TA/Prabhupada 0232 - கடவுளுக்கு கூட பொறாமை குணம் கொண்ட எதிரிகள் உள்ளனர்.. அவர்களை அரக்கர்கள்என்று கூறுவோம்



Lecture on BG 2.4-5 -- London, August 5, 1973

பிரத்யும்னன்: "மகாத்மாக்களான எனது ஆச்சாரியர்களின் இரத்தத்தைச் சிந்தி நான் வாழ்வதை விட, இவ்வுலகில் பிச்சையெடுத்து வாழ்வதே மேல். அவர்கள் பேராசை பிடித்தவர்களாக இருந்தாலும், அவர்கள் என் பெரியோர்கள். அவர்கள் கொல்லப்பட்டால், நாம் அனுபவிப்பது அனைத்தும் அவர்கள் இரத்தத்தால் களங்கம் அடைந்திருக்கும்." பிரபுபாதர்: தன் குடும்பத்தினர்களையே எப்படி கொல்வது என்பது தான் அர்ஜீனரின் முதல் பிரச்சினை. நண்பர் என்ற முறையில் கிருஷ்ணர் அவரை கண்டித்தார், "நீ இவ்வளவு பலவீனமாக இருப்பதற்கு காரணம் என்ன? பலவீனம் அடையாதே. நீ உணர்ச்சி வசப்படுகிறாய். இப்படிப்பட்ட இரக்கம் வெறும் உணர்ச்சி வசப்பட்டு ஏற்பட்ட இரக்கம். உத்திஷ்ட. நீ எழுந்து போராடினால் தான் நல்லது." பொதுவாக நாம் ஒன்றை செய்ய வேண்டாம் என்று நினைத்தால் நிறைய சாக்குகளை சொல்வோம். புரிகிறதா? அப்படி அவர் அடுத்ததாக தன் ஆசிரியர்களை குறிக்கிறார்: "உண்மை தான் கிருஷ்ணா. என் உறவினர்களை பற்றி பேசுகிறாய். அது என் பலவீனம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் என் குருவை நான் கொல்ல வேண்டும் என்று எவ்வாறு எனக்கு அறிவுறுத்துகிறாய்? துரோணாச்சார்யார் என் குரு. பீஷ்மரும் என் குரு. என் குருதேவரை நான் கொல்ல வேண்டும் என்கிறாயா? குரூன் ஹி ஹத்வா. சாதாரண குரு அல்ல. இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. மஹானுபாவான். பீஷ்மர் ஒரு சிறந்த பக்தர். அதுபோலவே துரோணாச்சாரியாரும் பெரிய மகான். மஹானுபாவான். கதம் பீஷ்மம் அஹம் ஸாங்க்யே த்ரோணம் ச மதுஸூதன (பகவத் கீதை 2.4). "இவர்கள் என் குருக்கள் மட்டுமல்ல. இவர்கள் இருவரும் மகான்கள்." கிருஷ்ணர், மதுசூதனா என்று அழைக்கப்படுகிறார். மதுசூதனன் என்றால்... மது என்பவன் ஒரு அரக்கன், கிருஷ்ணரை எதிரியாக பார்த்தான். கிருஷ்ணர் அவனை வதம் செய்தார். "நீ மதுசூதனன், நீ எதிரிகளை கொன்றிருக்கிறாய். உனது குருவை நீ கொன்றதாக ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? "பிறகு எதற்காக என்னை இதை செய்ய சொல்கிறாய்?" . இது தான் இந்த பதத்தின் பொருள். இஷுபிஹி ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவ் அரி-சூதன. இங்கேயும் அரி-சூதன. அரி என்றால் எதிரி. மதுசூதன, அதாவது குறிப்பாக மது என்ற அரக்கனை வதம் செய்தவர். அடுத்தது அரி-ஸுதன. அரி என்றால் எதிரி. கிருஷ்ணர், எதிரியாக வந்த பல அரக்கர்களை வதம் செய்திருக்கிறார். எனவே அவருக்கு அரி-சூதன என்ப் பெயர். ஆக கிருஷ்ணருக்கும் எதிரிகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் நம்மைப்பற்றி என்ன சொல்வது. இந்த ஜட உலகமே அப்படித்தான். அனைவருக்கும் யாரோ சில எதிரிகள் இருப்பார்கள். மத்ஸரதா. மத்ஸரதா என்றால் பொறாமை. இந்த ஜட உலகம் அப்படித்தான். ஆக கடவுளைப் பார்த்து பொறாமை படும் எதிரிகளும் இருக்கிறார்கள். அவர்களை தான் அரக்கர்கள் என்று அழைக்கிறோம். பொதுவான ஒரு பொறாமையோ பகையோ இயல்பான விஷயம் தான். ஆனால் சிலர் கடவுளையே பார்த்து பொறாமை படுவார்கள். நேற்று இரவு என்னை சந்திக்க ஒருவர் வந்திருந்தார். அவர் என்னிடம் வாதம் செய்தார், "ஏன் கிருஷ்ணரை கடவுளாக ஏற்றுக்கொள்ள வேண்டும்?". அது அவர் செய்த வாதம். எனவே கிருஷ்ணருக்கும் எதிரிகள் இருக்கிறார்கள். அவர் மட்டும் அல்ல. இந்த பௌதிக உலகில் வாழும் அனைவருமே வாஸ்தவத்தில் கிருஷ்ணருக்கு எதிரி தான். அனைவருமே! ஏனென்றால் அவர்கள் கிருஷ்ணரை தனக்கு போட்டியாக கருதுகிறார்கள். கிருஷ்ணர் கூறுகிறார், போக்தாரம்: நானே மீஉயர்ந்த அனுபவிப்பாளன். ஸர்வ-லோக-மஹேஷ்வரம்: (பகவத் கீதை 5.29) "அனைத்தும் எனக்கே சொந்தம்." வேதங்களும் இதைத் தான் உறுதி செய்கின்றன , ஈஷாவஸ்யம் இதம் ஸர்வம் (ஈஷோபநிஷத் 1). அனைத்துமே கடவுளுக்கே சொந்தமானது. ஸர்வம் கலு இதம் ப்ரஹ்ம. இதுதான் வேத ஞானம். யதோ வா இமானி பூதானி ஜாயந்தே: "யாரிடத்திலிருந்து அனைத்தும் வந்ததோ." ஜன்மாதி அஸ்ய யதஹ (ஸ்ரீமத் பாகவதம் 1.1.1) இதுதான் வேத ஞானம். அப்படி இருந்தும் நமக்குள் பகை இருப்பதால், "கிருஷ்ணர் எப்படி அனைத்திற்கும் அதிபதி ஆக முடியும்? நான் தான் உரிமையாளன். "கிருஷ்ணர் மட்டும் எப்படி ஒரே கடவுளாக இருக்க முடியும். எனக்கு இன்னொரு கடவுள் இருக்கிறார். இதோ அந்த இன்னொரு கடவுள்." என்று வாதம் செய்கிறோம்.