அழுக்கு குவிந்திருந்தால், ஒருவரால் தன் உண்மையான முகத்தை தெளிவாக கண்ணாடியில் பார்க்கமுடியாது. எனவே, அது சுத்தகரிக்கப்பட வேண்டும். தற்போது நமது கட்டுண்ட வாழ்க்கையில், நம் இதயத்தில் பெரும் அளவில் அழுக்கு குவிந்து கிடக்கிறது. அதற்கு காரணம், நினைவுக்கு எட்டாத காலமாக பௌதிகத்துடன் இருக்கும் நம் தொடர்பு தான். ஆக நாம் இந்த ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபித்தால், இந்த அழுக்கு நீக்கப்படும். உடனடியாக இல்லாவிட்டாலும், அதன் சுத்திகரிப்பு குறைந்தபட்சம் ஆரம்பம் ஆகிவிடும். பிறகு உள்ளம் எனும் கண்ணாடி, முழுமையாக சுத்திகரிக்கப்பட்டவுடன், ஒருவரால் தன் முகத்தை, அவன் யார் என்பதை, பார்க்கமுடிகிறது. அந்த முகம் என்பது ஒருவனின் உண்மையான அடையாளத்தை குறிக்கிறது. ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம், தாம் இந்த உடல் இல்லை என்பதை ஒருவன் புரிந்துகொள்கிறான். நமது இந்த கருத்து தவறானது. இந்த அழுக்கு என்பது நம் தவறான கருத்தை குறிக்கிறது, அதாவது உடல் அல்லது மனதுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது. உண்மையில், நாம் இந்த உடலோ மனமோ அல்ல. நாம் ஆத்மா. நாம் இந்த உடல்கள் அல்ல என்பதை புரிந்துகொண்டவுடன், பவ-மஹா-தாவாக்னி-நிர்வாபணம். பௌதிக துன்பங்கள் எனும் தீவிரமான நெருப்பு, உடனேயே தணிந்து விடும். அதன் பிறகு துயரங்கள் இருக்காது. ஆஹம் ப்ரஹ்மாஸ்மி. பகவத் கீதையில் கூறியது படி, பிரம்ம-பூத ப்ரஸன்னாத்மா. உடனேயே தன் உண்மையான ஆன்மீக அடையாளத்தை புரிந்துகொள்வதால் மகிழ்ச்சி அடைகிறான். தற்போது நாம் மகிழ்ச்சியாக இல்லை. பௌதீகத்துடன் தொடர்பு கொள்வதால் நாம் எப்பொழுதும் கவலைகளால் சூழப்பட்டிருக்கிறோம். ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபிப்பதின் மூலம், நம்மால் தாமதமின்றி மகிழ்ச்சியான நிலைக்கு வரமுடியும். பவ-மஹா-தாவாக்னி-நிர்வாபணம். இதுதான் மோக்ஷம் என்றழைக்கப்படுகிறது. எல்லா கவலைகளிலிருந்தும் விடுபட்டு, ஒருவர் மகிழ்ச்சியை அடையும் நிலைக்கு தான் மோக்ஷம் எனப் பெயர். ஏனெனில், ஒவ்வொரு உயிரினத்தில் இருக்கும் ஆன்மாவும் இயல்பான நிலையில் மகிழ்ச்சியாக இருக்கும். மொத்தத்தில் உயிர்வாழ்வதற்கான போராட்டத்திற்கு பிரயோஜனமே அந்த மகிழ்ச்சியான நிலையை அடைவது தான், ஆனால் மனிதன், மையத் தத்துவத்தையே தவறி விடுகிறான். எனவே மகிழ்ச்சியான வாழ்க்கையை அடைவதற்கான ஒவ்வொரு முயற்சியிலும் நாம் தோல்வி அடைகின்றோம். தொடர்ந்து கிடைக்கும் இந்த தோல்வியை, ஹரே கிருஷ்ண மந்திரத்தின் உச்சரிப்பால் வெல்ல முடியும். அதுவே இந்த தெய்வீக உச்சாடனத்தின் புலனாகும். மோக்ஷத்திற்கு பிறகு, ஆனந்த நிலையை அடைந்த பிறகு, பௌதீக சுகங்களுக்கான ஆசை குறைந்துவிடும். சுயநலனை எண்ணி சுகமனுபவிப்பது குறைந்துவிடும். உதாரணமாக, உண்பதை எடுத்துக்கொள்ளுங்கள். நல்ல சாப்பாடு சாப்பிட ஆசை இருந்தால், சில கைப்பிடிகளை சாப்பிட்டு வயிறு நிறைந்த பிறகு எதையும் சாப்பிட விருப்பம் இருப்பதில்லை. அதாவது இங்கு இந்த பௌதிக உலகில், நாம் சகங்களை பெற பெற, அதில் இருக்கும் இன்பம் குறையத் தான் செய்யும். ஆனால் ஆன்மீக இன்பம் என்பது, பகவான் சைதன்யர் கூறுகிறார், ஆனந்தாம்புதி-வர்தனம், ஆன்மீக இன்பம் என்பது ஒரு பெருங்கடலைப் போல் தான். ஆனால் இங்கு இந்த பௌதிக உலகில் அந்த கடல் பெருகுவதில்லை. நமக்கு அந்த அனுபவம் இருக்கிறது. அந்த பெருங்கடல் ஒருபோதும் அளவு மீறுவதில்லை. ஆனால் ஆன்மீக இன்பம் எனும் பெருங்கடல் பெருகும். ஆனந்தாம்புதி-வர்தனம். ஷ்ரேய:-கைரவ-சந்த்ரிகா-விதரணம். அது எப்படி பெருகுகிறது? அவர் வளரும் நிலவை உதாரணமாக காட்டுகிறார். வளரும் நிலவைப் போல் தான். பிரதமை அன்று, அதாவது ஒன்றாம் பிறை அன்று அது ஒரு சிறிய பிறை போல் இருக்கும். ஆனால், இரண்டாம் பிறை, மூன்றாம் பிறை என்று படிப்படியாக அது மலர்கிறது. அதுபோலவே, ஆன்மீக வாழ்க்கையிலுள்ள இன்பமும், நிலவின் பிறையைப் போல் முழு நிலவுவரை ஒவ்வொரு நாளும் வளர்கிறது, ஆம். ஆக சேதோ-தர்பண-மார்ஜனம் பவ-மஹா-தாவாக்னி-நிர்வாபணம், ஷ்ரேய:-கைரவ-சந்த்ரிகா-விதரணம் வித்யா-வது-ஜீவனம். பிறகு வாழ்க்கை, ஞானம் நிறைந்ததாக இருக்கும் ஏனென்றால் ஆன்மீக வாழ்க்கை என்றால் முடிவற்ற, பரவசம் நிரம்பிய, கல்வி நிரம்பிய வாழ்க்கை. ஆக நம் அறிவு பெருக பெருக, நம் இன்பமும் சரிசமமாக பெருகும். ஷ்ரேயஹ-கைரவ-சந்த்ரிகா-விதரணம் வித்யா-வது-ஜீவனம், ஆனந்தாம்புதி-வர்தனம். அது ஒரு பெருங்கடலை போல்தான், அப்படி இருந்தும் அது பெருகுகிறது. ஆனந்தாம்புதி-வர்தனம், ஸர்வாத்ம-ஸ்னபனம். அதன் சிறப்பு என்னவென்றால், ஒருமுறை வாழ்க்கையின் இந்த நிலைக்கு வந்தவுடன், "நான் முழுமையாக திருப்தி அடைந்தேன்." என ஒருவரால் உணரமுடிகிறது. ஸர்வாத்ம-ஸ்னபனம். தண்ணீரில் முங்கி எழுந்தவுடன் ஒருவரால் புத்துணர்ச்சியை உணரமுடிகிறது. அப்படித் தான். அதுபோலவே, இந்த ஆன்மீக வாழ்க்கையில், ஒவ்வொரு நாளும் இன்பம் பெருக பெருக, ஒருவனுக்கு, முழுமையாக திருப்தி பெற்றோம் என்ற உணர்வை அளிக்கிறது.