TA/Prabhupada 0027 - மறுபிறவி என்று ஒன்று இருப்பதை அவர்கள் அறியமாட்டார்கள்



Lecture on CC Adi-lila 7.1 -- Atlanta, March 1, 1975

ஆகையால் (படித்துக்கொண்டே:) பௌதிக வாழ்க்கையின் கட்டுண்ட நிலையில் இருக்கும் ஒருவன் கையாலாகாத நிலையில் இருக்கிறான். ஆனால் கட்டுண்ட ஆத்மா, மாயையின் அதாவது வெளிப்புற சக்தியின் மயக்கத்தில், தான் தன்னுடைய நாடு, சமுதாயம், நட்பு, அன்பு ஆகியவற்றின் முழுமையான பாதுகாப்பில் இருப்பதாக நினைக்கிறான். மரணம் நெருங்கும் நேரத்தில் இதில் எதுவும் அவனைக் காப்பாற்ற முடியாது என்பதை அவன் அறிவதில்லை." இதைத்தான் மாயை என்கிறோம். ஆனால் அவன் நம்புவதில்லை. மாயையின் மயக்கத்தில், காப்பாற்றுதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன, என்பதை கூட நம்புவதில்லை. காப்பாற்றுதல். காப்பாற்றிக் கொள்வது என்றால் தம்மை மீண்டும் மீண்டும் நிகழும், பிறப்பு இறப்பு என்ற சுழற்சியிலிருந்து காப்பாற்றிக்கொள்வது. அதுதான் உண்மையான காப்பாற்றுதல். ஆனால் அது அவர்களுக்குத் தெரியாது. (படித்துக்கொண்டு:) "பௌதிக இயற்கையின் சட்டங்கள் மிகவும் பலம் வாய்ந்தவை. நாம் சொந்தம் கொண்டாடும் எந்த பௌதிக விஷயமும் நம்மை இறப்பின் கொடூரமான பிடியிலிருந்து காப்பாற்ற முடியாது." எல்லோருக்கும் இது தெரியும். அதுதான் நம்முடைய உண்மையான பிரச்சனை. யாருக்குத்தான் மரண பயம் இல்லை? எல்லோருக்கும் மரணம் என்றால் பயம். ஏன்? ஏனென்றால் எந்த உயிர்வாழியும், மரணம் அவன் இயல்பு அல்ல. அவன் நித்தியமானவன்; ஆகையினால், பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய், இவையை அவன் தொந்தரவாக உணருகிறான். ஏனென்றால் அவன் நித்தியமானவன், அவன் பிறப்பு எடுப்பதில்லை, ந ஜாயதெ, மற்றும் பிறவி எடுக்காத ஒருவனுக்கு மரணமும் இருப்பதில்லை, ந ம்ரியதெ கதாசித். (பகவத் கீதை 2.20) இதுதான் நம்முடைய உண்மையான நிலை. எனவே தான் நாம் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறோம். அதுதான் நம்முடைய இயல்பான நிலை. ஆகையால் நம்மை மரணத்திலிருந்து காப்பது... அதுவே மனித நேயத்தின் முதல் கடமை. இதற்காகத்தான் நாங்கள் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தைக் கற்றுக் கொடுக்கின்றோம். அதுவே எல்லோருடைய நோக்கமாக இருக்க வேண்டும். அதுதான் சாஸ்திரங்களின் கற்றல். பராமரிப்பவர்களாக இருப்பவர்கள்... அரசாங்கம், தந்தை, ஆசிரியர், அவர்கள் பிள்ளைகளைப் பராமரிப்பவர்கள். அவர்களுக்கு இது தெரிந்திருக்க வேண்டும், எப்படி பாதுகாப்பு அளிப்பது, இந்த உலகத்தின்... ந மொசயேத் யஹ சமுபெத ம்ருத்யும். (ஶ்ரீமத் பாகவதம் 5.5.18). ஆனால் இந்த உலகில் எங்காவது இத்தகைய தத்துவ அறிவு இருக்கிறதா? அப்படிப்பட்ட தத்துவ அறிவே கிடையாது. கிருஷ்ண பக்தி இயக்கம் ஒன்று மட்டும்தான் இந்த தத்துவ போதனையை முன்வைத்திருக்கிறது, தான்தோன்றித்தனமாக அல்ல ஆனால் அங்கீகரிக்கப்பட்ட சாஸ்திரம், வேத இலக்கியம், அதிகாரிகளின் (ஆன்றோர்களின்) அடிப்படையில். ஆக அதுதான் எங்கள் வேண்டுகோள். மனித சமூகத்தின் பயனுக்காக நாங்கள் பல மையங்களை உலகின் பல பகுதிகளிலும் நிறுவிக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் வாழ்க்கையின் குறிக்கோள் அவர்களுக்குத் தெரியாது, இறப்பிற்குப்பின் மற்றொரு வாழ்க்கை இருக்கிறது என்பதும் அவர்களுக்கு தெரியாது. இந்த விஷயம் எல்லாம் அவர்களுக்குத் தெரியாது. சந்தேகமின்றி மறுபிறவி இருக்கிறது, மேலும் அந்த அடுத்த பிறவயை அமைத்துக்கொள்ள, இந்த பிறவியிலேயே நீங்கள் முன்னேற்பாடுகள் செய்து கொள்ளலாம். இதைவிட அதிகமான சுகங்களை, பௌதிக சுகங்களை அனுபவிப்பதற்கு, சிறந்த மேல்நிலை கிரகங்களுக்கு, செல்லலாம். அல்லது இங்கேயே பாதுகாப்பான நிலையில் இருக்கலாம். பாதுகாப்பு என்றால் இந்த பௌதிக வாழ்க்கையின் அடிப்படையில். எப்படி என்றால், யாந்தி தேவவ்ரதா தேவான்பித்ருன் யாந்தி பித்ருவ்ரதா: பூதானி யாந்தி பூதேஜ்யா மத்யாஜினோ 'பி யாந்தி மாம் (பகவத் கீதை 9.25) ஆக சொர்க்க லோகத்தில் ஒரு வசதியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவோ, அல்லது இதே உலகில் ஒரு மேம்பட்ட சமுதாயத்தில் வாழவோ, அல்லது ஆவிகளும் மற்ற பாவிகளும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் லோகங்களுக்குச் செல்லவோ, தாங்கள் தம்மை தயார் செய்து கொள்ளலாம் அல்லது நீங்கள் கிருஷ்ணர் இருக்கும் லோகத்திற்குச் செல்லலாம். நீங்கள் எதைவேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். யாந்தி பூதேஜ்யா பூதானி மத்யாஜினோ 'பி யாந்தி மாம். வெறும் நீங்கள் உங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டியது தான். எப்படி இளமையில் அவர்கள் கற்பிக்கப்படுகிறார்கள் - ஒருவர் எஞ்ஜினியர் ஆகப்போகிறார், ஒருவர் மருத்துவராகப் போகிறார், ஒருவர் வக்கீலாகப் போகிறார், இப்படி பற்பல தொழில் அறிஞர்கள் - அவர்கள் கல்வியின் மூலம் தயார்படுத்திக் கொள்கிறார்கள், அதேபோல், நீங்கள் உங்களுடைய அடுத்த பிறவிக்கு தயார் படுத்திக் கொள்ளலாம். இதை சுலபமாக புரிந்துக் கொள்ளலாம். இது மிக சுலபமான போது அறிவாக இருந்தாலும், அவர்களுக்கு மறுபிறவி என்பதில் நம்பிக்கை இல்லை. உண்மையிலேயே மறுபிறவி என்பது உண்டு ஏனென்றால் கிருஷ்ணர் சொல்கிறார் அத்துடன் சிறிதளவு புத்தியை பயன்படுத்தி, மறுபிறவி இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆகையால் எங்கள் செயர்குறிப்பு என்னவென்றால், "நீங்கள் தம்மை மறுபிறவிக்குத் தயார் படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில், இறைவனின் திருநாட்டிற்கே திரும்பிச் செல்வதற்கான தயாரிப்பில் இரங்கவேண்டியது தானே?" இதுதான் எங்கள் முன்மொழிவு.