TA/Prabhupada 0007 - கிருஷ்ணருடைய பராமரிப்பு நிச்சயமாக வரும்



Lecture on SB 1.5.22 -- Vrndavana, August 3, 1974

பிரமானந்தன்: பிராம்மணனானவன் யாரிடமும் சம்பளம் வாங்கி வேலை பார்க்கக் கூடாது.

பிரபுபாதர்: கூடாது. அவர் பட்டினியால் உயிரை விட்டாலும் விடுவாரே ஒழிய சம்பளத்திற்காக ஊழியம் செய்ய மாட்டார். அது தான் பிராம்மணன். ஷத்திரியனும் வைஷ்யனும் கூட அவ்வாறே தான். சூத்திரன் மட்டும்தான்... ஒரு வைஷ்யன் ஏதாவது ஒரு வியாபாரத்தை தேடிக் கொள்வான். அவன் ஏதாவது ஒரு தொழிலை தேடிக் கொள்வான். எடுத்துக்காட்டாக நிஜமான சம்பவமே ஒன்று இருக்கிறது. பல ஆண்டுகளுக்குமுன் கல்கத்தாவில் திரு நந்தி என்றொருவர் இருந்தார், அவர் தன் நன்பர்கள் சிலரிடம் சென்று "எனக்கு கொஞ்சம் மூலதனம் கொடுக்க முடிந்தால், நான் ஏதாவது ஒரு தொழில் ஆரம்பிக்க முடியும்." என கேட்டார். அந்த நண்பன் கேட்டான், "நீங்கள் ஒரு வைஷ்யர் தானே? வணிகம் செய்பவர் தானே?" "ஆம்." "ஓ, பிறகு என்னிடம் வந்து பணம் கேட்கிறீர்கள்? பணம் தெருவில் கிடக்கிறது. நீங்கள் தேடி பாருங்கள்." அதற்கு அவர் சொன்னார், "எனக்கு எதுவும் தெரியவில்லையே." "உங்களுக்கு தென்படவில்லையா? அது என்ன அங்கே?" "அது இறந்துபோன ஒரு எலி." "அதுதான் உங்களுடைய மூலதனம்." பாருங்கள். அந்த நாட்களில் கல்கத்தாவில் பிளேக்நோய் பரவி இருந்தது. எனவே இறந்த எலிகளை நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைப்பவருக்கு இரண்டு அணாக்கள் அளிக்கப்படும் என நகராட்சி அறிவித்திருந்தது. அதனால் அவர் இறந்துபோன எலியை நகராட்சி அலுவலகத்திற்கு எடுத்து சென்றார். அவருக்கு இரண்டு அணாக்கள் கொடுக்கப்பட்டன. அந்த இரண்டு அணாவை வைத்து வாடிப்போன கொஞ்சம் வெற்றிலையும் பாக்கும் வாங்கி, அதை நன்றாக கழுவி, நான்கு, ஐந்து அணாவுக்கு விற்றார். இப்படியே மறுபடியும் மறுபடியும் செய்து நாளடைவில் அவர் ஒரு பணக்காரர் ஆனார். அவர்களுடைய குடும்பத்தினர் ஒருவர் எங்களுடைய ஞான-சகோதரராக (ஒரே குருவின் சக சீடர்) இருந்தார். நந்தி குடும்பத்தினர். அந்த நந்தி குடும்பத்தினர், இன்னமும் நானூறு, ஐநூறு நபர்களுக்கு உணவளித்து வருகிறார்கள். ஒரு பெரிய, செல்வாக்குள்ள குடும்பம். அவர்கள் குடும்பத்தின் அதிகார கட்டளை என்னவென்றால், ஒரு பெண் அல்லது ஆண் குழந்தை பிறந்தவுடன், ஐயாயிரம் ரூபாய் வங்கியில் போட்டு வைக்க வேண்டும். பிறகு அவர் திருமணத்தின் போது அந்த ஐயாயிரம் ரூபாயை வட்டியுடன் அவர் பெற்றுக் கொள்ளலாம். இல்லையென்றால், மூலதனத்தில் வேறு பங்கு இருக்காது. இந்த குடும்பத்தில் வாழும் எல்லோருக்கும், இருப்பிடமும் உணவும் கிடைக்கிறது. இது அவர்களுடைய... ஆனால் தொடக்கத்தில், அதாவது குடும்பத்தை நிலைநாட்டிய திரு நந்தி, அவருடைய இந்த தொழிலை, இறந்து அழுகிப்போன எலியை வைத்து தொடங்கினார். அது வாஸ்தவத்தில் நிகழ்ந்த ஒரு உண்மை, அதாவது ஒருவர் சுதந்திரமாக வாழ விரும்பினால்... கல்கத்தாவில் நான் பார்த்திருக்கிறேன். ஏழ்மை நிலையில் இருக்கும் வைஷ்யர்கள் கூட, காலையில் சிறிதளவு பருப்பை, பையில் எடுத்துக்கொண்டு வீடு வீடாக செல்வார்கள். பருப்பு எல்லா இடங்களிலும் தேவைப்படும். காலையில் பருப்பும், மாலையில் ஒரு தகரக் குவளையில் மண்ணெண்ணெய்யும் எடுத்துக் கொண்டு வியாபாரம் செய்வார்கள். ஏனென்றால் மாலையில் எல்லோருக்கும் அது தேவைப்படும். இப்பொழுதும் கூட இந்தியாவில் நீங்கள் காணலாம், அவர்கள்... யாரும் வேலை தேட முயற்சி செய்ய மாட்டார்கள். தன்னிடம் எது இருக்கிறதோ, வேர்க்கடலையோ பட்டாணியோ விற்று பிழைப்பான். ஏதோ தொழில் செய்து கொண்டிருப்பான். எப்படி இருந்தாலும் கிருஷ்ணர் அல்லவா எல்லோருக்கும் பராமரிப்பு அளிக்கின்றார். "இந்த மனிதர் தான் என்னைப் பராமரிக்கிறார்," என நினைப்பது தவறு. இல்லை. சாஸ்திரம் கூறுவது என்னவென்றால், 'ஏகொ பஹுனாம் விததாதி காமான்'. கிருஷ்ணரிடம் இருக்கும் உறுதியான நம்பிக்கை இது. அதாவது "எனக்கு உயிரை கொடுத்து இங்கு அனுப்பியவர் கிருஷ்ணர் தான். அதனால் பராமரிப்பும் அவரே அளிப்பார். அதனால் என்னால் எது முடிகிறதோ அதை செய்கிறேன், அதன் மூலமாக கிருஷ்ணரின் பராமரிப்பு நிச்சயமாக வரும்."