TA/Prabhupada 0233 - குருவினுடையவும் கிருஷ்ணரின் கருணையாலும் தான் நமக்கு கிருஷ்ணர் உணர்வு கிடைத்தது

Revision as of 18:45, 29 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.4-5 -- London, August 5, 1973

ஆக, கிருஷ்ணருக்கும் எதிரிகள் இருக்கிறார்கள். அவர்களை அவர் வதம் செய்வார். கிருஷ்ணருக்கு இரண்டு காரியங்கள் உள்ளன: பரித்ராணாய ஸாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதாம் (பகவத் கீதை 4.8). கயவர்கள்... அவர்கள் எல்லோரும் கயவர்கள். கிருஷ்ணருக்கு சவால் விடும் அரக்கர்கள், கிருஷ்ணருடன் பகை உணர்வுடன் போட்டியிட விரும்புவர்கள், கிருஷ்ணரின் சொத்தை அபகரிக்க ஆசைப்படுபவர்கள், அவர்கள் அனைவரும் கிருஷ்ணரின் எதிரிகள், மற்றும் அவர்கள் வதம் செய்யப்படுவார்கள். பொதுவாக கொலை என்பது தவறாக இருந்தாலும், இங்கு எதிரிகளை கொல்லும் இந்த செயல் தவறல்ல. அடுத்து எழும்பும் கேள்வி என்னவென்றால், "சரி, எதிரிகளை வதம் செய்யலாம், ஒப்புக் கொள்கிறேன். ஆனால் எனது குருவை வதம் செய்யுமாறு அறிவுறுத்துவது சரி தானா?" குரூன் ஹத்வா. ஆனால் கிருஷ்ணருக்காக, அதற்கு தேவைப்பட்டால், நீங்கள் உங்கள் குருவையும் கொன்று தான் ஆக வேண்டும். அது தான் தத்துவம். அனைத்துமே கிருஷ்ணருக்காக. கிருஷ்ணர் விரும்பினால் உங்களால் மறுக்க... நீங்கள் உங்கள் குருவை வதம் செய்ய வேண்டும் என்று கிருஷ்ணர் விரும்பினால், நீங்கள் அதைச் செய்தே ஆக வேண்டும். அது தான் கிருஷ்ண பக்தி. சாதாரணமாக கிருஷ்ணர் உங்கள் குருவை ஒருபோதும் வதம் செய்ய சொல்ல மாட்டார். ஏனென்றால் குருவும் கிருஷ்ணரும் ஒன்றே. குரு-கிருஷ்ண-க்ருபயா (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 19.151). குருவின் கருணையினாலும், கிருஷ்ணரின் கருணையினாலும் தான் நமக்குக் கிருஷ்ண பக்தி கிடைக்கிறது. ஆக உண்மையான குருவை ஒருபோதும் வதம் செய்யக்கூடாது, ஆனால் தன்னை குரு என்று சொல்லி ஏமாற்றும் குருவை அழித்து தான் ஆகவேண்டும். வெறும் வெளித்தோற்றத்தில் குரு என்று அழைக்கப்படுபவர், போலி குரு, வதம் செய்யப்பட வேண்டும். பிரகலாத மகாராஜரைப் போல் தான். நரசிம்மதேவர் பிரகலாதரின் கண்முன் அவருடைய தந்தையை வதம் செய்துக் கொண்டிருந்தார். தந்தையும் ஒரு குரு தான். ஸர்வ தேவமயோ குருஹு (ஸ்ரீமத் பாகவதம் 11.17.27). குறைந்தபட்சம் பௌதிக அளவில் அவரும் ஒரு குரு தான். அப்போது பிரகலாத மகாராஜர் தன் குருவான தந்தையை எவ்வாறு வதம் செய்ய அனுமதித்தார்? ஹிரணியகசிபு, பிரகலாதரின் தந்தை என்பது நம் எல்லோருக்கும் தெரியும். உங்கள் தந்தையை யாராவது வதம் செய்ய முயன்றால், நீங்கள் அதை வேடிக்கை பார்க்க விரும்புவீர்களா? நீங்கள் அதை எதிர்க்க மாட்டீர்களா என்ன? வேடிக்கை பார்ப்பது தான் உங்கள் கடமையா? அதுவல்ல உங்கள் கடமை. உங்கள் தந்தை தாக்கப்படும் போது நீங்கள் எதிர்க்கவேண்டும். உங்களால் எதிர்க்க முடியாவிட்டாலும், போராடி உங்கள் உயிரை விட வேண்டும்: "என் தந்தையை கொல்ல அனுமதிக்கமாட்டேன்," என்று நினைப்பதே ஒரு மகனின் கடமை. ஆனால் பிரகலாதர் அவ்வாறு எதிர்க்கவில்லை. பகவானின் பரம பக்தரான அவர், தனது தந்தையை மன்னித்து விடுமாறு வேண்டியிருக்கலாம். ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லை. "அழிவது என் தந்தை அல்ல. என் தந்தையின் உடல் மட்டுமே," என்பது அவருக்கு தெரியும். ஆனால் அவர் தன் தந்தைக்காக வேறுவிதமாக வேண்டினார். முதல் விஷயம் என்னவென்றால், நரசிம்மதேவர் கோபமாக இருந்தபோது ஹிரணியகசிபுவின் உடலைத் தான் வதம் செய்துக்கொண்டிருந்தார். "என் தந்தை அந்த உடல் அல்ல. எனது தந்தை ஒரு ஆன்மா." என்கிற உண்மை பிரகலாதருக்கு தெரியும். எனவே, "பகவான் அந்த உடலை வதம் செய்து திருப்தி அடையட்டும். நான் என் உண்மையான தந்தையை அதன்பிறகு காப்பாற்றுகிறேன்," என்று அவர் எண்ணினார்.